(எம்.மனோசித்ரா)

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலிருந்து இன்றைய தினமும் பெருமளவானோர் இலங்கைக்கு வந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்த அனைவரும் பூணானி மற்றும் கந்தக்காடு மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார். 

வெளிநாடுகளிலிருந்து வழமையாக வருவதைப் போன்று பிரயாணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஊடகங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளால் மக்கள் வீண் அச்சமடைகின்றனர். 

எனவே நாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை தவிர்த்து மக்கள் அச்சமடையாதவாறு விழிப்புணர்வூட்டும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். 

வெளிநாட்டிலிருந்து வரும் பிரஜைகளை பாதுகாப்பான முறையில் மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை முப்படை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.