நடிகை ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ என்ற படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகை ஆனந்தி கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’. இந்தப்படத்தில் பொலிவூட் நடிகர் ரோஹித் ஷெராப் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி.

படத்தைப் பற்றி இவர் பேசுகையில்,

“ சிறிய நகரத்தை சேர்ந்த பெண்ணொருத்தியின் வாழ்க்கையில் 17 வயதிலிருந்து 24 வயதிற்குள் நடைபெறும் கதை என்பதாலும், அந்த கதாப்பாத்திரத்திற்கு நடிகை கயல் ஆனந்தி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தெரிவுசெய்தேன்.

இப்படத்தின் திரைக்கதையை அவர் தன்னுடைய தோளில் இயல்பாக சுமந்திருக்கிறார். அவருடைய திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஆகச் சிறந்த திரைப்படமாக இருக்கும். இந்த படத்தின் மூலம் வாழ்க்கையில் வெல்வதைவிட, எம்மை வெல்வதுதான் முக்கியம் என்பதை சூழல்கள் மற்றும் கதாபாத்திரத்தின் வழியாக சுவராசியமாக சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

ஏப்ரல் 17ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. சிறந்த நடிகையான ஆனந்தியின் நடிப்பு திறனுக்கு இப்படம் மேலும் ஒரு மைல்கல் என்பதால் அவருடைய ரசிகர்கள், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.