ஒன்பது வருடங்கள் ஊதியம் இல்லாமல் இலங்கையைச் சேர்ந்த பெண்ணை தனது வீட்டில் பணியாளராக வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சுமார் ஆறு ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 வயதான ஆலியா இமாத் ஃபலேஹ் அல்-ஹுனைட்டி என்ற பெண்ணுக்கே இவ்வாறு 70 மாத சிறைத் தண்டனையை செவ்வாயன்று கேம்டனில் உள்ள ஒரு பெடரல் நீதிமன்றம் விதித்தது.

ஹூனிட்டி 2009 ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை தற்காலிக விசாவில் ஜோர்தானிலிருந்து தனது வீட்டு பணியாளர் தொழிலுக்காக அமெரிக்காவுக்கு அழைத்து சென்றார்.

இலங்கைப் பெண்ணின் விசாக் காலம் நிறைவடைந்த பின்னரும் ஹூனிட்டி அவரை சட்டவிரோதமாக தனது வீட்டில் ஒன்பது ஆண்டுகள் தடுத்து வைத்ததுடன், அவருக்கு ஊழியம் கொடுக்கவும் மறுத்து வந்துள்ளார்.

இந் நிலையிலேயே அவருக்கு எதிராக அடிமைப்படுத்தல், நிதி ஆதாயத்திற்காக சட்டவிரோத அன்னிய அடைக்கலம், திருமண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக வழக்குத் தொடரப்பட்டு 70 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வுட்லேண்ட் பார்க் மற்றும் செகாக்கஸில் உள்ள தனது வீடுகளில் சமயல் வேலைகளில் ஈடுபடவும், சுத்தம் செய்யவும், தனது மூன்று குழந்தைகளை பராமரிக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணை ஹூனிட்டி  ஊதியம் வழங்காமல் கட்டாயப்படுத்தியதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டில், ஹூனிட்டி அந்தப் பெண்ணை சட்டபூர்வமான அமெரிக்க குடியிருப்பைப் பெறுவதற்கும், அவருக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.