(இராஜதுரை ஹஷான்)

அடிப்படைவாத கொள்கையற்றவர்களை உள்ளடக்கிய  அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதற்கு தமிழ்  - முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பொதுஜனபெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் முரண்பாடுகள்  காணப்படுகின்றன. இது சாதாரணம். ஆனால் இம்முரண்பாடுகள் ஒருபோதும் கூட்டணியின் வெற்றிக்கு  தடையாக அமையாது. என  அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில்   ஒன்றினைந்துள்ள அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து    பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.தேர்தலை வெற்றிக் கொள்வதற்கான அனைத்து திட்டங்களும்  கூட்டணியின் பொதுச்செயலாளரினால் வகுக்கபபட்டுள்ளது.

இடம் பெற்று முடிந்த  ஜனாதிபதி தேர்தலில்  அறிமுகப்படுத்தி புதிய தேர்தல் பிரச்சார கட்டமைப்பினை பொதுத்தேர்தலிலும்  செயற்படுத்துவோம்.

சுற்றுபுற சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி   விசேடமாக  அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய காலநிலை மற்றும்  உலக  சூழல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு தேர்தல் பிரச்சார  செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அடிப்படைவாத கொள்கைகளற்றவர்களை உள்ளடக்கிய  பலமான அரசாங்கத்தை தோற்றுவிப்பதே பிரதான  எதிர்பார்ப்பாகும். இதற்கு தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.