ஜி-7 நாட்டுத் தலைவர்கள் 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் வணிக மற்றும் சமூக நடவடிக்கைகளை சீர் குலைத்துள்ளதுடன், நிதிச் சந்தைகளிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயை பற்றி கலந்துரையாடுவதற்காக ஜி-7 நாட்டுத் தலைவர்களின் கலந்துரையாடல் நேற்றைய தினம் காணொளியூடாக இடம்பெற்றது. 

இதன்போதே ஜி-7 நாட்டுத் தலைவர்கள் ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தம்மாலான அனைத்து வித ஒத்துழைப்புகளையும் தருவதாக தன்னிடம் கூறியதாக ஜப்பான் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த காணொளிக் கலந்துரையாடலில் கொரோனவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க அழைப்பு விடுத்தாகவும்,கடுமையான பொருளாதார தாக்கத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்க உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டதாகவும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேலும் கூறினார்.

ஜப்பான் அரசாங்கம் பல வாரங்களாக ஒலிம்பிக்கை இரத்து செய்வதற்கான அழுத்தங்களை எதிர்கொண்டது. எனினும் ஒலிம்பிக்கை நடத்துவற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதனிடையே கடந்த வாரம், டோக்கியோ ஆளுநர் ஒலிம்பிக்கை இரத்து செய்வது நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்றும் கூறினார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 24 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN, Reuters