கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் நோக்காக 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் ஒலிம்பிக் விளையாட்டுக்களை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ட்ரம்பின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டுகள் அமைச்சர் சீகோ ஹாஷிமோடோ, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ எதுவித அறிவிப்புகளையும் எமக்கு வழங்கவில்லை.

அதனால்  ஒலிம்பிக் போட்டிகளை திட்டமிட்டவாறு பாதுகாப்பாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். 

கொரோனா பீதி காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

ஒலிம்பிக் ஜோதி அடுத்த 7 நாட்கள் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும். முதல் நபராக கிரீஸ் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அன்ன கோராககி தீபத்தை ஏந்தி வந்தார். 

இந்த சுடரானது எதிர்வரும் 19 ஆம் திகதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும். 

2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Daily mail