வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வரன், அண்­மைக்­கா­லத்தில் வெளிப்­ப­டுத்தும் கருத்­துக்கள், தமிழ் மக்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­ன­வாக உள்­ளதைக் கவ­னிக்க முடி­கி­றது.

தேர்தல் காலத்தில் அர­சி­யல்­வா­திகள் எதையும் பேசு­வார்கள், அவ்­வா­றான பிர­சார பேச்­சுக்­க­ளுக்கு அவர்கள் பொறுப்­புக்­கூ­று­ப­வர்­க­ளாக இருப்­ப­தில்லை.

தமி­ழ­ரசுக் கட்­சியின் உள்­ளக கூட்டம் ஒன்றில், சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அந்தக் கட்­சியின் பொரு­ளாளர் கன­க­ச­பா­பதி, இதனை வெளிப்­ப­டை­யாக ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.

இப்­போது, விக்­னேஸ்­வ­ரனும் கூட, ஏனைய அர­சி­யல்­வா­திகள் தேர்தல் காலத்தில் பேசு­கின்ற பேச்­சு­களைப் போலவே, கருத்­துக்­களை வெளி­யிட ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

15 எம்.பிக்கள்  பாரா­ளு­மன்­றத்தில் அவ­சியம் இல்லை, ஓரி­ரண்டு பேர் இருந்­தாலே சாதிக்க முடியும் என்­பது போன்ற வெற்று நம்­பிக்­கையை தமிழ் மக்­க­ளிடம் ஊட்ட முற்­ப­டு­கிறார் அவர்.

தமது கூட்­டணி 15 பாரா­ளு­மன்ற ஆச­னங்­களைக் கைப்­பற்றும் என்ற நம்­பிக்­கையை தமிழ் மக்­க­ளுக்குக் கொடுக்க வேண்­டிய பொறுப்பில் உள்ள அவர், ஓரி­ரண்டு பேர் இருந்­தாலே சாதித்து விடலாம் என்­பது போல,  நம்­பிக்­கை­யூட்ட முயற்­சிப்­பது, அபத்தம்.

தற்­போ­தைய அர­சாங்கம் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு, அர­சி­ய­ல­மைப்பை திருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில், ஓரி­ரண்டு பேரை வைத்துச் சாதிக்க முடியும் என்­பது வீணான கற்­பனை.

அது­மாத்­தி­ர­மன்றி, ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவை நிரா­க­ரித்து, சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு,  எடுத்த முடிவு மாபெரும் தவறு என்றும், சூழலை கணிக்­காமல் எடுக்­கப்­பட்ட அந்த முடி­வினால் தமிழ் மக்கள் பாதிப்­பு­களை சந்­தித்­துள்­ளனர் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

கூட்­ட­மைப்பு எடுத்த சஜித் ஆத­ரவு நிலைப்­பாட்­டினால் தான், சிங்­கள மக்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரித்­தனர் என்­பதே, அவ­ரது வாத­மாக தெரி­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரிக்க சிங்­கள மக்கள் முடி­வெ­டுத்­ததும், சஜித்தை ஆத­ரிக்க தமிழ் மக்கள் முடி­வெ­டுத்­ததும், கூட்­ட­மைப்பு எடுத்த முடி­வுக்கு பின்­ன­ரான விட­யங்கள் இல்லை, என்­பதே உண்மை.

கூட்­ட­மைப்பின் முடிவு அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் நடந்த தபால் மூல வாக்­க­ளிப்பின் பெறு­பே­று­களை எடுத்துப் பார்த்­தாலே, இரண்டு சமூ­கங்­களும் எவ்­வாறு முடி­வெ­டுத்­தன என்­பதை புரிந்து கொள்­ளலாம்.

மஹிந்த ராஜபக் ஷ, ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜபக் ஷவை நிறுத்­தி­ய­தற்குக் கார­ணமே, சிங்­கள பௌத்த வாக்­கு­களை முழு­மை­யாக அள்­ளு­வ­தற்குத் தான்.

தன்னால் தனிச் சிங்­கள வாக்­கு­களால் வெற்­றி­பெற முடியும் என்று, தேர்தல் அறி­விப்பு வெளி­யாக முன்­னரே,  புளொட் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்­த­னிடம், கோத்­தா­பய ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்றி ஏற்­க­னவே உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஒன்று தான்.

