விண்வெளியில் 6 மாதங்களை கழித்து சாதனை படைத்து வெற்றிகரமாக பூமி திரும்பிய பிரித்தானிய விண்வெளிவீரர் அவருடன் அமெரிக்க, ரஷ்ய விண்வெளிவீரர்களும் திரும்புகின்றனர் 

பிரித்தானிய விண்வெளிவீரரான ரிம் பீக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாத காலம் தங்கியிருந்து சாதனை படைத்த பின்னர் பூமியை சனிக்கிழமை வந்தடைந்துள்ளார். 

சொயுஸ் வி.மெ்.ஏ. 19எம் விண்கலம் மூலம் ரிம் பீக்கும் (44 வயது) அமெரிக்க வி்ண்வெளிவீரர் திமோதி கொப்ரா மற்றும் ரஷ்ய விண்வெளிவீரர் யூரி மலென்சென்கோ ஆகியோர் சகிதம் கஸ்கஸ்தானில் பின்தங்கிய பிராந்தியமொன்றில் தரையிறங்கினார். 

அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கழித்த 186 நாட்களின் போது பூமியை 3,000 தடவைகள் வலம் வந்ததுடன் 250 பரிசோதனைகளில் பங்கேற்றிருந்தார். அத்துடன் விண்வெளியில் நடக்கும் செயற்கிரமத்திலும் மரதன் பயிற்சியொன்றிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவர் லண்டன் மரதன் ஓட்டப் போட்டிகளையொட்டியே மேற்படி மரதன் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 

1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானியா சார்பில் விண்வெளிக்குச் சென்ற முதலாவது விண்வெ ளிவீரராக அவர் உள்ளதுடன் விண்வெளியில் நடந்த முதலாவது பிரித்தானிய வீரர் என்ற பெயரையும் பெறுகிறார். 

அவரது சர்வதேச விண்வெளிநிலையத்திலான பூமியைச் சுற்றிய பயணம் 125 மில்லியன் கிலேமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாகும். 

அவர் நாசா விமானமொன்றின் மூலம் நோர்வேக்கு சென்று அங்கிருந்து ஜேர்மனி புறப்பட்டார். அங்கு அவர் கொலொன் நகரிலுள்ள ஐரோப்பிய விண்வெ ளி நிலையத்துக்கு செல்வுள்ளார்.