ஒரு கனவு. கலாம் சொன்னதை போல கண்களை திறந்து கண்ட கனவு.  இது தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல.. ஒட்டுமொத்த நம் சமூகத்துக்கான கனவு.  நனவாக போகும்  என்ற நம்பிக்கையில் அந்த கனவின் நகலோடு நமக்காக எழுதப்படுகின்றது இக்கட்டுரை. இது வெறுமனே வாசகர்களுக்கான கட்டுரை மட்டும் அல்ல. நமது அரசியல்வாதிகளும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை.  நிச்சயம்  நனவாக்கப்பட வேண்டிய அந்த பெருங்கனவு நம் சமூகத்துக்கான, நமது இருப்புக்கான ஒரு பெருநகர திட்டமாகும். அந்த  கனவை  அட்டன் 2040 என விழிக்கிறோம்.

பூமியின் மூத்த குடிகளாய் செம் மொழியை எம் மொழியாக  கொண்ட நாம்... இன்றைய  வல்லரசுகளின்  முன்னையோர் எல்லாம்  காடுகளில் வேட்டையாடி குகைகளில் வாழ்ந்தபோது  கல்லை சிலையாக்கி கலை வடித்தோர் நாம்.. காலமாற்றம் எல்லா பெருமைகளும் இறந்தகால பெருமைகளாக மட்டுமே தமிழருக்கு உள்ளது.  பொன்னி நதி பெருக்கெடுக்க வளம் பூத்து குழுங்கிய  தமிழ் நாட்டை தலைநகராக்கி வடக்கே வேங்கடம் தொட்டு தெற்கே குமரி வரை ஆட்சி புரிந்த மன்னரின்  மக்கள்தான்  நாம்.

ஆனால், காலபோக்கில் வயிற்று பிழைப்புக்கு வழியின்றி மாசிக்கும் தேங்காய்க்கும் ஆசைப்பட்டு கடல் கடந்து  பிழைப்பதற்காக இந்த பூமி வந்தோம். அன்று ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டபோதிலும் இந்த நாட்டின்  பொருளாதாரத்துக்காக  எம் உழைப்பை   முதுகெலும்பாக்கினோம். ஆனால்,  நம் பொருளாதாரம் கூன்விழுந்து இன்னும் நிமிர முடியாத நிலையிலேயே  தலைமுறை  பல கடந்தும் ஏதோ  வாழ்ந்துக்கொண்டிக்கின்றோம்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்..' என்ற பூங்குன்றனாரின் வாக்கிற்கிணங்க...  தேச  எல்லைகள்  தாண்டி  இன,  மத பேதங்கள்  கடந்து   உறவுகள்  வளர்த்து இங்கே  இந்த மண்ணில் வேர்பிடித்து விட்டோம்.  இது நமது தேசம்.. நமது மண்... ஆங்கிலேயர் காலத்தில் நாம் இந்த மண்ணுக்கு வரும்போது இங்கு மனிதர்கள் நடமாடும் நல்ல நடைபாதையோ..  ரயில் பாதைகளோ  இருக்கவில்லை.. எவ்வித  உட்கட்டமைப்பு   வசதிகளும்   இருக்கவில்லை.  விலங்குகள் வாழ்ந்த அடர்ந்த காடுகள் நம் உழைப்பால்  பொன்விளையும் பூமியானது. ஆனால்,  காலம் நம்மை நாடற்றவர்களாக்கியது. வறுமை வாழ்க்கையை ஆட்டிவைத்தது.

நாட்டின் உள்நாட்டு யுத்தத்தில் நாமும் உறவுகளை  பிரிந்தோம். நாமும்  தொலைந்தோம்.   எப்படியோ  இலையுதிர்கால முட்களாய் சிலிர்த்து நின்று நம் ஜீவன் வளர்த்தோம். நம் தலைமுறையை இந்த பூமியில் விதையாய் பதிய வைத்து  வேர்விட்ட மரங்களாகி விட்டோம். இன்று நாம்  இந்த மண்ணில் கால் பதித்து ஒன்றரை நூற்றாண்டுகளாகிவிட்டது. ஆனால், இன்னும் ஆங்கிலேயர் கட்டிய இரட்டை லய குடியிருப்பு மாறவில்லை.

