தேர்தல் காய்ச்சல் பரவத் தொடங்கிய மறுகணமே, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டுள்ளது. இப்போது பாராளுமன்றத் தேர்தல் குறித்தான பரபரப்பை விட கொரோனா பற்றிய அச்சமும் பதற்றமுமே நாட்டு மக்களை கடுமையாக ஆட்கொண்டுள்ளது. தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என கூறப்பட்டாலும், இதே நிலைமைகள் தொடருமாக இருந்தால் வாக்களிப்பு பிற்போடப்படுமோ என்ற சந்தேகமும் எழாமலில்லை.
‘சீனத் தயாரிப்புக்கள் நீண்டகாலம் பாவிக்காதவை’ என்ற பொதுவான அபிப்பிராயம் இருந்தது. ஆனால், இந்த வைரஸ் மட்டும் இரண்டரை மாதங்களாக கண்டங்கள் கடந்து பரவி இன்னும் வீரியத்துடன் இருக்கக் காண்கின்றோம். “கடைசியில் நமது மரணமும் ‘மேட் இன் சைனா’ என்றாகி விடுமோ?” என்ற வினாவுடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நகைச்சுவைக் கருத்துக்களுக்குப் பின்னால் பெரிய சோகமும் உயிர் பயமும் இருப்பதாகவே தெரிகின்றது.
இது வெறும் தொற்றுநோய் மட்டும்தானா அல்லது உயிரியல் யுத்தமா அல்லது அதிகார மற்றும் மருத்துவ வியாபாரத்தின் பரிசோதனைக் குழாயாக இவ்வுலகத்தை யாரோ மாற்றியிருக்கின்றார்களா என்று அடுக்கடுக்காக நிறைய கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த வைரஸ் எதிலிருந்து உருவாகியது என்பதை மிகத் துல்லியமாக கண்டறிய முடியாது. இன்னும் உலகம் தடுமாறிக் கொண்டிருப்பதால் இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறிவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு தாமதிக்கும் ஒவ்வொரு நாளிலும் உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.
120 நாடுகளில் பரவல்
உலகெங்கும் உள்ள 120 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுகின்றது. அதாவது குறைந்தது இந்த நாடுகளில் ஒருவராவது இவ்வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளார் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி இந்த கட்டுரை எழுதப்படும் வரை 134,559 பேர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 4,972 பேர் இந்த நிமிடம் வரை உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் அதிக மரணங்களும் அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி, ஈரான், ஸ்பெயின், தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளும் உள்ளன. ஆகவே, ஆசியாவில் தொடங்கி இலங்கை தொட்டு மேற்குலகம் வரை கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சில நாடுகள் உண்மைத் தரவுகளை மறைக்கப் பார்க்கின்றனர்.
‘பூகோளமயமாக்கலில் உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்டது’ என்பார்கள். உண்மைதான் அந்த வகையில் ஒரு கிராமத்தில் நோய் பரவுவது போல இன்று இத்தொற்று கண்டங்கள் கடந்து பரவக் காண்கின்றோம். பூகோளமயமாக்கலின் ஒரு பக்கவிளைவாகவும் இதை கருதலாம் எனத் தோன்றுகின்றது.
இந்நிலையிலேயே, உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸை ‘பென்டமிக்’ வைரஸாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் அர்த்தம் ‘உலகளவில் பரவும் தன்மையுடையது’ என்பதாகும். கொரோனா அல்லது கொவிட்-19 ரக வைரஸ் தொற்றின் பாரதூரத் தன்மையை உணர்த்துவதாக இது காணப்படுகின்றது.
உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக் கணக்கானோர் உரிய சிகிச்சையால் குணமடைந்திருக்கின்றார்கள் என்பதும், இலங்கையில் அதிர்ஷ்டவசமாக மரணங்களோ அதிகப்படியான நோயாளர்களோ பதிவாக வில்லை என்பதுமே இலங்கையர் என்ற வகையில் நமக்கிருக்கின்ற ஒரேயொரு ஆறுதலாகும். ஆனால் முறையான முற்தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளிலேயே இந்த ஆறுதல் நிலைத்திருக்குமா இல்லையா என்ற விடயம் தங்கியுள்ளதெனலாம்.