அது­போ­லவே, தமிழ் மக்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்டும் என்ற மன­நிலையில் இருந்­தனர். அவர்கள் அதனை சஜித்­துக்கான வாக்கின் மூலம் வெளிப்­ப­டுத்­தினர். அவர்கள் சஜித்­துக்கு வாக்­க­ளிக்க முடிவு செய்த பின்னர் தான், கூட்­ட­மைப்பும் அதே முடிவை எடுத்­தது.

இந்த இரண்டு கள யதார்த்­தங்­க­ளையும் விக்­னேஸ்­வரன் இன்­னமும் கூட விளங்கிக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்பு ஆத­ரிக்­காமல் போயி­ருந்தால், கோத்­தா­பய ராஜபக் ஷ வென்­றி­ருக்க முடி­யாது என்ற பிர­மையை அவர் உரு­வாக்க முனை­கிறார்.

மான­முள்ள தமிழன் எவனும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளிக்­க­மாட்டான் என்று முன்னர் கூறி­யி­ருந்த சி.வி.விக்­னேஸ்­வரன், இப்­போது, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு சார்­பாக கருத்­துக்­களை வெளி­யிட ஆரம்­பித்­தி­ருப்­ப­தையும் கவ­னிக்க முடி­கி­றது.

முன்­ன­தாக, சர்­வ­தேச தலை­யீ­டு­களை வலி­யு­றுத்திக் கொண்­டி­ருந்த சி.வி.விக்­னேஸ்­வரன் இப்­போது, அர­சாங்­கத்­திடம் இருந்தே தீர்வு கிடைக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்த ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

சர்­வ­தேச அழுத்­தங்­களின் மூலம், அந்த தீர்வை அடை­யலாம் என்ற நம்­பிக்­கையை அவர் அண்­மையில் நடத்தி வரும் கூட்­டங்­களில் கூறி வரு­கின்­றனர்.

கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக தமிழர் தரப்பு எடுத்த நிலைப்­பாட்டை கடு­மை­யாக விமர்­சிக்கும் விக்­னேஸ்­வரன், கோத்­தா­பய ராஜபக் ஷவின் மூலம், சில தீர்­வு­களை பெற­மு­டியும் என்ற நம்­பிக்­கை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பது ஆச்­ச­ரியம்.

கோத்­தா­பய ராஜபக் ஷ, சொல்­வதைச் செய்யக் கூடி­யவர், செய்ய முடி­யா­ததையும் சொல்லிவிடக் கூடி­யவர். அவ­ரது அந்த வெளிப்­ப­டை­யான குணாம்­சத்தைக் கொண்டு, சில தீர்­வு­களைப் பெற முடியும் என்று விக்­னேஸ்­வரன் உறு­தி­யாக நம்­பு­கிறார்.

ஏனை­ய­வர்கள் தீர்வைத் தரு­வ­தாக தமி­ழர்­களை ஏமாற்றி வந்­துள்­ளனர் என்றும் விமர்­சித்­துள்ளார். அவ்­வாறு ஏமாற்­றி­ய­வர்கள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வா­கவோ, மஹிந்த ராஜபக் ஷவா­கவோ இருக்­கலாம்.

அவர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது, கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெளிப்­ப­டைத்­தன்மை விக்­னேஸ்­வ­ர­னுக்கு பிடித்­தி­ருக்­கி­றது. எதிர்­கா­லத்தில் அவ­ருடன் பேசி விட­யங்­க­ளுக்கு சில தீர்­வு­களைப் பெற முடியும் என்ற நம்­பிக்­கையும் வந்­தி­ருப்­ப­தாக தெரி­கி­றது. அதனை அவர் தனது செவ்வி ஒன்­றிலும் கூறி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெளிப்­ப­டைத்­தன்­மை­யான குணாம்­சத்தை மாத்­தி­ரமே கருத்தில் கொண்­டுள்ள விக்­னேஸ்­வரன், சிறு­பான்­மை­யினர் தொடர்­பான அவ­ரது உறு­தி­யான அர­சியல் நிலைப்­பாடு என்ன என்­பதைப் பற்றி கணக்கில் கொள்­ள­வில்லை.

தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் பிரச்­சி­னை­களே இல்லை என்­பது தான் அவ­ரது நிலைப்­பாடு. பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைத்தால் போதும் என்ற நிலைப்­பாட்டில் இருக்கும் அவ­ரிடம் போய், விக்­னேஸ்­வரன் எவ்­வாறு தமி­ழரின் உரி­மை­களைப் பற்றிப் பேசப் போகிறார் ?

தமிழ் மக்­க­ளுடன் நேர­டி­யாகப் பேசப் போவ­தாக கூறும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இது­வரை வடக்கு -கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து, டக்ளஸ் தேவா­னந்தா போன்ற ஆளும்­த­ரப்பு தவிர்ந்த ஏனைய பிர­தான தமிழ் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளுடன் பேசவே இல்லை.

ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்­க­ளா­கியும் அவர் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களை சந்­திக்­க­வு­மில்லை. தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மை­யின மக்கள் அதிகம் வாழும் வடக்கு கிழக்­கிற்கு சென்று, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை கேட்­ட­றிய முனை­யவும் இல்லை.

இவ்­வா­றான நிலைப்­பாட்டில் உள்ள ஒரு ஜனா­தி­ப­தி­யுடன், எதிர்­கா­லத்தில் பேச­மு­டியும் ,சில தீர்­வு­களைப் பெற முடியும் என்றும் விக்­னேஸ்­வரன் கொண்­டுள்ள நம்­பிக்கை, காளை மாட்டில் பால் கறக்­கலாம் என்ற நம்­பிக்­கைக்கு ஒப்­பா­னது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ விட­யத்தில் விக்­னேஸ்­வரன் தப்­புக்­க­ணக்கைப் போடு­கிறார் என்றே தெரி­கி­றது.

2005 ஜனா­தி­பதித் தேர்­தலில் விடு­தலைப் புலிகள் எடுத்த நிலைப்­பாட்டைப் போல, அவரும் சிந்­திக்க முனை­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தேச வலைப்­பின்­னலை உரு­வாக்கி புலி­க­ளுக்கு நெருக்­குதல் கொடுத்துக் கொண்­டி­ருந்த அந்த நிலையில், சண்­டையை தொடங்கக் கூடிய, மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெறு­வது தமக்குச் சாத­க­மாக அமையும் என்று புலிகள் கரு­தினர்.

அதனால் தான், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தோற்­க­டிக்கும் வகையில், தேர்தல் புறக்­க­ணிப்­புக்கு அழைப்பு விடுத்­தனர்.

விடு­தலைப் புலி­க­ளிடம் அப்­போது ஆயுத பலம் இருந்­தது. அதனைக் கொண்டு மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை வென்று விடலாம் என்று நம்­பினர். அந்த நம்­பிக்கை பொய்த்துப் போன­துடன் புலி­களின் அழி­வுக்கும் கார­ண­மாக அமைந்­தது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிக்கு வந்­தி­ருந்தால் புலி­க­ளுக்கு அந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­காது என்­பது பல­ரது கணிப்பு. ஆனால் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அவர்கள் சிக்­கி­யி­ருக்க நேரிட்­டி­ருக்கும் என்­பது தவிர்க்க முடி­யா­ததே.

அப்­போது புலிகள் எடுத்த முடிவைப் போலவே, இப்­போது விக்­னேஸ்­வ­ரனும் எடுக்க முனை­கிறார்.

தீர்வைத் தருவோம் என்றோ, தர­மாட்டோம் என்றோ கூறாமல் ஏமாற்றி வரு­ப­வர்­களை விட, வெளிப்­ப­டை­யாகப் பேசும், கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் தீர்வைப் பெறலாம் என்று அவர் நம்­பிக்­கை­யூட்ட முனை­கிறார்.

இந்த நம்­பிக்­கையை அவர் ஜனா­தி­பதித் தேர்­தலின் போது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அதனை அவர் வெளிப்­ப­டை­யாகச் செய்­ய­வில்லை.

அப்­போது மதில் மேல் பூனை­யாக இருந்­தவர் விக்­னேஸ்­வரன்.

தமிழ் மக்­க­ளையே முடி­வெ­டுக்­கு­மாறு கூறிய அவர், இப்போது தமிழ் மக்கள் எடுத்த அந்த முடிவு தவறு என்கிறார்.

தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது, சரியான திசையில் வழிகாட்டக் கூடிய, மக்களை முன்நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய தலைமைத்துவம் தான்.

வார்த்தைகளுக்குள் ஒளிந்து விளையாடுகின்ற- சிக்கலான பிரச்சினைகளின் போது முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகின்ற, முடிவுகளை நீங்களே எடுங்கள் என்று நழுவுகின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை.

விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமையாக உருவெடுக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், தெளிந்த நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்தவும், அவர்களை முன்நோக்கி அழைத்துச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.

முன்னுக்குப் பின் முரணாக செயற்படுவதும், காலம் கடந்த பின் பிறர் மீது பழிகூறி தப்பிக்க முனைவதும், அவரது மூப்புக்கும், துறைசார் அனுபவத்துக்கும் பொருத்தமன்று.

- கபில்