1000 ரூபாவை தொடமுடியாத கூலிகளாகவே கூடை சுமக்கின்றோம்.  ஒழுங்கான  திறமான  மருத்துவ வசதிகள், கல்வி என்பன அனைவருக்கும் கிடைப்பதில்லை. பஸ்  செல்லாத இல்லாத ஊர்கள் இன்னும் எத்தனையோ உள்ளன. இந்த அவலத்தைப் பேசி பேசி எந்த பயனும் கிட்ட போவதில்லை.  நமது வாழ்க்கை முறையை மாற்றினால் மட்டுமே ஏனைய சமூகத்தை போல நாமும் நமது தலைமுறையும் இந்த மண்ணில் மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.

இந்தியவம்சாவளியினர், மலையகத்தமிழர், மலைநாட்டவர் மலையகத்தார் என்றெல்லாம்  அழைக்கப்படுகின்ற நாம்  நம் மண்ணின்  இனத்தின் இருப்பை  இன்று தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.  ஒரு காலத்தில் இந்த நாட்டின் இரண்டாவது சனத்தொகை கொண்ட மக்களாக இருந்த நாம்  சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், இனப்பிரச்சினை  தீவிரம்,  இடப்பெயர்வுகள் போன்ற கால கொடுமைகள்  காரணமாக 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  அதைவிட  இன்று நாம் சந்திக்கின்ற பெரும் பிரச்சினை நகரம் நோக்கிய இடப்பெயர்வு ஆகும்.

அதாவது, தொழில் நிமிர்த்தமாக கொழும்பு உள்ளிட்ட நகரை நோக்கி வருவதோடு இங்கேயே வாடகை வீடுகளில் காலத்தை கழிக்கின்றோம். ஊர்களில் தொழில் இன்மை. சம்பாதிப்பதற்கான வாய்ப்பின்மை காரணமாக தலைநகரை நோக்கி இடம்பெயர்கின்றோம். நமது வாக்கையும் கொழும்பிலேயே  பதிந்துகொள்கின்றோம். இதனால்  நமது சமூக பிரதிநிதித்துவம்  மலையகத்தில் குறைகிறது. இன்றைய காலத்தில் பலரது தலைமுறைகள் அதாவது, பிள்ளைகள் கொழும்பு பாடசாலைகளிலேயே கல்வியும் கற்கின்றனர்.

சுற்றுலா செல்வது போலதான்  பலரும் ஊருக்கு செல்கின்றனர். முக்கால் வாசிப்பேர் வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு வாடகை காரில் ஊருக்கு போய் அங்கு உள்ளவர்கள் மனதிலும்  தலைநகரை  நோக்கி  ஒரு பிரமாண்ட பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். இவை ஆரோக்கியமானதா என்பது கேள்விக்குறியே ..?. ஆனால், இது நம் சமூக இருப்பை காவு கொள்ளுகின்ற விடயம் என்பதில் வேற்றுக்கருத்து இல்லை. ஏனெனில், இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பின் படி ஒரு காலத்தில் 15 இலட்சமாக இருந்த நாம் இன்று  8 இலட்சத்து 39 ஆயிரமாகதான் உள்ளோம். இதில் இன்று ஒரு இலட்சத்து 45 ஆயிரம்பேர் மட்டுமே  தோட்ட தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களோடு அரசதுறையில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருப்பதோடு ஏனைய அரச தொழில்களை செய்பவர்கள் மிகவும் குறைவாகவுள்ளனர். 

உயர் தொழில்களில் ஈடுபடுபவர்கள் குறைவானவர்களே. வர்த்தகத்திலும் சுய தொழில்களிலும் ஈடுபடும் சிறு பிரிவினரும் மலையக மாவட்டங்களில் உள்ளனர்.இவர்கள் மட்டுமே  தற்போது நிரந்தரமாக மலையகத்தில் வசிக்கின்றனர். ஏனையவர்கள் அதாவது, கல்வியில்  சாதாரண தரம் சித்தியடையாதவர்கள் பெரும்பாலும்  கொழும்பை நோக்கி வந்து ஆடைத் தொழிற்றுறையில் பணிபுரிகின்றனர். பலர் வீட்டு  பணிப்பெண்களாக உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் தொழில் செய்கின்ற நிலை காணப்படுகின்றது. கல்வியை இடைநிறுத்திய இளைய சமூகத்தினர் நகரங்களில் துறைசாரா தொழில்களிலும் பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர்.  

இவ்வாறு இன்று நகரை நோக்கிய இடப்பெயர்வு என்பது  உலக நாடுகளை ஆட்டிவைக்கின்றதை போலவே  நம் சமூகத்தையும் ஆட்டுவிக்கின்றது  என்பதை இது காட்டுகின்றது. மலையகத்தை விட்டு வெளியேறி  செல்வதனால் நமது அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து போவதோடு, நமது மண்ணின் மதிப்பு நமது இருப்பு என்பன பாரிய கேள்வி குறியை உண்டாக்கியுள்ளது. உலகில் வாழும் சமூகங்கள் அனைத்துமே தம்மை நிலைநிறுத்தும் ஒரு நிலப்பரப்பை, நில கட்டமைப்பபை அதாவது பேர் சொல்லும் ஊரை உருவாக்கி வைத்துள்ளனர். 

இலங்கையிலும் குறிப்பிட்ட இடங்கள், பிரதேசங்கள்  குறிப்பிட்ட  சில சமூகங்களை பிரதிபலிப்பனவாகவே காணப்படுகின்றன. அனைத்து சமூகத்துக்கும் தலைநகரம் போல ஒரு பிரதான இடம்  காணப்படுகின்றன. ஆனால், 150 வருடங்களுக்கு மேலாக இந்த மண்ணில் வாழும் நமக்கு இது போன்ற ஒரு தலைநகரம் உள்ளதா..? காடுகளாய் கிடந்த பிரதேசத்தை  உழைப்பால் கட்டமைத்து   மலையகம் என்ற பெரும் நிலப்பரப்பை உருவாக்கியது நமது முன்னோரின் உழைப்பே. ஆனால், இன்று பிழைப்பை  தேடி நாம் வெளியே போகின்றோம். எல்லா வளங்களும் மலையகத்தில் கொட்டி கிடக்கின்றன. இயற்கை பாய் விரித்து படுத்திருப்பது நமது மண்ணில்தானே.. ஆனால் அதனை நாம் கண்டுகொள்ளாது இருக்கின்றோம். இன்றைய நமது இருப்புக்கான முக்கிய தேவைப்பாடே நம் பேர் சொல் லும் நம்மை அடையாளப் படுத்தும் ஒரு நகரை, பெரு நகரை உருவாக்குவதே ஆகும்.

வேலைவாய்ப்பு,   உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட நமது அனைத்து தேவைகளும் அந்த நகரை மையப்படுத்தி பூர்த்தி செய்யப்படுமிடத்து நாம் தொழிலை தேடி வெளியே செல்ல வேண்டிய தேவையில்லை. நமது மண்ணை வளப்படுத்தி நமக்கான ஒரு பெருநகரை உருவாக்க வேண்டிய கால தேவை இன்று உள்ளது. எல்லா சமூகத்தினரை போலவும் இந்த நாட்டில் இந்த பூமியில் கெளரவமாக நாம் வாழ அதன் தேவைப்பாடு அவசியமானதே. தலைநகருக்கோ தலைநகரை அண்டிய பகுதிக்கோ சென்று வாடகை வீட்டில் வசிப்பதல்ல அபிவிருத்தி. நம் மண்ணை அனைத்து வசதிகளும் நிறைந்த வளமாக நமக்கான ஒரு தலைநகராக மாற்றுவதே அபிவிருத்தி. அதுவே நமது கனவு திட்டமான அட்டன் 2040.  அதாவது, அட்டனை மலையகத்தின் தலைநகராக பெருநகராக மாற்றம் செய்தல்.

ஏன் அட்டனை தெரிவு செய்ய வேண்டும்?

 மலையகத்தில் எத்தனையோ நகரங்கள் இருக்க ஏன் நாம் அட்டனை தெரிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்பும். அதற்கு திறமான காரணங்கள் உள்ளன. அதாவது, அங்குதான் இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் 75 வீதத்தினர் வாழ்கின்றனர். இலங்கை தலைநகரமான கொழும்புக்கு மிக அண்மையில் உள்ள நகரம்.கொழும்புக்கான  பஸ் பயணதூரம் 4 மணித்தியாளங்கள் ஆகும். அட்டனில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நிலப்பரப்பு, நீர், மின்சாரம், பாதுகாப்பு  போன்ற பயன்பாட்டு வசதிகள் இங்கு தாராளமாக  காணப்படுகின்றன. மொத்த நிலப்பரப்பு 427.46 ஏக்கர் ஆகும்.

இதில் 308.30 ஏக்கர் நிலப்பரப்பு விவசாய நிலமாக உள்ளது.  காலநிலை சீரானது. அதிக வெப்பம், அதிக குளிர் இல்லை. சதாரணமாக காலநிலை நிலவுகின்றது. 18 –22 செல்சியஸ் வெப்பநிலை. போதுமான மழை வீழ்ச்சி கிடைக்கின்றது. சிங்கமலை நீர்தேக்கம்   குடிநீர் விநியோகத்தில் பிரதான வகிபங்கம் செய்வதோடு மகாவலிகங்கையின்  பிரதான கிளை ஆறுகளில் ஒன்றான அட்டன் ஓயாவின் ஊற்று  அட்டனிலேயே ஆரம்பிக்கின்றது. இதனால் நீர் வள பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் அங்கு மிக குறைவு. ஆகவே விவசாயத்தினை மேலும் வலுப்படுத்த முடியும். பசுமை நகராக அட்டன்  வளர்ச்சியடையும். தேயிலைமாத்திரம் இன்றி எதிர்காலத்தில் ஏனைய காய்கறி போன்ற விவசாய பயிர்களின்  உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும்  இது சாதகமாக அமையும்.

கல்வியறிவும் அங்கு தரமானதாக உள்ளது. ஏனெனில், பல்கலைக்கழகத்துக்கு மலையகத்தில் இருந்து செல்பவர் கள் அட்டன் பாடசாலை களிலேயே அதிகம்.  ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரி, பொஸ்கோ, ஸ்ரீபாத, கொன்வன்ட் ஆகிய 4 பிரதான பாடசாலைகள் நகரை அண்டியே உள்ளன. மேலும் 2 ஆசிரியர் கலாசாலைகள் அட்டனுக்கு நெருக்கமான பிரதேசங்களில்  உள்ளன. உயர் கல்வியை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன.  

அட்டன்,  நுவரெலியா மாவட்டத்தில் பிரதான நகர்களில் ஒன்றாக உள்ளதோடு கண்டிக்கும் நுவரெலியாவுக்கும் அருகாமையில் உள்ள நகரமாகும். பெருநகரங்களுக்கான போக்குவரத்து வசதிகள் உள்ளன. ரயில் நிலையமும் பஸ்   டிப்போவும்  நகரில் காணப்படுகின்றன. முக்கிய முன்னணி வங்கிகள் எல்லாம் நகரில் உள்ளன. இங்கு ஒன்று தோன்றுகின்றது உண்மையில் அட்டனின் அமைப்பை வைத்துதான் அட்டன் நெசனல் வங்கியை பிரித்தானியர்  இங்கு உருவாக்கியிருக்க வேண்டும் என தோன்றுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக தேயிலைத் தோட்ட சமூகத்தை குறிக்கும்  நகராக அட்டன் உள்ளது. உழைக்கும் சக்திகள் அதாவது, மிக பெரியவேலை படை  அங்கு உள்ளது.  மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகின்ற மலையக  நகர்களில் ஒன்றாக  உள்ளது. அட்டனிலிருந்து சிவனொலி பாத மலை, நோட்டன் பிரீஜ் காசல்ரீ நீர் தேக்கம், டெவன் பத்தனை நீர்வீழ்ச்சிகள்,  உலக முடிவு, நுவரெலியா  போன்ற பல்வேறு சுற்றுலாத்துறையை மேம்படுத்தக் கூடிய இடங்கள் உள்ளன.   இவ்வாறு நமது சமூகத்தை பிரதிபலிப்பதாகவும் வசதிகள் நிறைந்த நகராகவும் அட்டன் உள்ளமையாலேயே நாம் அட்டனை தெரிவு செய்ய விளைந்தோம்.

ஆயினும் நமது கனவு பெருநகராக அட்டனை மாற்ற வேண்டுமெனில் இதில் நாம் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெருநகரம் என்பது நிலப்பரப்பில் பெரிதாகவும் பொருளாதார அரசியல் கலாசாரத்தின் மத்திய நிலையமாகவும் செயற்பட வேண்டும். அவ்வாறே நாம் அட்டனை மாற்றம் செய்ய வேண்டும். அதாவது, பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், கலாசார மத்திய நிலையங்கள், வைத்தியசாலைகள் தொழிற்பேட்டைகள், குடியிருப்பு, பொலிஸ், போக்குவரத்து போன்றன   சீராக திறமானதாக அட்டன்   நகரில் உருவாக்கம் பெறல்  வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் தங்கி படிப்பதற்கான விடுதி வசதிகள், எல்லா தோட்டங்களுக்கும் நகரங்களுக்கும் அட்டனில் இருந்து போக்குவரத்து வசதிகள் எப்போதும் எந்த நேரத்திலும் பெறக்கூடியதாக  உருவாக்கல் வேண்டும். ரயில் சேவையையும்  விஸ்தரிக்க வேண்டும். குறிப்பாக  கண்டியிலிருந்து நுவரெலியாவுக்கான ரயில் சேவை தொடங்கப்படின் சுற்றுலாத்துறை மேம்பட வசதியாக இருக்கும்.

நகரை அண்மித்த குடியிருப்புகள் உருவாக்கல் வேண்டும். நமது சமூகத்தின் பெருமையை  தொன்மையை  கூறும் அருங்காட்சியகம், சுற்றுலா நடவடிக்கைகள் பராமரிப்பு மையம்,  சாத்தியமான தொழிலாளர் வர்க்கம், தாதியர்  பயிற்சி நிலையங்கள், விவசாயக் கல்லூரிகள், விளை யாட்டு பயிற்சி மையங்கள், ரயில் பணி பயிற்சி நிறுவனம்,  பாரிய வணிக வளாகங்களை  உருவாக்கல், பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இடங்களை   உருவாக்கல், தொழில்துறை  அபிவிருத்தியை உருவாக்கல்,பொதுமக்களுக்கு பொதுவான நடை பயிற்சி செய்வதற்கான இடங்களை உருவாக்கல், இடைநிலைக் கல்வி நிறுவனம் தேவை,  பொதுநூலக பயன்பாட்டை விருத்தி செய்தல் வேண்டும்.

ஹட்டன் மாநகராட்சி மன்றமாக மாறவேண்டும், சிறந்த மருத்துவமனையையும் மருத்துவ வசதிகளையும் உருவாக்குதல் வேண்டும். ஆங்கில கல்வி அபிவிருத்தியை  செய்ய வேண்டும்.  முறையான நகரத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.  மக்களுக்கான அபிவிருத்தி மையத்தை உருவாக்குதல்  வேண்டும். இவ்வாறான வேலை திட்டங்களை செய்யுமிடத்து அட்டன் உட்கட்டமைப்பு  உள்ளிட்ட சகல வசதிகளையுடைய  மக்கள் மகிழ்வுடன் வாழ்வதற்கான சூழலையும் உடைய பெருநகராக மாற்றம் அடையும்.

கூலிவீட்டில் இருந்துகொண்டு உழைக்கும் சம்பளத்தை கூலியாக கட்டிக்கொண்டு காலமெல்லாம் கடன்பட்டு வாழ்வது அல்ல வாழ்க்கை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  மட்டும் அல்ல உள்நாட்டு நடுத்தர வர்க்கம் மற்றும் செல்வந்தர்கள் கூட  நம் ஊரை சுற்றிப்பார்க்க, நிம்மதியாக ஓய்வெடுத்து செல்ல பணம் செலவழித்து வந்து போகின்றார்கள். ஆனால், நாம் வளமுள்ள நம் சுற்றுச்சூழலை விட்டு  நஞ்சுபடிந்த காற்றை சுவாசித்து  நம் கிராமத்து உறவுகளையும் உணர்வுகளையும் உணவுகளையும் விட்டு எங்கோ போய் கொண்டிருக்கின்றோம். 

நிலா சோறு தெரியாதவர்களாக நம் பிள்ளைகள் வாழ்வதை பெரு மையாக வேறு கருதுகின் றோம். நமது விவசாயத்தை விடவும், கொழுந்து காட்டை விடவும்  பலர்  கடுமையான தொழிலை நகரில்  செய்து  நரக வாழ்க்கை வாழ்வது நகரில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.  ஊருக்கு போகும் போது நிம்மதியாக நகரில் நாம் இருப்பது போலவும் கைநிறைய காசோடு திரிவது போலவும் பலர் பந்தாவை மட்டும் காட்டிவிட்டு வருகின்றோம்.  

இதனை விட மிக பெரிய வேதனை என்னவென்றால்  நாமெல்லாம் கொழும்பில் கூலிவீட்டில் தங்குகின்றோம் அங்கோ நமது சொந்த மண்ணில் ஏனைய வெளியாட்களின் குடியேற்றங்கள் தாராளமாக நடந்துக்கொண்டிருக்கின்றன.

நம் மக்களிடையே  இளம் வயது திருமணங்களும்  மதுபாவனையும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. மது மட்டும் அல்ல. ஏனைய போதைவஸ்து பாவனைகளும் நம் மண்ணில் அதிகரித்துவிட்டது. வைத்தியசாலைகள் இல்லாத ஊரிலும் மதுபான சாலைகள் உள்ளன. லயத்துக்கு மாற்றீடாக  தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுகின்ற காணிகளை வெளியாட்கள் வாங்கி குடியேறுகின்ற  அவலம் உள்ளது. தலவாக்கலை நகரை அண்மித்த தோட்டங்களில் எல்லாம் இதனை கண்கூடாக காண முடிகின்றது. நிலத்தின் பெறுமதியை அறியாது அதனை ஆயிரத்துக்கும் இலட்சத்துக்கும் சிலர் விற்றுக்கொண்டிருக்கின்றனர். 

இன்னும் பல ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்கள் எல்லாம் இல்லாத ஒரு நிலை உருவாகக் கூடும். வேறு பயிர்கள் கூட அதற்கு பதிலாக பயிரிட முயற்சிக்கலாம்.  அப்போது வேறு குடியேற்றங்கள் இன்னும் தாராளமாகவும் நடைபெற வாய்ப்புண்டு. அப்போது மலையகத்தவர்களாகிய நாம் நம்  வசிப்பிடத்தை இழக்க நேரிடலாம். நமது மண்ணை தொலைக்க நேரிடலாம். எனவே  நாங்கள் எங்கள் வசிப்பிடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய காலத்தின் தேவை இப்போது உள்ளது. வெளியே சென்றவர்கள் எல்லோருக்கும் மீண்டும்  சொந்த மண்ணுக்கு வரவேண்டும். அதற்கான நமது மண் பொருளாதாரம் கொழிக் கின்ற சகல வசதிகளையும் வேலை வாய்ப்புக்களையும் வழங்கக் கூடியதுமான பெருநகராக மாற்றம் அடைய வேண்டும். இதற்கான முயற்சியே அட்டன் 2040.

இந்தத் திட்டம் சாத்தியமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். நிச்சயம் சாத்தியமே,  ஏனெனில், இலங்கை அரசு  நமது  சமூக முன்னேற்றத்துக்கு தொடர்ந்து எல்லாவகையிலும் உதவி புரிந்து வருகின்றது. நாம் இந்திய வம்சாவளி மலையகத்தார் என்று கூறினாலும் இலங்கை எம்மை இலங்கையராய் தன் பிள்ளைகளாகவே அரவணைத்து சேவை செய்கின்றது. எனவே அரசின் உதவி  நமது அபிவிருத்திக்கு  தாராளமாக  நிச்சயமாக கிடைக்கும். நம் அரசியல் தலைமைகள் அதற்கான முயற்சிகளை சீராக செய்வர் என்ற நம்பிக்கையுண்டு.

இதேபோல நமக்குள்ள இன்னொரு பெரும் பலம் இந்தியா. இந்திய வம்சாவளிகளான எமக்கான தேவைகளை இந்தியா தொடர்ந்து செய்து வருகின்றது. நம்சமூகம் சார்ந்த நகர அபிவிருத்திக்கும் அது நிச்சயம் துணைபுரியும். அதனைவிட நம் சமூகம் சார்ந்த பல அமைப்புகள் தற்போது சீரான இயக்கத்தில் உள்ளன. நமது அரசியல் தலைமைகளும் நிச்சயம் இதனை வரவேற்பர் என்ற நம்பிக்கை உண்டு. இதன் மூலம்  வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீடுகளைப் பெறும் சூழலை  நாம் அமைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் அட்டன் 2040 நனவாக்க முடியும்.

கே.சுகுணா