ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால நடைபெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் வகையில்  எதிர்வரும் நாட்களில் 1,500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி உத்தரவிட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படும் அனைத்து தலிபான் கைதிகளும் "போர்க்களத்திற்கு திரும்பக்கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை" வழங்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி  தெரிவித்துள்ளார். 

கைதிகள் எவ்வாறு சட்ட ரீதியான முறையில் விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்த விபரங்கள், கானியின் கையெழுத்திட்டப்பட்டு அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு பக்க கட்டளையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகளை விடுவிக்கும் பணிகள் நான்கு நாட்களில் தொடங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"1,500 தலிபான் கைதிகளை விடுவிக்கும் செயல்முறை 15 நாட்களுக்குள் நிறைவடையும், 100 கைதிகள் ஒவ்வொரு நாளும் ஆப்கானிய சிறைகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்" 

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் விடுதலையுடன் இணையாக இயங்கும் என்று அக்கட்டளையில் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் முன்னேறினால், மொத்தம் 5,000 தலிபான் கைதிகள் விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் மேலாக மேலும் 500 தலிபான் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த காலகட்டத்திலும் அதற்கு அப்பாலும் வன்முறையைக் குறைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை தலிபான்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆணையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைதிகளின் விடுதலை என்பது இரு தரப்பினருடனும் அமெரிக்காவுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஆப்கானிஸ்தான்  அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு பகுதியாகும்.

இவ் ஒப்பந்தத்தை ஏற்றுள்ள தலிபான் குழுவின் தளபதிகள்,  மேலும் 1,000 ஆப்கானிஸ்தான் அரசின் பணயக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் இந்த ஒப்பந்தத்தை மதிப்போம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.