நாட்டில்  அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் தொடர்ந்தும்  அதி­க­ரித்து வரு­வ­தனால்   மக்கள்   பெரும் இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.   வரு­மா­னத்­திற்கு மிஞ்­சிய  செல­வு­களால்  மக்கள் தமது வாழ்­வா­தா­ரத்தை    கொண்­டு­செல்­வதில்  பெரும்  கஷ்­டங்­களை  சந்­தித்து­ வ­ரு­கின்­றனர்.   எரி­பொ­ருட்­களின்  விலை  அதி­க­ரிப்­பா­னது   அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களில்   தாக்­கத்தை  ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.


தற்­போ­தைய நிலையில் சர்­வ­தேச சந்­தையில்  மசகு எண்­ணெயின் விலை பாரி­ய­ளவில்  வீழ்ச்சி கண்­டுள்­ள­போ­திலும் எம­து­ நாட்டில்    எரி­பொ­ருட்­களின் விலைகள் இன்­னமும்  குறைக்­கப்­ப­ட­வில்லை.   சர்­வ­தேச சந்­தையில்   மசகு எண்­ணெயின் விலை அதி­க­ரித்­தி­ருந்­த­போது  தீர்­மா­னிக்­கப்­பட்ட விலை­யி­லேயே எரி­பொருட்கள் தொடர்ந்தும்  விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றன.  இதே­போன்றே  எரி­வா­யுவின் விலையும் சர்­வ­தேச சந்­தையில்  குறை­வ­டைந்­துள்­ள­போ­திலும் எமது நாட்டில்  அதன் விலை­யிலும்  மாற்றம்  ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.


சர்­வ­தேச சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் அதி­க­ரிக்­கும்­போது   உள்­நாட்­டிலும்  அதன் விலைகள் அதி­க­ரிப்­ப­துவும்   சர்­வ­தேச சந்­தையில்   விலைகள் குறை­வ­டை­யும்­போது   அதன் பலா­ப­லன்­களை   மக்கள்   அனு­ப­விக்க   முடி­யாத  நிலை­மையை    உரு­வாக்­கு­வதும்  எமது நாட்டில்  தொடர்ச்­சி­யாக  இடம்­பெற்­று­வரும்   விட­யங்­க­ளா­கவே  மாறி­யி­ருக்­கின்­றன.


சர்­வ­தேச சந்­தையில்  மசகு எண்­ணெயின் விலை  வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­மை­யினால் உள்­நாட்­டிலும்  எரி­பொ­ருட்­களின் விலை­களை  குறைக்­க­வேண்டும் என்று   பிர­தான எதிர்க்­கட்­சி­யான  ஐக்­கிய தேசி­யக்­கட்சி  தற்­போது  கோரிக்­கை ­வி­டுத்­துள்­ளது.  முன்னாள்  எதிர்க்­கட்சித் தலை­வரும்   ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச   இந்தக் கோரிக்­கை­யினை விடுத்­தி­ருக்­கின்றார்.  


கொழும்பில் நேற்று முன்­தினம்  செய்­தி­யாளர் மாநா­டொன்­றினை நடத்­திய  அவர்   சர்­வ­தேச சந்­தையில்   மசகு  எண்­ணெயின் விலை  வீழ்ச்சி கண்­டுள்ள நிலையில் இலங்­கையில்  எரி­பொ­ருட்­களின் விலையை  41 வீதத்தால் குறைக்க முடியும்.  ஆகவே  உட­ன­டி­யாக   எரி­பொருள்  மற்றும்  எரி­வா­யுவின் விலை­களை அர­சாங்கம்   குறைக்­க­ வேண்டும் என்று   வலி­யு­றுத்­தி­யுள்ளார்.


கடந்த ஆண்டில்  மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை   62.85  அமெ­ரிக்க டொல­ராக    இருந்த நிலையில்  தற்­போது   அதன் விலை 36.79  அமெ­ரிக்க டொல­ராக குறை­வ­டைந்­தி­ருக்­கி­றது.  எனவே  எமது நாட்டில்  எரி­பொ­ருட்­களின் விலைகள் பாரிய அளவில்  குறைக்­கப்­ப­ட­வேண்டும்.  எரி­வா­யுவின் விலையும் 30 சத­வீ­தத்தால் குறை­வ­டைந்­துள்­ளது.  அதற்­கேற்­ற­வ­கையில் அதன் விலை­யையும் குறைக்­க­ வேண்டும்.  சர்­வ­தேச சந்­தையில்  எரி­பொருட்­களின்  விலைகள் குறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும்  அர­சாங்கம்  மக்கள் பக்கம்   சிந்­திக்­கா­துள்­ளமை   ஏன்  என்றும்  சஜித் பிரே­ம­தாச  கேள்வி எழுப்­பி­யுள்ளார்.


