கொரோனா தொற்று  உலகை ஆட்­டிப்­ப­டைத்­து­வரும் நிலையில் கொரோனா தொடர்­பான வதந்­தி­க­ளா­னது அத­னை­விட வேக­மாக பர­வி­வ­ரு­வ­தனால் மக்கள் மத்­தியில்  பெரும் அச்சநிலை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கை­யிலும்  இத்­த­கைய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.  வதந்­திகள் கார­ண­மாக  மக்கள்  பதற்­ற­ம­டைந்து  அல்­லோல கல்­லோ­லப்­படும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

கொரோனா வைரஸ் தாக்கம் கார­ண­மாக உல­கத்தில் இது­வரை நான்­கா­யி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் பலி­யா­கி­யுள்­ளனர்.    ஒரு இலட்­சத்து 25 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இலங்­கை­யிலும்  கொரோனா தொற்­றுக்கு  உள்­ளாகி ஐவர்  அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். இதனால்  எமது நாட்­டிலும்  கொரோனாதொற்­றினை  தடுப்­ப­தற்கு  தேவை­யான  நட­வ­டிக்­கைகள்   எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

கடந்த புதன்­கி­ழமை  இத்­தா­லிய  சுற்­று­லாப்­ப­ய­ணி­க­ளுக்கு  சுற்­றுலா வழி­காட்­டி­யாக செயற்­பட்ட  52 வய­து­டைய  நப­ரொ­ரு­வ­ருக்கு கொரோனா தொற்று இருப்­பது உறு­தி­ப்ப­டுத்­தப்­பட்­டது.   இந்த செய்தி  பர­வி­ய­தை­ய­டுத்து   நாட்டு மக்கள் மத்­தியில்   அச்­ச­நிலை  உரு­வா­கி­யது.  முத­லா­வது  கொரோனா நோயாளி இலங்­கையில்  இனங்­காணப்­பட்­ட­தை­ய­டுத்து  அந்த வைரஸ் தொற்­றினை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில்  அர­சாங்கம்   தீவி­ர­மாக  இறங்­கி­யி­ருந்­தது.  சுகா­தார அமைச்­சா­னது இந்த கொரோனா தொற்று தொடர்பில் அறி­வித்­த­துடன் தொற்­றினை தடுப்­ப­தற்கு பொது­மக்­களின் ஒத்­து­ழைப்­பையும் நாடி­யி­ருந்­தது. 

இந்த நிலையில்  கொரோனா தொற்­றுக்­குள்­ளான­வரின் குடும்பம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­பட்­ட­துடன் தொற்­றுக்­குள்­ளான­வ­ருக்கும் சிகிச்சை அளிக்கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த நிலையில் பெரும் வதந்­திகள் பர­வத்­தொ­டங்­கியதனால் மாண­வர்கள் மத்­தி­யிலும் நாட்டு மக்கள் மத்­தி­யிலும் பதற்­ற­மான நிலைமை  உரு­வா­னது. கொரோனா தொற்­றுக்­குள்­ளான சுற்­றுலா வழி­காட்­டியின்   புகைப்­ப­டங்கள்   சமூக வல­யத்­த­ளங்­களில்   பதி­வி­டப்­பட்­டி­ருந்­தன. அவர்  இத்­தா­லிய சுற்­றுப்­ப­ய­ணி­க­ளான நால்­வ­ருடன்  நிற்கும் புகைப்­படம் பதி­வி­டப்­பட்­ட­தை­ய­டுத்து அவ­ரது மகன்­மார்கள் தொடர்­பிலும்  குடும்­பத்­தினர் தொடர்­பிலும் வதந்­திகள் பரப்­பப்­பட்டன.  

வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வ­ரது மகன்மார் இருவர் கொழும்­பி­லுள்ள பிர­ப­ல­ பா­ட­சாலை ஒன்றில் கல்வி கற்­பது   தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து அவர்­க­ளுக்கும்  கொரோனா தொற்று ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்று வதந்தி பரப்­பப்­பட்­டது.  இதன் கார­ண­மாக   அந்த  பாட­சா­லையில்  பெரும் பதற்ற நிலை நேற்று முன்­தினம்   ஏற்­பட்­டது.  பாட­சா­லைக்கு வந்த பெற்றோர் தமது பிள்­ளை­களை  அழைத்து சென்­றி­ருந்­தனர். 

இதே­போன்றே தம்­புள்ளை, திக்­வெல்ல பகு­தி­க­ளிலும்  உள்ள பாட­சா­லை­களில் பதற்­ற­நி­லைமை  உரு­வா­னது.  இத்­தா­லிய சுற்­று­லாப்­ப­ய­ணி­க­ளுக்கு வழி­காட்­டிய நப­ருடன்  ஒன்­றாக தங்­கி­யி­ருந்த மற்­றொரு நப­ருக்கும்  கொரோனா தொற்று இருப்­பது  நேற்று முன்­தினம்  உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.  இத­னை­ய­டுத்து வதந்­திகள் மேலும் பரப்­பப்­பட்­ட­தனால் பதற்­ற­நிலை உரு­வா­னது. 

பாட­சா­லை­களில் மாணவர் மத்­தியில் பதற்­ற­ நிலை உரு­வா­ன­தை­ய­டுத்து  அர­சாங்­க­மா­னது   நேற்­று­முதல்  ஏப்ரல் மாதம் 20 ஆம் திக­தி­வரை பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை அளித்­துள்­ளது. இந்த  அறி­விப்பு கார­ண­மாக மக்கள் மத்­தியில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது.  பாட­சா­லை­களை மூடும் அள­விற்கு நிலைமை சென்­றுள்­ளதால்  பார­தூர தன்மை  ஏற்­பட்­டு­விட்­ட­தாக மக்கள் கரு­தி­யி­ருந்­தனர். இதனால்  நாட்டு மக்கள்  முண்­டி­ய­டித்­துக்­கொண்டு அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை  கொள்­வ­னவு செய்யும் நட­வ­டிக்­கைக­ளிலும்  ஈடு­பட்­டனர்.  மலை­யகம், வடக்கு, கிழக்குப் பகு­தி­க­ளிலும் இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.  வடக்கில் வழ­மை­போன்றே  எரி­பொருள் நிரப்பும் நிலை­யங்­க­ளிலும் மக்கள்  முண்­டி­ய­டித்­தி­ருந்­தனர்.   

இவ்­வாறு  கொரோனா வைரஸ் தொற்று தாக்கம்  தொடர்பில் ஏற்­பட்ட பதற்ற நிலை தொடர்ந்து வரு­கின்­றது. இத­னை­விட  கொரோனா தொற்­றுக்­குள்­ளா­ன­வர்கள்  என்ற சந்­தே­கத்தின் பேரில்  வைத்­தி­ய­சா­லை­களில்  பலர்  அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இந்த  விடயம் தொடர்­பிலும்   வீணான வதந்­திகள்  பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. இதனால் பெரும்­தொ­கை­யா­னோ­ருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டு­விட்­டதோ என்ற அச்சம் மக்கள் மத்­தியில்  தோன்­றி­யி­ருக்­கின்­றது. 

உண்­மை­யி­லேயே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கடு­மை­யா­கவே உள்­ளது. ஆனால்,  எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் இன்­னமும்   நிலைமை  தீவி­ர­ம­டை­ய­வில்லை.  தொற்­றினை தடுப்­ப­தற்­கான முன்­னேற்­பாடுகள்   அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.  கொரோனா தொற்­றுக்­குள்­ளான நாடு­க­ளி­லி­ருந்து இலங்கை வரு­ப­வர்கள்  விசேட முகாம்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.   தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­க­ளுடன்  பழ­கி­ய­வர்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

கொரோனா தொற்­றினை தடுக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். தொற்று தொடர்பில் மக்கள் மத்­தியில் மேலும் விழிப்­பு­ணர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.   அதே­போன்றே  வீணான வதந்­திகள் பரப்­பப்­ப­டு­வதை தடுக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது  அவ­சி­ய­மாக உள்­ளது. ஏனெனில் இத்­த­கைய வதந்­திகள் கார­ண­மா­கவே நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அச்­ச­நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அவர்கள்  பதற்­றத்­திற்கு உள்­ளா­கி­வி­டு­கின்­றனர்.  

உல­கத்­தி­லேயே கொரோனா தொற்று பர­வி­யுள்ள நாடு­களில் நான்கு நாடு­களில் மட்­டுமே  பாட­சா­லை­க­ளுக்கு முழு­மை­யாக விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது.  அதில்  இலங்­கையும்  உள்­ள­டங்­கி­யி­ருக்­கி­றது.  வருமுன் காக்­க­வேண்டும்  என்­ப­தற்கு இணங்க பாட­சா­லை­க­ளுக்கு உட­ன­டி­யாக விடு­முறை   அளிக்­கப்­பட்­ட­தனை தவறு என்று   கூற முடி­யாது.  ஆனாலும்  இந்த விட­யத்தில்   இன்­னமும்  பொறு­மை­காத்­தி­ருக்க முடியும் என்ற கருத்தும் நில­வு­கின்­றது. 

ஏனெனில் உலகில் கொரோனா வைர­ஸினால் பெரும் தாக்­கங்­க­ளுக்கு  உள்­ளாக்­கப்­பட்ட நாடு­க­ளி­லேயே  பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.  தற்­போ­தைய நிலையில்  எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் பதற்றம் அடை­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இதனை சுகா­தார அமைச்சும்   தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

எனவே மக்கள் வைரஸ் தொற்று தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தப்­படு­வ­துடன் இந்த தொற்­றி­லி­ருந்து மீட்சி பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை   பின்­பற்­ற­வேண்டும்.   இதனை விடுத்து பதற்­ற­ம­டைந்து  பொருட்­களை முண்­டி­ய­டித்து  கொள்­வ­னவு செய்­வ­தற்கோ  அல்­லது  அச்­சப்­ப­டு­வ­தற்கோ வேண்­டிய சூழ்­நிலை தற்­போது இல்லை என்­பதை உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். 

ஐரோப்­பிய நாடு­க­ளிலும்  கனடா, அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா  போன்ற நாடு­க­ளிலும்  கொரோனா வைரஸ் தாக்­கத்தை அடுத்து  மக்கள் பொருட்­களை  கொள்­வ­னவு செய்­தி­ருந்­தனர்.  அங்­குள்ள புலம்­பெ­யர்ந்த மக்கள் இந்த விட­யத்தில் தீவிர அக்­கறை காண்­பித்­தி­ருந்­தனர்.  அதே­போன்றே  இலங்­கை­யிலும் நிலைமை   மாறி­வ­ரு­கின்­றது. 

தற்­போ­தைய நிலையில் கொரோனா தொற்­றினால் பாதிக்­கப்­பட்ட வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­களை தனி­மைப்­ப­டுத்த புணா­னையில் அமைந்­துள்ள  மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­திலும்  கந்­த­காட்­டிலும்  விசேட நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. 

புணா­னையில் அமைக்­கப்­பட்­டுள்ள   நிலையம் தொடர்பில்   மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்கள் பெரும் எதிர்ப்­புக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.  இந்த  விட­யத்­திற்கு   எதிர்ப்பு தெரி­வித்து மட்­டக்­க­ளப்பில் பூரண ஹர்த்­தாலும் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. அத்­துடன்    மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் கொரோ­னா­வுக்­கான சிகிச்­சைப்­பி­ரிவு அமைக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது.  புணானை  நிலை­யத்­தி­லி­ருந்து கொரோனா தொற்று என்ற சந்­தே­கத்தின் பேரில் மூவரை நேற்று முன்­தினம்  மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­வர முற்­பட்­ட­போது  அதற்கு எதி­ரா­கவும்  போராட்டம்   நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

தற்­போ­தைய நிலையில்   மாவட்டம் தோறும்  கொரோனா சிகிச்சைக்கான  பிரிவுகள்  வைத்தியசாலைகளில் அமைக்கப்பட் டுள்ளன.  அத்தகைய நடைமுறை அவசியமானதாகும். ஏனெனில் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அந்த இடத்தில் அவர்களுக்கு சிகிச்சை  அளிக்கவேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் மனிதாபிமான ரீதியிலும் செயற்படவேண்டிய தேவை உள்ளது என்பதை அனைவரும்  உணர்ந்துகொள்ளவேண்டும். 

தற்போதைய நிலையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் பூரண ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாக உள்ளது. அதேபோன்றே வீணான வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்தும்  செயற்பாடுகளில்   எவரும்  ஈடுபடக்கூடாது.  சமூக வலைத்தளங்களில்  பதிவுகளை   இடுவோரும் இந்த விடயம் தொடர்பில் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டும். 

இவ்வாறான நிலை ஏற்படுமானால் வீணான பதற்றங்களை தவிர்த்து கொரோனாவில் இருந்து மீட்சி பெற முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

(14.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )