ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கும் ஒலுவில் துறைமுகத்தின் உருவாக்கத்;தினால் கடலரிப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் கடந்த 2016 ஆண்டில்  இருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் செயற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று(15.03.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகள் சகிதம் நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் அதனை அண்டிய பிரதேசங்களில் பாரிய கடல்; அரிப்பு ஏற்படுவதாக பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் சீரான பராமரிப்பு இன்றிய நிலையில் செய்பாடுகள் நிறுத்தப்பட்டமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

இதனால் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னதாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பிரதேசங்களில் ஒன்றான நிந்தவூர் கடற்கரைப் பகுதிக்கு சென்ற அமைச்சர் நிலமைகளை நேரடியாக அவதானித்தார்.

இதன்போது, நிந்தவூர் பிரதேச கடற்றொழிலாளர்களின் பாவனைக்காக அமைக்கப்பட்ட எரிபொருள் தாங்கி நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் பழுந்தடைந்திருப்பதால் அதனை திருத்தி தருமாறும் கோரிக்ககை முன்வைக்கப்பட்டது.

அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் அவர்கள், ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் செய்து மீன்பிடித் துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் நவீன குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை உட்பட்ட கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.

இதன்போது அங்கு வருகைதந்திருந்த பொது மக்களில் ஒரு பகுதியினர், ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் செயற்பாடாமையினால் சுமார் 20,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளமையை கருத்தில் கொண்டு அதனை உடனடியாக செயற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இன்னொரு பிரிவினர் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் தாங்கள் எதிர்கொண்டுள்ள கடலரிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தந்த பின்னர் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்தனர்.

அனைத்து விதமான கருத்துக்களையும் உள்வாங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,  ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மீள இயக்கினாலும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும குறித்த துறைமுகம் அமைக்கப்பட்டதனால் ஏற்றபட்டதாக தெரிவிக்கப்படும் கடலரிப்பு பிரச்சினை தொடர்ச்சியானதவே இருக்கும்.

எனவே, கடலரிப்பு பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பாக ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறிந்து நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதாகவும் அதேவேளை மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அதுதொடர்பான அறிக்கையை வருகின்ற அமைச்சரவைக்கு முன்னதாக தன்னிடம் ஒப்படைக்குமாறு இலங்கை மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் ஒரு மாத காலப் பகுதிக்குள் மீன்பிடித் துறைமுகத்தின் செய்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது