எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தை விமர்சிக்கவும், சர்வதேச மட்டத்தில் கருத்துகளை வெளிப்படுத்தவும், சர்வதேச விசாரணையை கோரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உரிமை உள்ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளையோ, வடமாகாண முதல்வரின் கருத்துகளையோ அல்லது புலம்பெயர் அமைப்புகளின் கருத்துகளையோ முழுமையாக நடைமுறைப்படுத்தி தீர்வுக்கான வேண்டும் என்ற தேவை இல்லை. அனைத்து மக்களின் ஒருமித்த கருத்துக்கு அமையவே அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் இத்தனை கால கோரிக்கையும் ஒன்றுகூடி வரும் நிலையில் அதை குழப்பியடிக்காது தமிழர் தரப்பு பொறுமையாக இருந்து தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டது. 

ஜெனிவாவில் இலங்கை தொடர்பிலான விவாதம் அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ள நிலையில் புலம்பெயர் அமைப்புகள் ஐ.நா ஆணையாளர் செய்யித் அல் ஹசனை சந்திக்கவுள்ளதாகவும், இப்போது நாட்டில் அரசாங்கம் அவசரமாக மேற்கொண்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் போர்க்குற்றங்களை மூடிமறைக்கவெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கதின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

எதிர்க்கட்சியாகவோ அல்லது தமிழர் தரப்பாகவோ அல்லது அதையும் தாண்டி புலம்பெயர் அமைப்புகளின் உறுப்பினர்களாகவோ பலர் பல்வேறு கதைகளை கூற முடியும். எனினும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நாட்டின் நிலைமைகள் மற்றும் எம்மால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதற்கும் அமைவாகவே செயற்பட முடியும். புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தியோ அல்லது கூட்டமைப்பின் கருத்துகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியோ, வடமாகாண முதல்வரின் கருத்துகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியோ அரசாங்கம் இயங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாட்டில் மூவின மக்களும் எதை விரும்புகின்றனர், எந்த தீர்மானம் நாட்டை பாதுகாக்கும் என்பதற்கு அமைவாகவே ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானம் எடுப்பார்கள். 

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி என்றஅந்தஸ்து உள்ளது. அந்த அதிகாரத்தை வைத்து அரசாங்கத்தை விமர்சிக்கவும் அதேபோல் சர்வதேச மட்டத்தில் கருத்துகளை வெளிப்படுத்தவும் உரிமை உள்ளது. அவர்கள இப்போதும் அதை செய்துகொண்டுதான் உள்ளனர். இலங்கை தொடர்பில் சரவதேச தரப்பிடம் தமக்கான சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இப்போது மட்டுமல்ல ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அவ்வாறான ஒன்றாகவே அமைந்துள்ளது. எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் சர்வதேச தரப்பு ஆராயும். எமது கொள்கைகள் நாம் மேற்கொள்ளும் நகர்வுகள் தொடர்பிலும் ஆராயப்படும். இப்போது நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் பலமான பொறிமுறைகளை கையாண்டு வருகின்றது. முன்னர் அரசாங்கம் செயற்பட்ட விதத்திற்கும் இப்போது நாம் செயற்படும் விதத்திலும் மாறுபாடுகள் உள்ளன. அதேபோல் எமது அரசாங்கதின் செயற்பாடுகளில் முன்னேற்றமும் உள்ளது. இப்போது நாம் எவ்வாறு செயற்பட்டு வருகின்றோம் என்பது தொடர்பில் பொறுமையாக அவதானிக்க வேண்டும். எமது விசாரணைப்பொறிமுறைகள், நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தீர்வு கிடைக்கும் வரையில் அவதானிக்க வேண்டும்.  

மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் தமிழர்களின் பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையும் இப்போது நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதையும் அவதானிக்க வேண்டும். எனினும் இவர்கள் அனைவரும் நாட்டில் நிரந்த தீர்வு ஒன்று பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாது தொடர்ந்தும் குழப்பகரமான அரசியலை முன்னெடுக்கவே முயற்சிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் எமது நிலைப்பாடு மிகவும் உறுதியானது. நாம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஒருபோதும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டோம். இவர்கள் ஜெனிவாவில் யாரை சந்தித்தாலும், என்ன காரணிகளை முன்வைத்தாலும் அரசாங்கத்தின் மீதுள்ள சர்வதேச நாடுகளின் பார்வையும் எம்மீதான நம்பிக்கையும் மாறப்போவதில்லை. அதற்கான உறுதியான ஆதாரம் இம்முறை ஜெனிவா தீர்மானத்தில் அனைவரும் அறியக்கூடிய வகையில் இருக்கும். 

அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமைமையிலான இந்த தேசிய அரசாங்கத்தில் உறுதியான நிரந்தத் தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம். அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி ஐக்கிய இலங்கையில் அனைத்து இன மக்களுக்கும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுப்போம். எனினும் இந்த சூழல் அமைய வேண்டுமாயின் தமிழர் தரப்பு பொறுமையாக இருக்க வேண்டும். தமிழர் தரப்பின் இத்தனை கால கோரிக்கையும் ஒன்றுகூடி வரும் நிலையில் அதை குழப்பியடிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.