நிதி மோசடிகள் தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகவும், மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராகவும் பல்வேறு குற்றங்கள் முன்வைத்துள்ள போதிலும் அரசாங்கம் இவர்களை காப்பாற்றி மேலும் நாட்டிலுள்ள சொத்துக்களை சூறையாடவே முயற்சிக்கின்றனர். 

எனவே இந்த அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவர்களின் அரசியல் நாடகம் இன்று மக்களுக்கு நன்றாக விளங்கிவிட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.   

குற்றவாளிகளும் நிதி மோசடிக்காரர்களும் ஜனாதிபதி, பிரதமரை சுற்றியே உள்ளனர். குற்றவாளிகளை தண்டித்து நாட்டை தூய்மைப்படுத்த வந்தவர்களே இன்று குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றனர் .

நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் தேசிய அரசாங்கதின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

வடக்கு இந்தியாவிற்கும், தெற்கு சீனாவிற்கும் குத்தகைக்கு விடப்பட்டு நாட்டின் வளங்கள் அனைத்தும் தாரைவார்க்கப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக கூறி சர்வதேச வியாபரத்துக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தினார். 

நாட்டின் நிலவும் இன்றைய அரசியல் சூழலானது மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. ஆட்சியில் இருந்தவர்களின் மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பும், அவநம்பிக்கையும் பல்வேறு சிக்கல்களும் இருந்த நிலையில் அவர்களை விரட்டியடித்து நல்லாட்சியை அமைக்க ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று முன்னைய ஊழல் மோசடிக்காரர்களை இணைத்துக்கொண்டு மேலும் ஊழல்மிக்க நாடாக மாற்றிவிட்டனர்.