‘கொவிட்–19’ தொடங்­கிய இடம் சீனா. அதிகம் பாதிப்­புக்­குள்­ளான இடமும் சீனாதான். ஜன­வரி 23 அன்று வூகான் நக­ரத்தைத் தனி­மைப்­ப­டுத்­தி­யது சீனா. அதைத் தொடர்ந்து ஹூபை மாநி­லத்தின் ஏழு கோடி மக்­கள்­ திரள் அடங்­கிய பெரும் பகு­தி­யையும் தனி­மைப்­ப­டுத்­தி­யது. சரி­யாக ஒரு மாதத்­துக்குப் பிறகு, பெப்­ர­வரி 23 ஆம் திகதி அன்று பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை சீனாவில் குறையத் தொடங்­கி­யது. இந்தப் பேரி­டரை சீனா எங்­ஙனம் எதிர்­கொள்­கி­றது என்­பதில் உலக நாடு­க­ளுக்குப் பல பாடங்கள் உள்­ளன. சில பின்­பற்­று­வ­தற்­கா­னவை. சில புறக்­க­ணிக்க வேண்­டி­யவை.

சீன நக­ரங்­களை உலக சுகா­தார அமைப்பின் வல்­லுநர் குழு பார்­வை­யிட்­டது. நோயை சீனா எதிர்­கொண்ட விதத்தை அக்­குழு பாராட்­டி­யி­ருக்­கி­றது. 10 நாட்­களில் 2 பிரம்­மாண்ட மருத்­து­வ­ம­னை­களைக் கட்டி முடித்­தது. இந்த அபூர்வ முன்­னெ­டுப்­புகள் ஊட­கங்­களில் வெளி­யா­யின. முகம் தெரி­யாத எதிரி­யோடு சீனர்கள் நிகழ்த்­தி­வரும் யுத்தம் இன்னும் பல களங்­களைக் கொண்­டது.

 மருத்­துவத் துறையின் தைரியம்

50,000 பேருக்கு ஒரு அம்­பியூலன்ஸ் வேண்டும் என்­பது ஒரு சரா­சரி மருத்­துவத் துறைக் கணக்கு. வூகான் நகரில் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு அம்­பியூலன்ஸ் தான் இருந்­தது. ஒரு­கட்­டத்தில், ஒவ்­வொரு அம்­பியூலன்­ஸுக்கும் 275 நோயா­ளிகள் காத்­தி­ருந்­தனர். ஒரு நோயா­ளியை மருத்துவ­ம­னையில் அனு­ம­தித்­ததும் அம்­பியூலன்ஸ் சுத்­தி­க­ரிக்­கப்­பட வேண்டும். இதற்கு ஒரு மணி நேரம் எடுக்கும். பின்­னரே, அடுத்த நோயா­ளியை அழைத்து வர முடியும்.

அம்­பியூலன்ஸ் சார­திகள், தாதி­யர்கள், ஊழி­யர்கள், மருத்­து­வர்­க­ளெல்லாம் பக­லி­ர­வாகப் போரா­டி ­வ­ரு­கி­றார்கள். நோயா­ளி­களின் நாசி­களில் நுழைந்த வைரஸ், அவர்­க­ளது நுரை­யீ­ரலைத் தின்­று­வி­டாமல் பாது­காக்க சகல முயற்­சி­க­ளையும் மேற்­கொண்­டு­ வ­ரு­கி­றார்கள். இந்த சிகிச்­சையின் போது மருத்­துவத் துறை­யி­னரும் பாதிக்­கப்­பட்­டார்கள். பெப்­ர­வரி 15 அன்று வெளி­யான செய்தி குறிப்­பின்­படி, பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 1,716 பேர் மருத்­துவத் துறைப் பணி­யா­ளர்கள். அன்­றைய திகதியில் மர­ணத்தைத் தழு­வி­ய­வர்­களில் ஆறு பேர் மருத்­துவத் துறை­யினர். நாடெங்­கி­லு­மி­ருந்து 33,000 மருத்­துவப் பணி­யா­ளர்கள் ஹூபை மாநி­லத்­துக்கு வந்­தனர். பல கல்வி நிலை­யங்­களும் சமூக நலக் கூடங்­களும் தற்­கா­லிக மருத்­து­வ­ம­னைகளாயின.

