உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்தியாவில் புதுவித மருத்துவ முறையொன்றை கண்டுபிடித்துள்ளனர். 

கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடுவதற்கான மருத்துவ குணங்கள் மாட்டு சிறுநீரில் (கோமயம்) இருப்பதாக நம்பப்படுவதால், நூற்றுக்கணக்கான மக்கள் கோமியத்தை குடிக்கும் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு நம்பிக்கையில் சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அகில் பாரத் இந்து மகாசபா (அகில இந்திய இந்து யூனியன்) என்று அழைக்கப்படும் ஒரு குழு மாட்டு கோமியத்தை குடிக்கும் விருந்து ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதில் கொரோனாவுடன் போராடுவதற்கான மருத்துவ குணங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில், இந்த விருந்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட ஓம் பிரகாஷ் என்பவர், நாங்கள் 21 ஆண்டுகளாக மாட்டு கோமியத்தை குடித்து வருகிறோம். மாட்டு சாணத்திலும் குளிக்கிறோம், ஆங்கில மருந்தை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை என்று கூறுகிறார்.

அதே போன்று, அகில இந்திய இந்து ஒன்றியத்தின் தலைவரான சக்ரபாணி மகாராஜ், மாட்டு சிறுநீர் நிரப்பப்பட்ட ஒரு கரண்டியை கொரோனா வைரஸின் கேலிச்சித்திரத்தின் முகத்தின் அருகே வைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் காகிதம் மற்றும் பீங்கான் கோப்பைகளில் கோமியம் குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாதக் கட்சியின் தலைவர்கள் இதற்கு முன்னர் பசுவின் கோமியத்தை மருந்தாகவும், புற்றுநோயைக் குணப்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த தலைவர் ஒருவர், மாட்டு கோமியம் மற்றும் சாணத்தை கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது