நாட்டை பாது­காக்கும் பொலிஸ் துறை, நாட்டில் நீதியை நிலை­நாட்டும் நீதித்­துறை போன்றே சமூ­கத்தின் குறை நிறை­களை சுட்­டிக்­காட்டி அநீ­திக்கு எதி­ராக குரல் கொடுப்­பதில் ஊட­கத்­து­றையும் ஒரு நாட்டில் முக்­கிய பங்கு வகிக்­கின்­றது.
ஊடகத்துறையில் பிர­வே­சிக்கும் ஆண்கள்  அச்­சு­றுத்­தல்கள், உயி­ரி­ழப்பு போன்ற உச்­ச­க்கட்ட சவால்­க­ளுக்கு முகம்கொடுக்கும் அதே­வேளை  பெண்கள் ஆண்­களை விட மாறு­பட்ட சவால்­க­ளுக்கும் சமூக அடக்­கு­மு­றை­க­ளுக்கும் முகம்கொடுக்க நேரி­டு­கின்­றது.

இவ்­வாறான சவால்­களை வெற்­றி­க­ர­மாக கடந்து செல்­வ­தற்கு பெண் ஊட­க­வி­ய­லா­ளர்­களை ஊக்­கப்­ப­டுத்தும் நோக்­கிலும் பெண் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பாது­காப்­பினை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும்,  இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் புது­டில்­லியில் அமைந்­துள்ள  யுனெஸ்­கோவும் இணைந்து “ஊட­கத்­துறை மற்றும் பெண்­க­ளுக்­கான பாது­காப்பு” எனும் தொனிப்­பொ­ருளில் பெண் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான இரண்டு நாள் பயிற்­சிப்­பட்­ட­றை­யினை முன்­னெ­டுத்­தன.

இப்­ப­யிற்­சிப்­பட்­ட­றையில் இன்­றைய கால­கட்­டத்தில் உல­க­ளா­விய ரீதியில் பெண் ஊட­க­வி­ய­லாளர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் பற்றி ஆரா­யப்­பட்­ட­துடன், அவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்கொடுக்க நேரிடும்போது தம்மை பாது­காத்து கொள்­வ­தற்­கான சிறந்த வழிகள் தொடர்பில் துறை சார்ந்த நிபு­ணர்­களை கொண்டு பயிற்றுவிக்­கப்­பட்­டது.
இப்­ப­யிற்­சிப்­பட்­ட­றையில் வழங்­கப்­பட்ட வழி­காட்­டல்கள் மற்றும் பாது­காப்பு நெறி­மு­றைகள் குறித்து நோக்­கு­கையில்,
இன்­றைய கால­கட்­டத்தில் பெண்கள் விண்­வெ­ளியில் கால் பதித்­துள்ளபோதிலும் பல நாடு­களில் வாழும் பெண்கள் வீட்­டுக்கு வெளியில் கால் வைப்­பதே கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

எனினும் பெண்­களின் ஊட­க­ப்பி­ர­வேசம் பாலின சமத்­து­வத்தை ஊக்­கு­விப்­ப­தற்கும் கருத்துச் சுதந்­தி­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும்  முக்­கிய கார­ணி­யாக அமை­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபை வலி­யு­று­த்துகின்­றது.
இதற்­க­மைய பாலின பேத­மின்றி ஊட­கத்­து­றையில் பெண்­களின்  பங்­க­ளிப்பு அமைய வேண்­டு­மாயின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையை நீக்­கு­வது, பெண் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் திறனை வளர்ப்­பது அவ­சி­ய­மான ஒன்­றாக இருப்­ப­தாக யுனெஸ்கோ கரு­து­கின்­றது.


1992 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் பெண் ஊட­க­வி­ய­லாளர்கள் 96 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்­ள­தாக  ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காப்­ப­தற்­கான குழு  (Committee to Protect Journalists) அதன் இணை­யத்­தளத்தில் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

இக்­கு­ழு­வினால், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யின்­படி, 2017 ஆம் ஆண்டில், 42 ஊட­க­வி­ய­லா­ளர்கள் உல­க­ளவில் தங்கள் ஊட­கப்­ப­ணியின் கார­ண­மாக கொல்­லப்­பட்­டுள்­ளனர். இதில் 19 சத­வீ­த­மா­ன­வர்கள் பெண்கள் என்­ப­துவும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, 2020 ஆம் ஆண்டில் 31 பெண் ஊட­க­வி­ய­லா­ளர்கள் உலகம் முழு­வதும் சிறை பிடிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களுள் ஈரானின் பத்து ஊட­க­வி­ய­லா­ளர்­களும், துருக்­கியை சேர்ந்த 9 ஊட­க­வி­ய­லா­ளர்­களும், சீனாவை சேர்ந்த ஆறு ஊட­க­வி­ய­லா­ளர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இவ்­வா­றான சூழ்­நி­லையில், ஊடகத்துறையில் பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிப்­ப­தற்­காக அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பாது­காப்பு என்­பது ஊட­க­வி­ய­லா­ளர்கள் உடல் அல்­லது தார்­மீக அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­ளாமல் தக­வல்­களைப் பெறவும், தயா­ரிக்­கவும், பகிர்ந்துகொள்­ளவும் வழங்­கப்­ப­டு­கின்ற சுதந்­தி­ர­மாகும்.  
ஒரு நாட்டில் ஊட­கத்­து­றையில் பெண் ஊட­க­வி­ய­லா­ளரின் பங்கு அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சுதந்­திரம் மற்றும் பாது­காப்பை கொண்டு ஒட்டு மொத்­த­மாக  நாட்டில் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் பாது­காப்­பையும் சுதந்­தி­ரத்­தையும் மதிப்­பிட முடியும்.

தமது வாழ்­நாளில் மகள், மனைவி, தாய், என பல பொறுப்­பான பத­வி­களை ஏற்கும் ஒரு பெண், ஊட­க­வி­ய­லாள­ரான தமது பய­ணத்தை தொடரும்போது, பாலின பாகு­பா­டுகள், பாலியல் துன்­பு­றுத்­தல்கள், தாக்­கு­தல்கள் போன்­ற­வற்­றுக்கு முகம்கொடுக்க நேரி­டு­கின்­றது. இதன் கார­ண­மாக  உடல், உள ரீதி­யாக ஒரு பெண் மிகவும் பாதிப்­புக்­குள்­ளா­கிறார்.
இவ்­வா­றான சூழ்­நி­லையில் அர­சியல், பொரு­ளா­தாரம் மற்றும் பொது வாழ்வில் அனைத்து மட்­டங்­க­ளிலும் தீர்­மானம் மேற்­கொள்­ளுதல் மற்றும் தலை­மைத்­துவம் ஆகி­ய­வற்றில் பெண்­களின் பங்­க­ளிப்­பினை உறுதி செய்­வ­தற்­கான உல­க­ளா­விய தீர்­மா­னத்தை நிவர்த்தி செய்யும் 2030 நிகழ்ச்சி நிர­லிற்கு அமைய யுனெஸ்கோ இப்­ப­யிற்சி பட்­ட­றையை முன்­னெ­டுத்­துள்­ளது.

ஊட­கத்­து­றையில் பணி­பு­ரியும் பெண் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் திறனை வளர்ப்­ப­தற்­காக வடி­வ­மைக்­கப்­பட்ட இந்த பயிற்­சிப்­பட்­டறை, பணி­யி­டத்தில் துன்­பு­றுத்தல் மற்றும் இணைய பாது­காப்பு, தற்­காப்பு,  சட்­ட­ரீ­தி­யான பாது­காப்பு, உள­வியல் பாது­காப்பு உள்­ளிட்ட  முக்­கிய விட­யங்கள் பற்றி விரி­வாக ஆரா­யப்­பட்­டது.

