சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவினால் தேசிய மட்டத்தில்  வைத்தியசாலைகளுக்கிடையிலான விபத்து, காயங்கள், நோய்கள் பற்றிய தகவல் கண்காணிப்பு தேர்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குத் தேசிய ரீதியில் இரண்டாமிடம் கிடைத்துள்ளது. 

இதன் பரிசளிப்பு விழா நேற்று பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜெயவர்தனவிடமிருந்து நினைவுச் சின்னத்தையும் சான்றிதழையும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அஸாத் ஹனிபா பெற்றுக் கொண்டார்.

மேலும் உள்ளக நோயாளிகள், இறப்பு பற்றிய தகவல்களின் சிறந்த தரப்படுத்தலுக்காகவும் இரு சிறப்புச் சான்றிதழ்களை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.

சம்மாந்துறை வைத்தியசாலையில் மனித, பௌதீக வளங்கள் மிகவும் குறைந்தளவில் காணப்பட்டாலும் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களின் கடின உழைப்பே இவ்விருதுக்குக் காரணமாகும் என்று வைத்திய அத்தியட்சகர் அஸாத் ஹனிபா தெரிவித்தார்.