       ட்ரோன்­களும் ரோபோக்­களும்

தொழில்­நுட்­பத்­தையும் திற­மை­யாக பயன்படுத்திக் ­கொண்­டது சீனா. இரண்டு எடுத்­துக்­காட்­டு­களைச் சொல்­லலாம். ஒன்று ட்ரோன். வீடு­க­ளுக்குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் மக்­க­ளுக்கு காய்ச்சல் கண்­டி­ருக்­கி­றதா என்று அறி­வது எப்­படி? ஆகா­யத்தில் பறந்­து­வரும் ட்ரோன், ஒவ்­வொரு வீட்டின் ஜன்னல் அரு­கிலும் தாழ்­வாகப் பறக்கும். வீட்டில் உள்­ள­வர்­களின் வெப்ப நிலையைக் கண்­ட­றிந்து தெரி­விக்கும். இந்த வெப்­ப­மானி ட்ரோன்கள் உப­ரி­யாக வேறொரு வேலையும் செய்­தன. மக்கள் எத்­தனை காலம்தான் வேலை இல்­லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்­பார்கள்? சீனாவின் புகழ் பெற்ற உள்­ள­ரங்க விளை­யாட்டு மாஜோங். சீட்­டாட்­டத்தில் ரம்­மி­யோடு ஒப்­பி­டலாம். ஆனால், சீட்­டு­க­ளுக்குப் பதில் சீன எழுத்­து­க­ளை­யும்­ சித்­தி­ரங்­க­ளையும் தாங்­கிய சதுரக் காய்கள் இருக்கும். அயல்­வா­சிகள் சிலர் ஒன்­று­கூடி மாஜோங் விளை­யா­டினர். மக்கள் கூடு­வதைத் தடை­செய்­வ­து­தானே தனி­மைப்­ப­டுத்­தலின் நோக்கம்? இப்­ப­டி­யான ஒன்­று­கூ­டல்கள் அந்த நோக்­கத்­துக்கு ஊறு விளை­விக்கும். வெப்­ப­மானி ட்ரோன்கள் மக்­களில் சிலர் மாஜோங் விளை­யா­டு­வதைக் கண்­ட­றிந்­தன. உடன் நக­ராட்சி அவ­ரவர் வீடு­க­ளுக்குப் பிரிந்து போகு­மாறு பணித்­தது. வீதி­களில் கிருமி நாசி­னி­களைத் தெளிப்­ப­தற்கும் ட்ரோன்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்த யுத்­தத்தில் சீனர்கள் சிறப்­பாகப் பயன் ப­டுத்தி ­வ­ரு­கிற இன்­னொரு தொழில்­நுட்பம் ரோபோ. மருந்து, உடை, போர்வை, உணவு முத­லான பொருட்­களை மருத்­து­வ­ம­னைக்குள் ஓரி­டத்­தி­லி­ருந்து பிறி­தொரு இடத்­துக்கு மனிதக் கரங்கள் தீண்­டாமல் கொண்­டுபோய்ச் சேர்த்­தன ரோபோக்கள். அழுக்குத் துணி­களை அகற்­றவும் குப்பைக் கூளங்­களைக் களை­யவும் அதற்­காக பிரத்தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட ரோபோக்கள் ஓசை­யின்றி இயங்­கிக் ­கொண்டே இருந்­தன.

 நவீன மருத்­துவச் சோத­னைகள்

மருத்­துவச் சோத­னை­க­ளிலும் சிகிச்சை முறை­க­ளிலும் பல நவீன யுக்­தி­களை சீனா பயன்­ப­டுத்­தி­யது. சீனாவைத் தவிர, வேறு எந்த நாட்­டிலும் இத்­தனை குறு­கிய காலத்தில் அறி­வி­ய­லையும் வளங்­க­ளையும் மனித சக்­தி­யையும் இவ்­வ­ளவு சிறப்­பாக ஒன்­றி­ணைத்­தி­ருக்க முடி­யாது என்று எழு­தி­யது உலகப் புகழ்­பெற்ற மருத்­துவ இத­ழான ‘லான்செட்’. இதற்­கெல்லாம் பலன் இருந்­தது. இதுபோன்ற தொற்­று­நோய்கள் பர­வும்­போது எண்­ணிக்கை அதி­க­மா­கிக்­கொண்டே போய் உச்­சத்தை எட்டும். அதற்குப் பிறகு, இறங்­கு­மு­க­மாக இருக்கும். ஒரு­கட்­டத்தில், தேய்ந்து காணா­மல்­போகும். ‘கொவிட்-19’ பாதிப்பு சீனாவைப் பொறுத்­த­ மட்டில் உச்­சத்தை எட்­டி­விட்­டது. பெப்­ர­வரி 23-லிருந்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை குறைந்­து­ வ­ரு­கி­றது. சீனா­வில்தான் பாதிப்பு குறைந்­தி­ருக்­கி­றதே தவிர, வேறு பல நாடு­களில் அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது. சீனா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக ‘கொவிட்-19’ஆல் அதிக மரணம் நிகழ்ந்­தி­ருப்­பது ஈரானில். சீனா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக அதிகம் பாதிப்­புக்­குள்­ளா­னது தென் கொரியா. ஐரோப்­பிய நாடு­களில் அதிகம் பாதிப்­புக்­குள்­ளா­னது இத்­தாலி. சீனா­வுக்கு வெளியே சுமார் 50 நாடுகள் சிறிதும் பெரி­து­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

