மைத்திரியின் செயற்பாடுகளால் சுதந்திரக் கட்சி பலவீனமடையும் அபாயம் - குமார வெல்கம

By Vishnu

13 Mar, 2020 | 09:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தனது எதிர்கால இருப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜபக்ஷக்களிடம் அடி பணிவது அவரது தனிப்பட்ட விருப்பமாகும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இவ்வாறான செயற்பாடுகளினால் சுதந்திரக் கட்சியே பலவீனமடையும் என்றும் கூறினார்.

அத்துடன் பெருமைக் கொண்ட  சுதந்திர கட்சி இன்று அரசியல் நோக்கங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றும் சுதந்திர கட்சிக்கு விசுவாசமாகவே உள்ளேன். ஆனால் மைத்திரிபால சிறிசேன  தலைமையில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதற்காகவே  நவ  லங்கா சுதந்திர முன்னணியை ஸ்தாபித்தோம்.

2015 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து புறக் கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இன்று அவரது  விசுவாசிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எவரும் அன்று அவருடன்  ஒன்றினையவில்லை.மஹிந்த சுழக பேரணியினை  ஆரம்பித்து  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவிதித்தோம். அரசியல் ரீதியில்  மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தேன் ஆனால்   நோக்கம் வெற்றிப்பெறவில்லை.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன   2015ம் ஆண்டு  ஐக்கிய தேசிய கட்சியுடன்  இணைந்து செயற்படுவதற்கு   எடுத்த தீர்மானத்தை எதிர்த்து செயற்குழுவில் இருந்து வெளியேறினேன்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  கட்சியில் குடும்ப ஆதிக்கம் நிலவியதால் அக்கட்சியில்  இணைந்துக் கொள்ளவில்லை.

 அரசியலமைப்பிற்கு முரணாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து  மஹிந்த ராஜபக்ஷ  முறைக்கேடான விதத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். 

52 நாட்கள் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு சுதந்திர கட்சியின்  தலைவர் மைத்திரிபால சிறிசேனவே மூல காரணம் இவ்விருவரின் முறையற்ற செயற்பாட்டை கடுமையாகவும், பகிரங்கமாகவும்    விமர்சித்தேன்.

2015 ஆம் ஆண்டு மக்கள் அரசியல் ரீதியில் செய்த தவறை  2019 ஆம் ஆண்டு திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதிர்பார்ப்பு  நிறைவேறவில்லை.  

ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள்  பல விடயங்களை புரிந்துக் கொண்டுள்ளார்கள். எமது நாட்டை பொறுத்தவரையில்அரச தலைவராக தெரிவு செய்யப்படுபவர் ஒரு  அரசியல்வாதியாக இருக்க வேண்டும். ஏன்  குறைந்தபட்சம்  உள்ளுராட்சி மன்ற சபை உறுப்பினராகவாவது செயற்பட்டிருக்க வேண்டும்.

அரச சேவையில் இருந்து  அரச ஊழியர்கள்  60 வயதிற்கு பிறகு ஓய்வு பெறுகின்றார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மாத்திரம்  ஆயுள் முழுவதும் எவ்விதத்திலாவது  அரசியலில் செல்வாக்கு  செலுத்த முயற்சிக்கின்றார்கள்.இந்நிலமை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே  ஐக்கிய மக்கள் சக்தியுடன்  ஒப்பந்த அடிப்படையில் இணைந்துக் கொண்டுள்ளேன். 

பொதுத்தேர்தலை தொடர்ந்து ஜனநாயகத்தை மதிக்கும் பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்என்பது பிரதான   எதிர்பார்ப்பாகும் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right