சமூக விளைவுகள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக நாடுகளில் உயிரிழப்புக்கும் அப்பாலான வேறு பல எதிர்விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றமை கவனிப்பிற்குரியது. உலகில் திடீரென பொருளாதார நடவடிக்கைகளில் ஸ்தம்பிதமும் மந்தமும் ஏற்பட்டிருக்கின்றது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இந்தப் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. பூகோளமயமாக்கல் தொழிற்பாடு கிட்டத்தட்ட முடங்கியுள்ளது என்றும் கூறலாம்.
பெயர் குறிப்பிட்டு சொல்லக் கூடிய பல நாடுகள் முற்றாக விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பாடசாலைகள், வியாபார மையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டுத் தொடர்புகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, மக்கள் மனங்களில் ஒருவித பதற்றமும் பரபரப்பும் நிம்மதியின்மையும் குடிகொண்டுள்ளது. இந்த அறிகுறிகளில் சில இலங்கையிலும் தென்படுகின்றன.
அதுமட்டுமன்றி, ஆரம்பத்தில் ‘மாஸ்க்’ எனப்படும் முகமறைப்புத் துணிக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது பல நாடுகளில் மலசல கூட தாள்கள் தொடக்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகள் மட்டுமன்றி வாகனங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது.
இலங்கையிலும் மக்கள் பொருட்கொள்வனவுக்காக முண்டியடிப்பதைக் காண முடிகின்றது. சீனா போன்ற பெரிய விநியோகச் சந்தைகள் மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையால் சந்தையில் ஏற்பட்ட திடீர் கேள்வியை சமாளிக்க முடியாமல் சிறிய வளர்முக நாடுகளின் உள்நாட்டு சந்தைகள் தடுமாறத் தொடங்கியிருக்கின்றன.
சீனாவின் உற்பத்தி
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாநிலத்தில் 2019 டிசம்பர் கடைசி வாரத்தில் அடையாளம் காணப்பட்டது. அங்கு எல்லா வகையான உயிரினங்களின் இறைச்சிகளையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்பனை செய்யும் மாமிச சந்தையில் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று அனுமானிக்கப் படுகின்றது. ஆனாலும் உறுதியாக எதிலிருந்து தோற்றம் பெற்றது எனத் தெரியாத காரணத்தினாலேயே இன்று வரை உரிய தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாகியிருக்கின்றது.
கொரோனா வைரஸ் என்பது கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த இன்னுமொரு வைரஸாக இனங்காணப்பட்டுள்ளதுடன் ‘கொவிட்-19’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியதுடன், மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவும் ஆற்றல் கொண்டதாக காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
உலக வரலாற்றில் இதற்கு முன்னர் பல வைரஸ், கிருமி அல்லது நோய்த் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் இருக்கின்றார்கள். இலங்கையிலும் இவ்வாறான நோய்கள் முன்னைய காலங்களில் உயிர்ப்பலி எடுத்திருக்கின்றன. குறிப்பாக கொரோனாவுக்கு நெருக்கமான சார்ஸ், கெமல்புளு போன்ற தொற்றுநோய்களுக்கு கடந்த சில வருடங்களுக்குள் உலகம் முகம் கொடுக்க நேரிட்டது.
திட்டமிட்ட நடவடிக்கையா?
இந்தப் பின்னணியில் கொரோனா வைரஸ் பற்றி வேறு சில சந்தேகங்களையும் உலக அவதானிகள் வெளியிட்டு வருகின்றனர். கொரோனா அல்லது கொவிட்-19 என்பது ஒரு வைரஸ் என்பதில் சந்தேகங்கள் எதுவுமில்லை. அதற்கு முறையான முற்தடுப்பும் மருத்துவ சிகிச்சையுமே மருந்து என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், கொரோனா தற்செயலாக பரவியதா அல்லது வேறு உள்நோக்கங்களுக்காக திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதா என்ற கேள்விதான் அவதானிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அதாவது, இயற்கையாக அல்லது தற்செயலாக பரவுகின்ற தொற்றுநோய்கள், கிருமிகள் ஒருபுறமிருக்க, செயற்கையாக பரப்பப்படுகின்ற நோய்களும் உலகில் அதிகரித்துள்ளன. ஒரு நோய்க்கு மருந்து கொடுத்து, அதிலிருந்து இன்னுமொரு நோயை உருவாக்கி அதற்கும் மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்யும் ஒரு மாபியா வர்த்தகம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
மருத்துவம் என்பது எப்போதும் இலாபம் உழைத்துத் தரும் வர்த்தகமாக கருதப்படும் நிலையில், மருந்துகள் உலகெங்கும் விற்பனை செய்வதற்காகவே சில நோய்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக உலக அவதானிகள் கூறக் கேட்டிருக்கின்றோம். எனவே கொவிட்-19 வைரஸும் அவ்வகை சார்ந்த ஒரு முயற்சியா என்ற கேள்வியும் எழுகின்றது.