சீனாவின் அபா­ர­மான செயல்­திறன், ‘கொவிட்-19’ பாதிப்பைக் குறைத்­தி­ருக்­கி­றது என்­பது உண்­மை தான். அதே­வே­ளையில், நோயை எதிர்­கொள்­வதில் சீனா தொடக்­கத்தில் காட்­டிய சுணக்கம், அதன் அதி­கார கட்­ட­மைப்பின் குறை­பா­டு­களை உணர்த்­து­வ­தாக அமைந்­து­விட்­டது.

      மையத்தில் குவிந்­தி­ருக்கும் அதி­காரம்

கடந்த டிசம்பர் மாதம் எப்­போ­தும்போல் நல்ல குளி­ரு­டன்தான் தொடங்­கி­யது. வறட்டு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற உபா­தை­க­ளுடன் டிசம்பர் மத்­தியில் நோயா­ளிகள் வந்­த­போது, மருத்­து­வர்கள் குளிர்க்­காய்ச்சல் என்­றுதான் நினைத்­தார்கள். ஆனால், சோத­னை­க­ளின்­போது சில­ருக்கு நுரை­யீரல் வீக்கம் இருப்­பது தெரிந்­தது. அவை வழ­மை­யான மருந்­து­க­ளுக்கு கட்­டுப்­படவும் இல்லை. 2003-இல் சீனா­வையும் ஹோங்ெ­காங்­கையும் உலுக்­கிய சார்ஸ் நோய்க்கு நிக­ரான அடை­யா­ளங்கள் இருப்­பதை உணர்ந்த மருத்­து­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். டிசம்பர் இறு­தியில் அவர்கள் சிவப்புக் கொடி­களை உயர்த்­தினர். ஜன­வரி முதல் நாள் தொற்­றுக்குக் கார­ண­மெனக் கரு­தப்­படும் மீன்-­வி­லங்குச் சந்தை மூடப்­பட்­டது. உள்ளூர் நிர்­வாகம் அடக்கி வாசிக்க விரும்­பி­யது.

ஒரு கட்சி ஆட்­சியும் மையத்தில் அதி­காரக் குவியல் உள்ள அர­ச­மைப்­பையும் கொண்ட சீனாவில், வூகான் மாந­க­ராட்­சியும் ஹூபை மாநில நிர்­வா­கமும் பெய்­ஜிங்­கி­லி­ருந்து ஆணை­க­ளுக்­காகக் காத்­தி­ருந்­தன.

இந்த வைரஸ் மனி­த­ரி­லி­ருந்து மனிதருக்குத் தொற்றாது என்று கூறிவந்தன. ஜனவரி 20- இல்தான் இந்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றக்கூடியது என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. திசை வழியைத் தீர்மானிப்பதில் மூன்று வாரத் தாமதம் நேர்ந்தது. இதற்கு சீனா கொடுத்த விலை அதிகம். தீவிரம் புரிந்ததும் அது செயலாற்றிய வேகமும் அதிகம்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த யுத்தத்தின் போர்த் தந்திரங்களைச் சீனாவிடமிருந்து திறந்த மனதுடன் கற்றுக்கொள்ள வேண்டும். சீனா தனது இரும்புத் திரை நிர்வாக அமைப்பை மறுபரிசீலிக்கும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சீனா உட்பட எல்லா அரசாங்கங்களும் ஒன்றிணைந்து, இந்த வைரஸுக்கான முறிவைக் கண்டடைய வேண்டும்.