இணையத்தினூடாக நடாத்தப்படும் கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 15 நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என பணியகம் அறிவித்துள்ளது.

கொரிய வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் அது 11 வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த வருடம் முதல் இலங்கை உட்பட 4 நாடுகளில் இணையத்தளம் முறையின் கீழ் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.

அத்துடன் கொரிய மனிதவள அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ள குறித்த இணையத்தள பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படும் முறையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மொழி விருத்தி தொடர்பான பரீட்சை இணையத்தள முறையில் நடத்தப்படுவதுடன் செயற்திறமை பரீட்சையொன்றும் வழமைபோன்று நடைபெறும்.

மேலும் விண்ணப்பதாரிகள் புள்ளிகள் அடிப்படையில் தொழில் வாய்ப்புக்காக  இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். அதனடிப்படையில் கைத்தொழில் துறைக்கு இணையத்தளத்தின் கீழ் 100 புள்ளிகள் மற்றும் செயற்திறன் பரீட்சையில் ஆகக் கூடிய 100 புள்ளிகள் அடிப்படையிலும் அதேபோன்று கடற்றொழில் மற்றும் கட்டுமான துறைக்கு இணையத்தளத்தின் கீழ் புள்ளிகள் அடிப்படையில் 90ம் செயற்திறன் பரீட்சையில் 110 புள்ளிகள் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் இணையத்தளம் மூலமாக நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் ஒரே தடவையில் சுமார் 35பேர் அளவில் கலந்துகொள்ளமுடியும் என்பதுடன் பரீட்சை பல தினங்களுக்கு நடைபெறும். அதனடிப்படையில் அதிகமானவர்களுக்கு இந்த பரீட்சையில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கின்றது.