சர்­வ­தேச சந்­தையில்  எரி­பொ­ருட்­களின் விலைகள் குறை­வ­டைந்­துள்­ள­மையின்படி இலங்­கையில் பெற்றோல் 70 ரூபா­வுக்கும் டீசல்  60 ரூபா­வுக்கும்  மண்­ணெண்ணெய் 40 ரூபா­வுக்கும் வழங்க முடியும். எரி­வா­யுவின் விலையை  1000 ரூபா­வாக  குறைக்க முடியும். ஆனால் அர­சாங்கம்  தனது செல­வு­களை  இல­கு­ப­டுத்த  விலைக்­கு­றைப்­புக்­களை செய்­யா­துள்­ளது.  ஒரு­மா­த­மாக   எரி­பொருள் விலை­களை  குறைக்­கு­மாறு  கூறியும்  அர­சாங்கம்  அது குறித்து கவனம் செலுத்­த­வில்லை.  உட­ன­டி­யாக எரி­பொருள் விலை­களை அர­சாங்கம்  குறைக்­கா­விடின்   மக்­க­ளுடன் இணைந்து அர­சாங்­கத்தை   ஆட்­டம்­கா­ண ­வைக்கும் போராட்­டத்தை  ஆரம்­பிக்­க­வேண்டி வரும்  என்றும்  சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தி­ருக்­கின்றார்.


எரி­பொருள் விலை­களை குறைக்­க­வேண்­டு­மென்று ஒரு­மா­தத்­திற்கு முன்­னரும்   எதிர்க்­கட்சித் தலை­வ­ராக    சஜித் பிரே­ம­தாச பதவி வகித்­த­போது பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.  அதற்­கான   ஆதா­ரங்­க­ளையும்  அவர்  சமர்ப்­பித்­தி­ருந்தார்.  ஒரு­மா­தத்­திற்கு முன்னர்  10 வீத­மாக   மசகு எண்­ணெயின் விலை  குறை­வ­டைந்­தி­ருந்­தது. தற்­போது   பாரி­ய­ளவில்  விலையில் வீழ்ச்சி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
இந்த விடயம் தொடர்பில்  முன்னாள் நிதி அமைச்­ச­ரான மங்­கள சம­ர­வீ­ரவும் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  ஐக்­கிய தேசி­யக்­கட்சி அறி­மு­கப்­ப­டுத்­திய எரி­பொருள் விலை சூத்­தி­ரத்தை தற்­போது செயற்­ப­டுத்­தி­யி­ருந்தால் எரி­பொ­ருட்­களின் விலை  20 ரூபாவால் குறைந்­தி­ருக்­கு­மென  மங்­கள சம­ர­வீர   கூறி­யுள்ளார்.  


கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில்   நிதி அமைச்­ச­ராக  மங்­கள சம­ர­வீர  பதவி வகித்­த­போது   மாதம்­தோறும் எரி­பொருள் விலை­களை   தீர்­மா­னிப்­ப­தற்­காக   எரி­பொருள் விலை சூத்­தி­ரத்­தினை   அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.   இதற்­கி­ணங்க  மாதம்­தோறும் 10ஆம் திகதி   இந்த எரி­பொருள் சூத்­தி­ரத்­திற்கு அமைய எரி­பொ­ருட்­களின் விலைகளில் மாற்றம்  ஏற்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது.  


அன்­றைய கால­கட்­டத்தில் சர்­வ­தேச சந்­தையில்   எரி­பொ­ருட்­களின் விலைகள்  அதி­க­ரித்­தி­ருந்­த­மை­யினால்   உள்­நாட்­டிலும்  மாதந்­தோறும் அதன் விலை­களில் அதி­க­ரிப்பு ஏற்­பட்டு வந்­தது.   அந்­த­வே­ளையில்   விலை சூத்­தி­ரத்­திற்கு எதி­ராக   அன்­றைய  எதி­ர­ணி­யாக இருந்த  பொது­ஜன பெர­முன   பெரும்  எதிர்ப்­பினை  தெரி­வித்து வந்­தது.  சர்­வ­தேச சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் அதி­க­ரிக்­கும்­போது   நாட்டில்   அதன் விலை­களில் அதி­க­ரிப்­பதும்   சர்­வ­தேச சந்­தையில் குறை­வ­டையும்போது  உள்­நாட்­டிலும்  எரி­பொ­ருட்­களின் விலை­களை குறைப்­ப­தற்கும் அர­சாங்­க­மொன்று   தேவையா என்றும் எதி­ர­ணி­யினால் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது.


அன்று விலை சூத்­தி­ரத்தை  அர­சாங்கம்  அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­போ­திலும்  மக்­க­ளுக்கு  நன்மை கிடைக்­க­வில்லை. ஏனெனில், சர்­வ­தேச சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் அதி­க­ரித்து வந்­ததே தவிர குறை­வ­டை­ய­வில்லை.  ஆனால் தற்­போது  மசகு எண்­ணெயின் விலை  பெரு­ம­ளவு குறை­வ­டைந்­துள்­ள­மை­யினால்  அதன் பலா­ப­லன்கள் உள்­நாட்டு மக்­க­ளுக்கும்  கிடைக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.
சர்­வ­தேச சந்­தையின் விலைக்­கேற்ப உள்­நாட்­டிலும்  எரி­பொ­ருட்­களின் விலை­க­ளையும்    எரி­வா­யுவின் விலை­யையும் குறைப்­ப­தற்கு அர­சாங்­க­மா­னது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை  எடுக்­க­வேண்டும்.  எரி­பொ­ருட்­களின் விலைகள்  பெரு­ம­ளவில் குறை­வ­டை­யு­மானால் அதன்  மூல­மாக அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின்   விலை­களும் உண­வுப்­பண்­டங்­களின் விலை­களும் குறை­வ­டையும் நிலை­மையை உரு­வாக்க முடியும்.


இந்த  விடயம் தொடர்பில்  அர­சாங்கம்   கவனம் செலுத்தும் என்று பொது­ஜன பெர­மு­னவின் முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர்  ஜானக வக்­கும்­பர   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.   உலக சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் குறை­வ­டைந்­துள்­ள­மை­யினால் அதன் பயனை மக்­க­ளுக்கு  பெற்­றுக்­கொள்ளும் வகையில் இரு வாரத்­திற்குள் எரி­பொ­ருட்­களின் விலைகள் குறைக்­கப்­படும்  என்று  அவர்  கூறி­யுள்ளார்.
இத­னை­விட    ஜனா­தி­பதி தலை­மையில்    புதன்­கி­ழமை  (நேற்று)  நடத்­தப்­படும்   அமைச்­ச­ரவை   கூட்­டத்­தின்­போது   இவ்­வி­டயம் தொடர்பில் இறுதி முடிவு எட்­டப்­படும் என்றும் அவர்    நேற்று முன்­தினம்  நம்­பிக்கை  வெளி­யிட்­டி­ருந்தார்.


சர்­வ­தேச சந்­தையில் எரி­பொ­ருட்­களின் விலைகள் குறை­வ­டைந்­துள்ள நிலையில் அதன் பலா­ப­லன்­களை   நாட்டு மக்கள்   அனு­ப­விக்­க ­வேண்டும்.  அதற்­கேற்ற நட­வ­டிக்­கையை  அமைச்­ச­ரவை  உட­ன­டி­யாக  எடுக்­க­வேண்­டி­யது  அவ­சி­ய­மாக உள்­ளது.  


கடந்த நவம்பர் மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில்   கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெற்­றி­பெற்று ஜனா­தி­ப­தி­யா­ன­தை­ய­டுத்து நாட்டு மக்­க­ளுக்கு வரிச்­ச­லு­கைகள் பல  வழங்­கப்­பட்­டன.  ஆனால்  இந்த  வரிச்சலுகை மூலமாக பொருட்களின் விலைகள்  இன்னமும்  குறைவடையவில்லை.  இந்த விடயம் தொடர்பில்    அரசாங்கத்தரப்பினர்   தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.  விலை குறைப்புக்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும் வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும்   அரசாங்கமானது  கடந்த  ஒரு மாதகாலமாக   சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள்  குறைவடைந்துள்ளபோதிலும்  உள்நாட்டில்  அதன் விலைகளை   குறைப்பதற்கு   நடவடிக்கை எடுக்காமை  தொடர்பில்  எதிர்க்கட்சிகள் தற்போது  சுட்டிக்காட்டியிருக்கின்றன.


எரிபொருட்களின் விலைகள் மற்றும் எரிவாயுவின் விலை என்பவற்றினை   உடனடியாக குறைப்பதன் மூலம்   அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும்  ஓரளவுக்கு  குறைக்க முடியும்.   எனவே  இதனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதியும் அமைச்சரவையும்  செயற்படவேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

( 12.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )