(இராஜதுரை ஹஷான்)

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவதற்கான அவசியம் ஏதும் கிடையாது. நாட்டு மக்கள் இன்றும்  அவரது அரசியல் வகிபாகத்தை எதிர்பார்த்துள்ளார்கள். அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பினை உருவாக்குவதே அவரது அடுத்தக்கட்ட இலக்கு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  டிலான பெரேரா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வுப்பெற வேண்டும். என்று ஒரு தரப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். 2015ம் ஆண்டு அவர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்பில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவே தீர்மானித்தார்.

 ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கவில்லை. மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து மீண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார்.

நாட்டு மக்கள் அவர் மீது கொண்டுள்ள பற்று இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பெறுபேறு ஊடாக வெளிப்பட்டது.   ஆகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய தேவை தற்போது கிடையாது. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழித்து  நாட்டுக்கு பொருந்தும் அரசியலமைப்பினை உருவாக்குவதே அவரது பிரதான இலக்காகும்.இதற்கு இவரது வகிபாகம் மிகவும் அவசியமானது,

 அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கியே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 19வத திருத்தத்தை கொண்டு வந்தார். அவரது ஆட்சி காலத்தில் 20வது திருத்தம் உருவாக்கத்திற்கு  முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மாத்திரம் போலியாக்கப்பட்டன.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை கொண்டு சிறந்த அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியாது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் சகோதரர்களாக உள்ளதால் தற்போது அதிகாரம் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

ஆனால் இந்நிலைமை எதிர்காலத்திலும் இடம் பெறும் என்று குறிப்பிட முடியாது. ஆகவே நிச்சயம் 19வது திருத்தம்  மாற்றியமைக்கப்பட்டு நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பு உருவாக்கபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.