தம்மை  பாது­காத்துக் கொள்­வ­தற்கு ஒவ்­வொரு ஊட­க­வி­ய­லாளரும் பொறுப்­பு­டை­ய­வர். எனவே தாம் முகம் கொடுக்கும் சவால்­களை சட்­ட­ரீ­தி­யா­கவும் பௌதீக ரீதி­யா­கவும் உள­வியல் ரீதி­யா­கவும் எதிர்­கொள்­வ­தற்கு போதிய தெளிவை பெற்­றி­ருத்தல் முக்­கிய கடப்­பா­டாகும். இக்­க­டப்­பாட்டை பூர்த்தி செய்­வதில் இப்­ப­யிற்சிப்பட்­டறை சிறந்த தெளிவை வழங்­கி­யிருந்­தது.செய்தி அறிக்­கை­யி­டலில் எதிர்கொள்ளும் சவால்கள்


ஐந்து முக்­கிய பிரி­வு­க­ளாக இடம்­பெற்ற இப்­ப­யிற்­சிப்­பட்­ட­றையில், தற்­போ­தைய நிலையில் ஊட­கத்­து­றையில்  பெண்  ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எதிர்­கொள்ளும் கள அள­வி­லான சவால்கள் பற்றி “டெய்லி பைனா­சியல் டைம்ஸ்“ பத்­தி­ரி­கையின் பிரதி ஆசி­ரியை உதித்த ஜெய­சிங்க உட­னான கலந்­து­ரை­யாடல் இடம்பெற்­றது.

இதன்போது களத்­திற்கு சென்று செய்­தி­யொன்றை பதிவு செய்யும்போது ஊட­க­வி­ய­லாளராக ஒரு பெண் எதிர்நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து ஆரா­யப்­பட்­டது. செய்­தியனை வடி­வ­மைக்கும்போதும் அதனை பிர­சு­ரிக்கும்போதும் ஊடக தர்மம் பேணப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

ஒரு செய்­தியை பிர­சு­ரிக்கும் ஊட­க­வி­ய­லாளர்  அச்­செய்­தி­யுடன் தொடர்­பு­டைய புகை­ப்ப­டங்கள் உள்­ளிட்ட அனைத்து தர­வு­க­ளுக்கும் தாம் பொறுப்­பு­டை­யவர் என்­பது தொடர்ந்தும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஒரு செய்­தியை அறிக்­கை­யிட செல்லும் முன்­பாக நாம் அதற்­கான படி­மு­றை­களை திட்­ட­மி­டுதல் அவ­சியம்.
குறிப்­பாக செல்ல வேண்­டிய இடத்­திற்­கான வரை­படம், சந்­திக்க வேண்­டிய நபர்கள், அவர்­க­ளிடம் வின­வப்­பட வேண்­டிய வினாக்கள், அவர்­க­ளுக்­கான நேரம் மற்றும் ஊட­க­வி­ய­லாளரின் பாது­காப்பு, தங்­கு­மிடம், உணவு உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் முன்­னா­யத்­தத்தை மேற்­கொள்­ளுதல் கட்­டா­ய­மா­ன­தாகும்.

சட்ட ரீதி­யி­லான பாது­காப்பு

இதனைத் தொடர்ந்து தொழில் புரியும் பெண்­க­ளுக்­கான சட்ட கட்­ட­மைப்பு   மற்றும் பாது­காப்பு குறித்து சட்­ட­த­்தர­ணியும் ஊட­க­வி­ய­லாள­ரு­மான ராதிகா குண­ரத்­த­வினால் பல விட­யங்கள் தெளிவுபடுத்­தப்­பட்­டன.
பெண்கள் ஆண்­க­ளை­விட மாறு­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கின்­ற­மையால் அவர்­களை பாது­காக்க விசேட சட்­டங்கள் தேவை என்­பதை சட்­ட­த்த­ரணி விளக்­கினார்.

மேலும், இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை உரி­மைகள் அத்­தி­யாயம் பெண்­களின் சமத்­து­வத்­திற்கு உத்­த­ர­வாதம் அளிக்­கி­றது, மேலும், பெண்­களைப் பாது­காக்­கவும் அதி­காரம் அளிக்­கவும்  சர்­வ­தேச மனித உரிமை ஆணை­யத்­துடன் ஒப்­பந்­தங்­களில் இலங்கை அரசு கைச்­சாத்­திட்­டுள்­ளது.

1993இ-ல் வியான்­னாவில் நடந்த ""உலக மனித உரிமை மாநாட்டில்'' பெண்­களின் உரி­மை­களை மீறுதல் மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இதற்­க­மைய பணி­யி­டங்­களில் மற்றும் பொது இடங்­களில்  பெண்­களின் உரி­மைகள் மறுக்­கப்­படும்போதும், துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு  உள்­ளாகும்போதும் அது குறித்து சட்­ட­ரீ­தி­யி­லான உத­வியை பெற்று கொள்ள முடியும் என தெளி­வு­ப­டுத்­தினார்.

சர்­வ­தேச நாடு­க­ளுடன் ஒப்­பிடும்போது எமது நாட்டில் பெண்கள் பெண் ஊட­க­வி­ய­லாளர் தொடர்­பான சட்­டங்­களில் உள்ள பின்­ன­டைவு தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

பணி­யி­டங்­களில் எதிர்­கொள்ளும் பாலியல் துன்­பு­றுத்­தல்கள், வார்த்தை பிர­யோ­கங்கள், பாலின பாகு­பா­டுகள் மற்றும் ஊதிய முரண்­பா­டுகள் குறித்து சட்­ட­ரீ­தி­யாக தீர்வு காண்­பது குறித்து தெளி­வூட்­டப்­பட்­டது.
குறிப்­பாக பெண் ஊட­க­வி­ய­லாளர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் குறித்து முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டது.

பணி­யி­டங்­களில் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாதல்,
"சித்­தி­ர­வதை" என்ற வார்த்­தையின் பொருள், உடல் அல்­லது மன­ரீ­தி­யான, கடு­மை­யான வலி அல்­லது துன்பம் ஒரு நப­ரி­ட­மி­ருந்து வேண்­டு­மென்றே அல்­லது அவ­ரி­ட­மி­ருந்து அல்­லது மூன்றாம் நபரின் தகவல் அல்­லது ஒப்­புதல் வாக்­கு­மூலம், தண்­டனை போன்ற நோக்­கங்­க­ளுக்­காக விதிக்­கப்­படும் எந்­த­வொரு செய­லையும் குறிக்­கி­றது.
பணியில் இருந்து வெளி­யேற்­றப்­படல்.
டிஜிட்டல் பாது­காப்பைக் குறை­ம­திப்­பிற்கு உட்­ப­டுத்­துதல்.
கட்­டா­ய­மாக காணாமல் போதல் மற்றும் பண­யக்­கை­தி­க­ளாக்கி மிரட்டல் மற்றும் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாதல்.
அலு­வ­ல­கங்கள் மற்றும் ஊட­கங்கள் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகும்போதும் மூடப்­படும் போதும் பாதிப்­ப­டைதல்.
ஊட­க­வி­ய­லா­ளர்­களின் ஆதா­ரங்­களின் இர­க­சி­யத்­தன்மை மீதான தாக்­கு­தல்கள்.
சட்­ட­வி­ரோத அல்­லது தன்­னிச்­சை­யான கண்­கா­ணிப்பு மற்றும் தகவல் தொடர்பு இடை­ம­றிப்பு.
தன்­னிச்­சை­யான தடுப்­புக்­காவல் மற்றும் தன்­னிச்­சை­யான கைது.
கொலை மற்றும் பாலியல் உள்­ளிட்ட பிற வகை­யான கொடுமை.
பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் சுயா­தீ­ன­மாக மற்றும் தேவை­யற்ற குறுக்­கீடு மூலம் பணி­யாற்­று­வ­தற்­கான திறனைத் தடுக்க அல்­லது கட்­டுப்­ப­டுத்த தேசிய சட்­டங்­களை தவ­றாகப் பயன்­ப­டுத்­துதல்

ஆகிய கார­ணங்­க­ளுக்­காக குறிப்­பாக பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் சட்­டத்தின் உத­வியை நாடு­வ­துடன் தனக்­கான உறி­மையை பாது­காத்­துக்­கொள்­ள­மு­டியும் என சட்­ட­த­்தரணி விளக்­க­ம­ளித்தார்.

உள­வியல் ரீதி­யி­லான பாது­காப்பு

பணி­யி­டங்­களில் பெண்கள் எதிர் கொள்ளும் உடல், உள ரீதி­யி­லான சிக்­கல்கள் பெண்­களின் சுகா­தார ரீதி­யாக மிகவும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஒரு பெண் முகம் கொடுக்கும்  அதிர்ச்சி மற்றும் “மன­ அ­ழுத்தம் குறித்து குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­களின் மன­வள ஆரோக்­கிய நிபுணர்“ கிசெல் தாஸ் கலந்­து­ரை­யா­டினார்.
மகள், மனைவி, தாய் என பல பரி­மா­ணங்­களில் செய­லாற்றும் ஒரு பெண் ஊட­க­வி­ய­லாள­ராக பணி­யி­டங்­களில் மன அழுத்­தத்­திற்கு உள்­ளாகும் கார­ணிகள் குறித்து ஆரா­யப்­பட்­ட­துடன், தம் மன அழுத்­தத்­துக்கு உள்­ளாகும் போது, ஓர் இடை­வே­ளையைப் பெற வேண்­டி­யதன் அவ­சியம் உணர்த்­தப்­பட்­டது.

வேலைப்­பளு அதி­க­ரிக்­கும்­போது சக பணி­யா­ளர்­க­ளுடன் முரண்­பட நேரும் சூழ்­நி­லை­களில் தமது ஆரோக்­கியம் குறித்து அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும். தேவை­யான இடை­வெ­ளி­களில் விடுப்பு எடுத்­து­க்கொள்­வது ஒரு பெண்ணின் ஆரோக்­கிய மேம்­பாட்­டிற்கு அவ­சி­ய­மான கார­ணி­யாகும்.

பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை ஆரா­யா மல் அதனைத் தவிர்ப்­பதன் மூலம் மன­ அ­ழுத்தம் அதி­க­மா­கின்­றது. எனவே பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும்போது உரிய நேரத்தில் தீர்வு காண்­பது முக்­கி­ய­மாகும்.
அத்­துடன் உடல், உள நலனை மேம்­ப­டுத்தும் யோகா போன்ற பயிற்­சி­களில் தினம் தோறும் தவறாது ஈடு­ப­டுதல் வேண்டும் என நிபு­ணரால் அறி­வுரை வழங்­கப்­பட்­டது.

டிஜிடல் பாது­காப்பு
ஊட­க­வி­யலா­ளர்­களால் தவிர்க்க முடி­யா­ததும் மிக அதி­க­ளவில் பாதிப்­புக்­குள்­ளாகும் கார­ணி­யாக இணை­யப் ­ப­யன்­பாடு உள்­ளது. சமூ­க­ வ­லைத்­த­ளங்­களின் பயன்­பாட்டின் போது பெண்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் அவர்­களை உள­வியல் ரீதி­யாக பாதிப்­ப­துடன் சில நேரங்­களில் அவர்­களை தற்­கொலை முயற்­சி­க­ளுக்கும் தூண்­டு­கின்­றன.
இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பெண்­களின் டிஜிடல் பாது­காப்பு குறித்து முன்னாள் ரொய்டர் செய்­தி­ச்சே­வையின் நிருபர் ஷிஹார் அனீ­ஸினால் அறி­வு­றுத்­தப்­பட்­டது.

பெண்­களின் உணர்­வு­ரீ­தி­யான பல­வீ­னத்தை ஆயு­த­மாகக் கொள்ளும் சிலர் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி பெண்­களை பாலியல் ரீதி­யாக அடி­மைப்­ப­டுத்தும் பல சந்­தர்ப்­பங்கள் எடுத்­து­ரைக்­கப்­பட்­ட­துடன், அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பெண்கள் தமது பாது­காப்பை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்திக் கொள்­ள ­மு­டியும் என்­பது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.
இதன்­போது சமூக வலைத்­த­ளங்­களில் தனி­நபர் பாது­காப்பு குறித்து காணப்­படும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளான, சுய­வி­ப­ரங்­களை காட்­சிப்­ப­டுத்­து­வதை தவிர்த்தல், சரி­யாக தெரி­யாத நபர்­களை நண்­பர்­க­ளாக இணைப்­பதை தவிர்த்தல், உணர்­வு­க­ளுடன் தொடர்­பு­டைய தக­வல்கள், புகை­ப்ப­டங்கள் போன்­ற­வற்றை இணை­யத்தில்(ஒன்லைன்) பகிர்­வதை தவிர்க்­கும்­படி ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

ஒருவர் உணர்வு ரீதி­யாக எம்மைத் தாக்­க­முற்­படும் போது, பதற்றம் அடை­யாது பிரச்­சி­னையின் சிக்கல் தன்­மையை புரிந்து கொள்ள முயற்­சிப்­ப­துடன், வலைத்­த­ளங்­களின் பாது­காப்பு பிரிவை நாடு­வது சிறந்த யோச­னை­யாக முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் அதனை கடந்து பிரச்­சினை தீவி­ர­ம­டையும் பட்­சத்தில் பொலி­ஸா­ரி­னதும் நீதித்­து­றை­யி­னதும் உத­வியை நாடு­வ­தற்கு அறி­வுரை வழங்­கப்­பட்­டது.

தற்­பா­து­காப்பு
ஊட­க­வி­ய­லாளர் என்ற வகையில் ஒரு சம்­பவம் தொடர்பில் அறி­யக்­கி­டைக்கும் போது அதனை பதிவு செய்­வ­தற்கு ஆண், பெண் பேத­மின்றி தயா­ராக இருத்தல் வேண்டும். அவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் ஊட­க­வி­ய­லாளர் தமது பணியை முன்­னெ­டுக்கும் போது கவனம் செலுத்த வேண்­டிய பாது­காப்பு முன்­னா­யத்­தங்கள்  குறித்து முன்னாள்  ஊட­க­வி­ய­லா­ளரும் தற்­போது இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் அலு­வ­ல­ரு­மான கமல் லிய­னா­ராச்சி சிறப்­பான முறையில் ஆலோ­சனை வழங்­கினார்.

ஒரு சம்­பவம் தொடர்பில் அறி­யக்­கி­டைத்­த­வுடன் ஊட­க­வி­ய­லா­ள­ராக ஒருவர் எப்­போதும் பதற்ற­ம­டையக் கூடாது, முதலில் குறித்த பிர­தே­சத்தின் பொலிஸார் மற்றும் நம்பகமான தரப்பினரை அணுகி, சம்பவம் குறித்து உண்மைத் தன்மை, கள நிலவரம் குறித்து தெளிவைப் பெறுதல் வேண்டும்.

அனைத்து செய்திகளை விடவும் தமது உயிர் முக்கியமானது என்பதை ஒவ்வொரு ஊடகவியலாளரும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். சம்பவ இடத்தில் முகம் கொடுக்க நேரும் பிரச்சினைகள் தொடர்பில் முன்பே யூகித்து அதற்கான முன்னாயத்தங்களுடன் சம்பவத்தைப் பதிவு செய்வதற்கு தயாரா குதல் வேண்டும்.

சம்பவத்தின் தன்மைக்கு ஏற்ப, எமது உடை, காலணி என்பவை குறித்து கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் களத்திற்குச் செல்லும் போது ஊடகவியலாளர் எப்போதும் தமக்கான ஒரு சிறப்பு மேலங்கியை அணிந்திருத்தல் கட்டாயமானது என விளக்கமளிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் என்பதை வெளிப்படுத்தக் கூடாத சந்தர்ப்பதைத் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் இம்மேலங்கியை அணிந்தி ருத்தல் அவசியமாகும். அத்துடன், பாதுகாப்பு உபகரணத் தொகுதி, முதலுதவித் தொகுதி என்பவற்றையும் தம்மு டன் வைத்திருத்தல் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக போரட்டங்கள், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றை அறிக்கையிடச் செல்லும் போது ஊடகவியலாளரின் பாதுகாப்பு தொடர் பான முன்னாயத்தங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அதனைத் தடுப்பது மற்றும் இலகுவான முறை யில் எதிர் தாக்குதல் நடத்துதல் குறித்து இலங்கை டேக்வாண்டோ அமைப்பினால் சில தற்காப்பு பொறிமுறைகள் குறித்து பயிற் சியளிக்கப்பட்டது.

அத்துடன் இவ்வாறான தற்காப்பு கலை ஒன்றை ஒரு பெண் ஊடகவியலாளர் பயிற்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் டேக்வாண்டோ அமைப்பின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளரால் அறிவுரை வழங்கப்பட்டது.


-ஜெயந்தி