இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 15 இலங்கை மீனவர்களை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் சுற்றிவளைப்பில் கப்பல் வைபவ், கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து சென்றது. அப்போது,  இலங்கையைச் சேர்ந்த மூன்று படகுகள் அத்துமீறி இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததை ரோந்து படையினர் கண்டனர்.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் ‘சுகந்தி’, ‘செரல்’, ‘நெட்மி’ எனும் பெயர் கொண்ட 3 படகுகளை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அந்த படகுகளிலிருந்த 15 மீனவர்களை கைது செய்தனர்.

இதையடுத்து,  படகுகளையும் மீனவர்களையும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்துவர அனுமதி கேட்டனர். ஆனால், ‘கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக, வெளிநாட்டினர் மற்றும் படகுகளைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க முடியாது’ என, துறைமுக நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால், மீனவர்கள் 15 பேரும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் படகுகளுடன் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா எனத் துறைமுக வைத்திய குழுவினர் சோதனை செய்தனர்.

தற்போதுள்ள சூழலில், குறித்த நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதில் சிக்கல் உள்ளன. எனவே, 15 மீனவர்களையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு தகவல் தெரிவித்து, சர்வதேச கடல் எல்லையில் 15 மீனவர்களை ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.