எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட லண்டனைச் சேர்ந்த நபர் குணப்படுத்தப்பட்டுள்ளார்.

இவரே எச்.ஐ.வி நோயால் குணமடைந்த  உலகின் இரண்டாவது நபராவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆடம் காஸ்டில்லெஜோ 30 மாதங்களுக்கும் மேலாக  ‘ஏ.ஆர்.டி.’ (ART) என்று சொல்லப்படும் ‘ஆன்டி ரெட்ரோவைரல் தெரபி’ எனும் சிகிச்சையிலிருந்து விடுபட்டுள்ளார்.

எச்.ஐ.வி மருந்துகளால் அவர் குணப்படுத்தப்படவில்லை, ஆனால் புற்றுநோய்க்கு அவர் பெற்ற ஸ்டெம் செல் (Stem Cell Treatment) சிகிச்சையாலே குணமடைந்ததாக, லான்செட் எச்.ஐ.வி பத்திரிகை தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டில், டிமோதி பிரவுன் என்ற "பெர்லின் நோயாளி" எச்.ஐ.வி நோயால் குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நபராக ஆவார்,

இதேபோன்ற சிகிச்சையைப் பெற்று மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனைச் சேர்ந்த இரண்டாவது  நபர் குணமடைந்துள்ளார்.

ஸ்டெம் செல் சிகிச்சை (Stem Cell Treatment) 

தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு ஸ்டெம் செல்லிலிருந்துதான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. இரத்தம், கருமுட்டை, தொப்புள்கொடி, நச்சுக்கொடி, தொப்புள்கொடி இரத்தம், மாதவிலக்கு இரத்தம், எலும்பு மச்சை, தசை, தோல், கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம், மூளை போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைப் பிரித்துப் பாதுகாத்து, பலதரப்பட்ட புற்றுநோய்கள், தன்தடுப்பாற்றல் நோய்கள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும்.

ஸ்டெம் செல் சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது. இந்த செல்களை எந்த உறுப்புக்கு அனுப்புகிறோமோ, அந்த உறுப்பாகவே அவை வளர்ந்துவிடும். இதனால், உடலில் பாதிப்படைந்த உறுப்பு சீராகிவிடும். இதுவரை 20-க்கும் மேற்பட்ட தீரா நோய்களுக்கு இந்த சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு செலவு பல இலட்சங்கள் செலவாகும்.