அதேபோல், முன்னைய காலங்களில் யுத்த தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி பல யுத்தங்கள் இடம்பெற்றன. அதன்பின்னர் அணுவாயுதம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அணுவாயுத மோதல்களை குறிப்பிட்ட சில நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் உயிரியல் யுத்தம் இடம்பெறும் என்ற வகையிலான எதிர்வுகூறல்களை பல வருடங்களாக முன்னரே ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்து வருகின்ற நிலையில், ஆங்காங்கே இவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
அந்த வகையில், கொரோனா வைரஸும் ஒருவகை உயிரியல் ஆயுதம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. சனத்தொகை குறைப்பு, பொருளாதார சீரழிவு மற்றும் வேறு சில உள்நோக்கங்களுக்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே இந்த கொவிட்-19 என ஒரு சில முக்கிய ஆய்வாளர்கள் கூட கூறியிருக்கின்றனர். ஆனால், அதை மறுதலித்து இது இயல்பாகவே உருவான வைரஸ் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
எதிர்வுகூறிய நாவல்
இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். பிரபல அமெரிக்கா எழுத்தாளரான டீன் கூன்ற்ஸ் 1981ஆம் ஆண்டில் எழுதிய ‘தி ஐயிஸ் ஒஃப் டார்க்னஸ்’ (இருட்டின் கண்கள்) என்ற நாவலில் கொரோனா வைரஸ் போன்ற ஒரு வைரஸ் பற்றி குறிப்பிட்டுள்ளமை இப்போது உலக அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் டொம்பே கதாபாத்திரத்தின் மரணத்திற்கான காரணம் ஒருவித வைரஸ் எனவும் அந்த வைரஸ் சீனாவின் வுஹான் மாநிலத்தில் உருவாகியது எனவும் அதன் பெயர் ‘வுஹான்-400’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஏற்படும் அதே நோய் அறிகுறிகளே ‘வுஹான்-400’ இற்கும் ஏற்படும் என சொல்லப்பட்டுள்ளது. வுஹான் மாநிலத்தின் டீ.ஆர்.என்.ஏ. ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய உயிரியல் ஆயுதமான இது உலகெங்கும் பரவி பெரும் அழிவை உண்டுபண்ணும் என்றும் இந்த நாவலில் உரையாடல்கள் தொடர்கின்றன.
அதுமட்டுமன்றி, ‘இந்த தொற்று 2020ஆம் ஆண்டளவில் ஏற்படும்’ என்றும் இதில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. (இந்த பந்தியை மட்டும் இணையப் பிரதியில் காண முடியவில்லை). இதனை வைத்து நோக்கும்போது மேலே குறிப்பிட்ட சந்தேகம் சற்று வலுப்பதை தவிர்க்க முடியாதுள்ளது.
அதாவது, ஒன்றில் இந்த வைரஸ் போன்றதொரு வைரஸ் முன்னைய காலங்களிலும் மக்களை பாதித்துள்ளது. அல்லது, ‘வுஹான் 400’ என்ற வைரஸ் உருமாற்றம் செய்யப்பட்டு அல்லது மீள்பெயரிடப்பட்டு இப்போர் பரப்பப்படுவதாக இருக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் அனுமானங்களும் கணிப்புக்களுமே என்பதை வாசகர்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.
பதற்றம் வேண்டாம்
இதேவேளை, கொரோனா வைரஸ் பற்றி பதற்றமடையத் தேவையில்லை என்றும், இது ஒரு சாதாரண வைரஸ் போன்றதே என்றும், தேவையற்ற விதத்தில் மக்களுக்கு அச்சமூட்டப்படுவதாகவும் துறைசார் செயற்பாட்டாளர்கள் அபிப்பிராயப்படுவதாக தெரிகின்றது. ஆனால், இவ்வளவு வேகத்தில் ஒரு குறிப்பிட்ட வைரஸ் 120 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு பரவுவதும் அது இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராததும் சாதாரணமான விடயமல்ல என்பதுடன், அந்த வைரஸின் வீரியத்தையும் உணர்த்துவதாக இருக்கின்றது.
எனவே, இது உயிரியல் யுத்தமாக இருந்தாலும், மருத்துவ வியாபார யுக்தியாக இருந்தாலும், செயற்கையாக திட்டமிட்டு பரப்பப்படுவதாக இருந்தாலும், பொருளாதார மற்றும் அதிகார மோதலுக்கான கருவியாக 'கொவிட்-19' பயன்படுத்தப்பட்டாலும் அல்லது இதற்குப் பின்னால் வேறு மறைகரங்கள் இருக்கின்றது என்றாலும்….. எது எப்படியிருந்தாலும் இப்போதைக்கு இது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய ஆபத்தான வைரஸ் என்ற அடிப்படையிலேயே நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கை நிலைவரம்
இலங்கையைப் பொறுத்தவரை இதுவரை மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் முதலாமவர் சீனப் பெண் ஆவார். மற்றைய இருவரில் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியும் அவரது உதவியாளரும் ஆவார்கள். இந்தப் பின்னணியில் உள்நாட்டில் 'கொவிட்-19' வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முற்காத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
நாடுகளுக்கிடையிலான விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், வேறு பல நாடுகளிலிருந்து உள்வரும், வெளிச் செல்லும் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா நாடுகளிலிருந்து வந்த நூற்றுக் கணக்கானோர் கந்தக்காடு மற்றும் மட்டக்களப்பு புனாணையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அரச பாடசாலைகளுக்கும் தனியார் வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மதப் பாடசாலைகளையும் இஸ்லாமிய மார்க்க போதனை மையங்களையும் தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் விஷேட கொரோனா தடுப்புப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தென்னிலங்கையில் நோய்த்தடுப்பு முகாம்களை அமைக்கும் திட்டத்தை கைவிட்ட அரசாங்கமானது மட்டக்களப்பிற்கும் பொலன்னறுவைக்கும் முகாம்களை கொண்டு வந்தமை எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன, உண்மையில், பெரும் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகத்தை அதற்காக பயன்படுத்தாமல் சனசஞ்சாரம் குறைவான ஒரு இடத்தை அரசாங்கம் தெரிவு செய்திருக்க வேண்டும். ஆயினும், இன்று கொரோனா நம்மை நோக்கி பரவுகின்ற வேகத்தைப் பார்த்தால் இதனையெல்லாம் கடந்து சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் நாம் இருக்கின்றோம். ஆனால், பாடசாலைகளை மூடியுள்ள அரசாங்கம் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை இந்த நிமிடம் வரை மூடவில்லை. அதேவேளை, கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனா இருக்கின்ற நிலையில், “சீனாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அந்நாட்டவருக்கு தடை அவசியமில்லை” என்று அரசாங்கம் கூறியிருக்கின்ற காரணம் சிறுபிள்ளைத்தனமாக தெரிகின்றது. அத்துடன், இலங்கை எந்தளவுக்கு சீனாவின் ‘கட்டுப்பாட்டுக்குள்’ இருக்கின்றது என்பதையும் குறிப்புணர்த்துகின்றது எனலாம்.
இவ்வாறு அரசாங்கம் ஒருபக்கம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியே. அதற்காக உழைக்கும் உத்தியோகத்தர்கள் நன்றிக்குரியவர்களும் கூட. ஆனால் நாட்டில் பொதுவாக மக்களிடையே ஒருவித பதற்றமும் தொற்றுநோய் அச்சமும் ஏற்பட்டிருப்பதை காண முடிகின்றது, இந்த நிதர்சனத்தை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஆனால், இதனையெல்லாம் கடந்து கொரோனாவை கட்டுப்படுத்த நாம் கூட்டிணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் தமது தூய்மை, சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதும், நோய் அறிகுறி தென்படுமிடத்து
உடனே வைத்தியசாலைக்கு செல்வதுமே அடிப்படை நோய்த் தடுப்புக்கு வழிவகுக்கும்.
உண்மையில் கொரோனா (கொவிட்-19) என்பது தற்செயலாக பரவுகின்ற ஒரு தொற்றுநோய் மட்டும்தானா? அல்லது இதற்குப் பின்னால் வேறு ‘கிருமிகளும்’ இருந்து கொண்டு திட்டமிட்டு பரப்புகின்றனவா என்ற மிகப் பெரிய வினாவுக்கு உலகம் விடை காண வேண்டும். அதற்கு முன்னதாக, இப்போது உயிர்கொல்லும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். தாமதித்தால் தவிக்க நேரிடலாம்!
- ஏ.எல்.நிப்றாஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM