(எம்.மனோசித்ரா)

வைரஸ் பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. அம்முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தி மக்களின் சுகாதார நிலையை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இயலுமானளவில் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் நோய்ப் பற்றி மக்களை தெளிவுபடுத்த வேண்டுமே தவிர சமூகத்தில் குழப்ப நிலையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படாதிருத்தல் அவசியமாகும் எனவும் குறிப்பிட்டார். 

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

வைரஸ் பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. அம்முன்னேற்றத்தை மேலும் அதிகப்படுத்தி மக்களின் சுகாதார நிலையை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இயலுமானளவில் மேற்கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவில் பல நாடுகளில் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றன. பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் மிகப் பாரதூரமான நிலைமை காணப்படுகின்றது.  எனவே ஐரோப்பியர்களுக்கு வீசா வழங்குவதை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துவதோடு, இதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் சந்தித்தவர்களை அடையாளம் காணுவது  தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களை கண்காணிப்புக்கு உட்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும். அவர்கள் பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்தவர்கள் பற்றி தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களை நோய்த் தடுப்பு கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

முகக் கவசங்களை எந்தவொரு இடத்திலும் பெற்றுக்கொள்ளும் வகையில்  முறையாக விநியோகிப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்னெடுக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு விலையின் கீழ் எந்தவொரு நபருக்கும் முகக் கவசத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முகக் கவசங்களை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை கொண்ட நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இன்று முதல் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து மற்றும் புகையிரதங்கள் கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக பாதுகாப்பு பிரிவினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.

சீனா தற்போது மிக சிறப்பாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது. சமூக செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை நோய்த் தடுப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க சீனா முக்கியத்துவம் கொடுத்தது.

அந்நாடு பின்பற்றிய வழிமுறைகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அரச நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை முன்னெடுத்தல், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக வீட்டிலிருந்து செயற்படுத்தலை பரீட்சித்துப் பார்க்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் நோய்ப் பற்றி மக்களை தெளிவுபடுத்த வேண்டுமே தவிர சமூகத்தில் குழப்ப நிலையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படாதிருத்தலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.