முழு உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு பிரதான நகரங்கள் பலவும் சன நடமாட்டத்தை இழந்து வருகின்றன. மக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே முடங்கி ப்போயுள்ள நிலையே தலைநகர் கொழும்பில் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் உலகளாவிய ரீதியில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதுடன் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதில் அனைத்து உலக நாடுகளுமே முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றன. பல நாடுகள் விமான நிலையங்களை மூடி விட்டுள்ளன.

இவ்வாறான மக்கள் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடுவது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற் கட்டமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசாங்கம் ஏற்கனவே மூடிவிட்டுள்ளது. மறுபுறம் பொழுதுபோக்கு இடங்களாக கருதக் கூடிய திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றையும் அரசாங்கம் மூடியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய நோயாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்படும் பட்சத்தில் முழுமையான நடவடிக்கைகளுக்கு செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வாறாயினும் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த வியாழக்கிழமை திடீரென மூடுவதற்கு தீர்மானித்ததையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் கணிசமான அளவு குறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பை அண்டிய பகுதிகளில் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் பெருமளவில் நடமாடக்கூடிய பூங்கா, காலிமுகத்திடல் மற்றும் ஏனைய பிரபலமான இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலைவரத்தை பற்றி ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரிடம் வினவிய போது:
'வழக்கமாக வார இறுதி நாட்களிலேயே பொது மக்கள் அதிகளவு கொள்வனவில் ஈடுபடுவர். எனினும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கும் அச்சத்தினால் வாடிக்கையாளர்களின் வரவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. கடந்த காலங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சி ஏற்படும் சந்தர்ப்பங்களின்போது மக்கள் விரைவாக கொள்வனவு செய்வதில் ஆர்வம் காண்பித்தனர். எனினும் இன்று சுகாதார நெருக்கடியினால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்ல அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் பதற்ற நிலையை சில வியாபாரிகள் பயன்படுத்துவதாக கருதுகிறேன். வைரஸ் தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது விற்பனை நிலையத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுத்துள்ளேன்'என்றார்.
ஒரு வியாபாரியின் கருத்தை கேட்டறிந்த போது:
'உலகளாவிய ரீதியில் கொரோனா தொடர்பான அச்சம் ஏற்பட்ட நாளிலிருந்தே வாடிக்கையாளர்களின் வரவு குறைந்தே காணப்பட்டது. இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இனங்காணப்பட்ட பின்னர் வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் எனது வியாபாரத்தில் கிடைக்கப்பெற்ற இலாபத்தில் இப்போதைய நிலைமையுடன் ஒப்பிடும்போது இலாப வருமானம் பூச்சியமாகவே உள்ளது. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வரும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான கை தூய்மையாக்கி போன்றவற்றை வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். அரசாங்கம் பாடசாலை விடுமுறையை மாணவர்களுக்கு வழங்கியது மேலும் மக்கள் மத்தியில் அதிகளவான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது' என தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பரவல் அதிதீவிர நிலையை எட்டியிராவிட்டாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம் காரணமாக அவர்கள் பொது இடங்களில் நடமாடுவதை குறைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.