(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்த போவதில்லை என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த இருவர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இணங்காணப்பட்டுள்ளது. எனவே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை மாத்திரமே கண்காணிப்பு உட்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் பின்னர் வைரஸ் பரவலை அவதானித்து மேலும் 9 நாடுகளிலிருந்து வருபவர்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

எனவே வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களது விருப்பம், விருப்பமின்மை கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் நிச்சயமாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சிலர் மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் முரண்படுகின்றமை தொடர்பில் நேற்றிரவு ‍அவர் விடுத்துள்ள விஷேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.