1956 பொதுத் தேர்தலில் |சிங்களம் மாத்திரம்| என்ற ஒரே பிரச்சினையை மையமாகக் கொண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியும் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போன்று அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற ஒரேயொரு பிரச்சினையை முன்வைத்தே மஹிந்த ராஜபக்ஷவும் அவரது  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலானகூட்டணியும் போட்டியிட்டு வெற்றி பெறப் போகின்றனர். 1956 பொதுத் தேர்தலைப் போன்றே 2020 பொதுத் தேர்தலிலும் இந்த மேலாதிக்க பிரசாரத்தின் சேனைகளாக பௌத்த மதகுருமாரே விளங்கப் போகிறார்கள். உண்மையில் அவர்களது பிரசாரம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. மேலும், முக்கியமாக சிங்கள பௌத்த வேட்பாளர்களை மாத்திரமே சிங்கள வாக்காளர்கள் தெரிவு செய்ய வேண்டுமென்று அவர்கள் பகிரங்கமாகவே வலியுறுத்துகின்றார்கள். 

பௌத்த மதகுருமார் அரசியலில் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென்று விரும்புகின்ற அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான அதிவண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் போன்ற விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்கள். பன்முக சமூகமொன்றில் பௌத்த மதத்தை அரசியல்மயப்படுத்துவதன் விளைவான ஆபத்துக்களை அவர் நிச்சயம் விளங்கிக் கொண்டிருக்கிறார். மிகுந்த அறிவு ஞானத்துடன் பேசுகின்ற இந்த மூத்த மதத் தலைவர் கூறுவதை எவராவது அக்கறையுடன் கேட்பார்களா? நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் ஆட்சி செய்ய வேண்டுமென்று ஆட்சியாளர்களுக்கு பௌத்த  மதகுருமார் ஆலோசனை கூறுவதென்பது பாராட்டத்தக்க ஒரு பண்புதான். ஆனால், மதகுருமார் தாங்களே ஆட்சியாளர்களாகவும் ஆட்சியாளர்களை உருவாக்குபவர்களாகவும் மாற முயற்சிப்பது பௌத்த தர்மத்தின் தூய்மையை மாத்திரமல்ல மதகுருமாருக்கு சமூகத்திலிருக்கும் மதிப்பையும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது. 

19 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்று 1948 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள அரசியல்வாதிகளினால் திட்டமிட்ட முறையில் பேணி வளர்த்து மேம்படுத்தப்பட்ட அரசியல் பௌத்தம் அல்லது ' புதிய பௌத்தத்தின்" வரலாற்றில் ஒரு மைல்கல்லாக 2020 பொதுத் தேர்தல் வருவதற்கான சகல சாத்தியங்களும் இருக்கின்றன. அநகாரிக தர்மபாலவும், வண. வல்பொல ராகுல தேரருமே இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு நாட்டம் கொண்டு அப்போது செயற்பட்டவர்கள். 'இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு. இது விடயத்தில் எவரும் தவறிழைத்து விடக்கூடாது. இலங்கையின் சனத்தொகையில் 70 சதவீதமானவர்கள் பௌத்த - சிங்கள மக்கள். இலங்கையே தான் உலகிலுள்ள ஒரேயொரு பௌத்த சிங்கள நாடு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்." இவ்வாறு ராகுல தேரர் தனது நேர்காணல்களில் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ( ஜாதிக ஹெல உறுமயவும் இலங்கையில் இனத்துவ, மதவாத அரசியலும் என்ற தங்களது நூலொன்றில் 2008 ஆம் ஆண்டில் நீல் டிவோட்டாவும், யாசன் ஸ்டோனும் ராகுல தேரரின் இந்த கூற்றை மேற்கோள் காட்டி இருந்தார்கள்) . 

உண்மையில் தர்மபாலவும் ராகுல தேரரும் இலங்கை மீதான 450 வருடகால கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக்கான எதிர்ப்பை வெளிக்காட்டியே அத்தகைய கருத்தை முன்வைத்தார்கள். 1948 இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமே பல இனத்தவர்களையும் பல கலாசாரங்களையும் கொண்ட இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்க தேசமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட முதன்முதலான சட்டவாக்க நடவடிக்கையாகும். அந்த நேரத்தில் அந்த சட்ட மூலத்துக்காக வாக்களித்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க நோக்கத்தை அடைவதற்காக ஜனநாயகம் எவ்வாறு கடத்திச் செல்லப்படப்  போகின்றது என்பதைப்பற்றி எந்தவிதத் தடயமும் தெரிந்திருக்கவில்லை. 

அரசியல் பௌத்த நாடகத்தின் மிகவும் பிந்திய காட்சி 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் மேடையேற்றப்பட்டது. பௌத்த மேலாதிக்க பிரச்சினையையே முழுமையான பிரசாரப் பொருளாகக் கொண்டமைந்த அந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி, மேலாதிக்கவாதிகளின் ஒரு வெற்றியாக அமைந்தது. இருந்தும் கூட, மேலாதிக்க வாதிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப செயற்பட்டு, இலங்கையை நூற்றுக்கு நூறு வீதம் பௌத்தர்கள் ஆட்சி செய்கின்ற நாடாக மாற்றுவதில் தற்போது அரசியலமைப்பு ரீதியான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் ஜனாதிபதிக்கு தற்போதைய அரசியலமைப்பை முற்றாக இல்லாமல் செய்து புதியதொரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய அல்லது அதில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதைச் செய்வதற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது அவசியமானது. ஏப்ரல் பொதுத் தேர்தல் அந்த இலக்கிற்கான போராட்டத்தின் சமர்க்களமாக அமையும். நாட்டின் பொருளாதாரத்தை, மக்களின் நலன்களை, வெளியுறவை, உள்நாட்டு அமைதியைப் பாதிக்கின்ற ஏனைய சகல பிரச்சினைகளுமே இந்த தேர்தல் பிரசாரத்தின் போது பின்னணிக்குத் தள்ளப்படும். 

இந்த அரசியல் சமரில் பொதுவில் சிறுபான்மை வேட்பாளர்கள் குறிப்பாக முஸ்லிம் வேட்பாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரை அரசியல் ரீதியில் தீண்டத்தகாத ஒரு வர்க்கத்தினராக மாறியிருக்கிறார்கள். பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட விரும்பிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அந்த கட்சியின் பிரதம அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ சுயேச்சைக் குழுவாக அல்லது இன்னொரு பிரிவினருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக  பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளுமாறு ஆலோசனை தெரிவித்தததாக கூறப்படுகின்றது. அந்த இரு வேட்பாளர்களும் பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்டால் 2000 வாக்குகளைக்கூட பெற மாட்டார்களென பசில் வாதித்திருக்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. அதற்கு முற்றிலும் எதிரானது. அதாவது, முஸ்லிம் வேட்பாளர்கள் பொதுவாக பொதுஜன பெரமுன அங்கீகாரம் வழங்கினால்  அந்த வேட்பாளர்கள் அல்ல பொதுஜன பெரமுனவே சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளின்  கோபத்தை சம்பாதித்து பௌத்த வாக்குகளை இழக்க வேண்டிவரும். மேலாதிக்கவாதக் கோட்பாடு பொதுஜன பெரமுனவின் கொள்கைகளையும் நிகழ்ச்சிநிரலையும் இந்தளவுக்கு மாற்றியமைத்திருக்கிறது. 

பௌத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 40 சதவீதமான வாக்குகளையாவது கைப்பற்றக்கூடியதாக இருக்குமென்றால் முஸ்லிம் ஆதரவின்றி தனியாகப் போட்டியிடுவதை ஐக்கிய தேசிய கட்சி கூட விரும்பும். தங்களுக்குத் தேவையான வாக்குகள் தமிழர்களிடமிருந்து வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கக்கூடும். முஸ்லிம்களை நோக்கிய மனோபாவத்தில் அத்தகைய ஒரு பெரிய திருப்பம் ஏற்படுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் சிலரின் அண்மைய கடந்தகால நடவடிக்கைகளும் பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை. அந்தத் தலைவர்களை தெரிவு செய்தமைக்காக பெரியதொரு விலையை செலுத்துவதற்கு முஸ்லிம் சமுதாயம் முழுவதும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. எனது முன்னைய சில ஆய்வுகளில் நான் சுட்டிக்காட்டியிருந்த முஸ்லிம் சமூகத்திற்குள் இடம்பெற்ற ஏனைய நிகழ்வுப் போக்குகளும் இதில் ஒரு பங்கையாற்றியிருக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் அமையக்கூடிய மேலாதிக்கவாத ஆட்சியொன்றில் இரு சிறுபான்மை சமூகங்களையும் சேர்ந்த ஓரிரு காட்டிக்கொடுப்பவர்கள் இருக்கவே செய்வார்கள். தேசியப்பட்டியல் மூலமாகவாவது அவர்கள் பாராளுமன்றத்pற்கு கொண்டு வரப்பட்டு அமைச்சு பதவிகளும் வழங்கப்படலாம். ஆனால், பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய ஒவ்வொரு முக்கிய தீர்மானத்திற்கும் ஆதரவாக பாராளுமன்றத்தில் முதலில் கைத்தூக்குபவர்களாக அந்த அமைச்சர்களே இருப்பார்கள். அவர்கள் வெறுமனே ஒரு சம்பிரதாயப்பூர்வ அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவுமே இருப்பர். 

தீவிரவாதப் போக்குடைய பிக்குகளினாலும் அவர்களுடைய சீடர்களினாலும் பகிரங்கமாக சிறுபான்மை இனங்களுக்கு  விரோதமான உணர்வுகளும் பௌத்த அடிப்படைவாத உணர்வுகளும் வெளிப்படுத்தப்படுகின்ற தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவற்றைத் தடுப்பதற்கோ அல்லது அவற்றின் கடுமையையேனும் குறைப்பதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி தமிழருடன் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் எந்த ஒரு ஏற்பாட்டையும் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றார். முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த வெறியர்களினால் மேற்கொள்ளப்பட்ட மூன்று ஆத்திரமூட்டூம் சம்பவங்கள் தொடர்பிலும் (நெலும்தெனிய, சிலாபம் மற்றும் மஹர பகுதிகளில் இடம்பெற்றவை) எந்தவிதமான நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. இவையெல்லாம் வியத்மக அமைப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற மேலாதிக்கவாதிகளின் ஒரு கைதியாக ஜனாதிபதி மாறியிருக்கிறார் என்பதையே வெளிக்காட்டுகின்றன. அதே குழுவினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவின் தiலைமையில் அமையக்கூடிய புதிய அரசாங்கத்தின் கீழும் இந்த நிலைவரங்களில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை. எனவே, சிங்கள  பௌத்த மேலதிக்கத்தினை உறுதி செய்யும் பிரச்சினையை பிரதான பிரசாரப் பொருளாகக் கொண்டமையப்போகும் இந்;த பாராளுமன்ற தேர்தலின் சிறுபான்மை சமூகங்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள் தான் எவை? மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளாகவே இருக்கின்றன. 

மேலாதிக்கவாதிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் அவர்களின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் தடுக்கவும் பலம் பொருந்தியதும் ஐக்கியப்பட்டதுமான ஒரு எதிரணி தேவை.  ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளையும் இரு சிறுபான்மை சமூகங்களுக்கிடையேயும் அவற்றுக்கு உள்ளும் நிலவுகின்ற ஐக்கியமின்மையையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது அத்தகையதொரு பலம்பொருந்திய எதிரணி தற்சமயம் கானல் நீராகவே தெரிகிறது. ஏப்ரல் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து எவ்விதமான நம்பிக்கையையும் கொண்டிருக்க முடியாதளவுக்கு ஐக்கிய தேசிய கட்சி பல குழுக்களாகப் பிளவுபட்டு உள்ளது. (இந்தப் பிளவுகளின் பின்னணியில் பொதுஜன பெரமுன தேர்தலில் வெற்றி பெறுவதை விரும்புகின்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பிரிவின் நோக்கமும் இருக்கிறது. அதாவது, கடந்த காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்காக அந்த பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தண்டிக்கப்படாதிருப்பதை மஹிந்த - கோத்தாபய அரசு உறுதி செய்யும் என்ற புரிந்துணர்வும் இருக்கிறது).  சுருக்கமாக சொல்வதானால் மஹிந்;த ராஜபக்ஷ தலைமையிலான மேலாதிக்கவாத அரசாங்கமொன்று அமைவதை தடுத்து நிறுத்த முடியாது.   

இனத்துவ அரசியலும் மத அடிப்படை வாதமும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவற்றின் உச்சங்களை தொடும். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மிகவும் ஆரம்பத்திலிருந்தே இலங்கையர்களின் தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அரசாங்கமும் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. தேசிய ரீதியில் சகல சமூகங்களையும் அரவணைப்பதற்கு பதிலாக சமூகங்கள் மீது பாரபட்சம் காட்டி ஒதுக்கும் செயற்பாடுகளே எப்போதும் முன்னுரிமை பெற்றன. 2009 மேயில் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு உடனடியாக பாராளுமன்றத்தில் வெற்றி உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, எதிர்காலத்தில் இலங்கையில் சிங்களவர்களோ, தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ இருக்கமாட்டார்கள். இலங்கையில் இலங்கையர்கள் மாத்திரமே இருப்பார்கள் என்று பிரகடனம் செய்தார். அப்போது நிலைவரங்களில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்படுமென்ற நம்பிக்கைக்கீற்று தென்பட்டது. ஆனால் ஐயகோ, பௌத்த மேலாதிக்கவாதிகள் தங்களது கவனத்தை தமிழர்களிலிருந்து முஸ்லிம்களுக்குத் திசை திருப்பிய போது அந்த நம்பிக்கை தகர்ந்து போனது. முஸ்லிம்களுக்கெதிரான பிரசாரங்களையும் நடவடிக்கைகளையும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெறுமனே கைக்கட்டிப் பாரத்துக்கொண்டு இருந்தது. 2015 க்குப் பிறகு வஞ்சக நோக்கம் கொண்ட சிறிசேனாவினதும் செயல்திறனற்ற விக்கிரமசிங்கவினதும் தலைமையின் கீழான ஆட்சி மாற்றம் நிலைவரங்களை மேலும் மோசமாக்கியது. நாடும் அதன் சிறுபான்மை சமூகங்களும் ஒரு முட்டுச்சந்துக்குள் தள்ளப்பட்டன. அடுத்த பாராளுமன்றத்தில் பலம் பொருந்தியதும் ஐக்கியப்பட்டதுமான எதிரணியொன்று இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இருண்டதொரு எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கப்போகின்றனர்.

கலாநிதி அமீர் அலி