இயக்குனர் முத்தையா இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை லட்சுமிமேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, கும்கி மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமிமேனன். அதனைத்தொடர்ந்து குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், றெக்க என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, ராசியான நடிகை என பெயர் பெற்ற நடிகை லட்சுமி மேனன், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாமல், படிப்பை தொடர விரும்பினார்.  அதனால் திரையுலகிலிருந்து  விலகினார்.  

பின்னர் படிப்பு முடித்ததும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. தனுசிற்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்குபற்றி தன்னுடைய கலையார்வத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன், தேவராட்டம் என கிராமத்து எக்சன் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கௌதம் கார்த்திக் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்த ‘தேவராட்டம்’ கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது என்பதும், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகை லட்சுமிமேனன் கொம்பன், குட்டி புலி ஆகிய படத்தில் நடித்திருந்தார் என்பதும், கௌதம் கார்த்திக்கும், லட்சுமிமேனனும் ஏற்கெனவே இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ‘சிப்பாய்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் முத்தையா ,கௌதம் கார்த்திக், லட்சுமிமேனன் இவர்கள் இணையும் படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.