-பி.கே.பாலசந்திரன்

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா): திர்வரும் ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியப்பட்டுப் பலம்பொருந்தியதாக இருந்தால் மாத்திரமே தங்களால் ஆசனங்களை வென்றெடுக்க முடியுமென நம்பிக்கொண்டிருக்கும் சிலர், கடைசி நேரத்திலாவது கட்சிக்குள் பிளவு தவிர்க்கப்படுமென இன்னமும் நம்புகின்றார்கள். 

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் பிளவு உறுதியாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தவாறு இருக்கிறார்கள். 

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் (சமகி ஜனபல வேகய) தேர்தலில் போட்டியிடுவதற்கான அவற்றின் நோக்கங்களைத் தெரியப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத் தனித்தனியான கடிதங்களை அனுப்பிவைத்திருக்கின்றன. இதை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படப்போகின்ற பிளவின் தீர்க்கமான அறிகுறியாகவே பொதுவில் நோக்கவேண்டும். ஆனால் கட்சியின் ஐக்கியம் பேணப்படும் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருப்பவர்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கத் தனித்தனியாக வழங்கப்பட்ட கடிதங்கள் ஒரு பெரிய பிரச்சினையல்ல என்று வாதிடுகின்றனர். ஏனைய கட்சிகளும் இவ்வாறு செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இது ஒரு பழமையான நடைமுறை. அதற்காகக் கட்சி பிளவுபட்டது என்று அர்த்தப்படாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இரு பிரிவையும் ஐக்கியப்படுத்தும் தரப்பின் ஆதரவாளர் ஒருவர் கூறினார். ஆனால் பெரும்பாலான ஐக்கிய தேசியக் கட்சியினரைப் பொறுத்தவரை அவர்கள் நடக்கப்போவது என்னவென்பதை உணர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். கட்சி பிளவொன்றை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு பிரிவினர் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலு;ம, இன்னொரு பிரிவினர் சஜித் பிரேமதாஸ தலைமையிலும் இருவேறாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். 

சஜித் பிரிவு, அதன் தலைமையகத்தையும் திறந்திருக்கிறது. அந்த அலுவலகத்தில் ஆதரவாளர்கள் குழும ஆரம்பித்திருக்கிறார்கள். சஜித்தின் பதாகைகளும் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்துவிட்டன. அதேபோன்று ரணிலின் ஆதரவாளர்களும் சிறிகொத்தாவில் கூடுகின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிலும், தொண்டர்களிலும் சுமார் 80 சதவீதமானோர் சஜித்துடன் இருப்பதாகக் கட்சியிலுள்ளோர் கூறுகின்றனர். எஞ்சியிருப்போர் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கும் செல்லாமல் இருக்கக்கூடும். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் உட்பூசல்கள் காரணமாகவும், அரசாங்கத்திலிருந்தபோது சிறப்பாகச் செயற்படாத காரணத்தாலும் வெறுப்படைந்த ஏனையவர்கள் இன்னொரு கட்சிக்குத் தங்களது வாக்குகளை அளிக்கவும்கூடும். 

தேர்தலில் வெற்றிபெறும் நம்பிக்கையில் சஜித் பிரேமதாஸ களத்தில் பிரவேசிக்கின்றார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கடந்த 3 மாதங்களுக்கும் அதிகமான கால செயற்பாடுகள் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதை அதற்கான காரணமாக சஜித் கூறுகின்றார். ஆனால் இதுவிடயத்தில் அவர் தனக்கு விருப்பமானதை நினைத்துப்பார்க்கிறார் போல் தெரிகிறது. 

உண்மையில் ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தைக் கண்டனம் செய்வதற்கு இன்னமும் காலமிருக்கிறது. இப்போது அவ்வாறு செய்வது பொருத்தமானதல்ல. ஏனென்றால் அவர்கள் பதவிக்கு வந்து ஒருசில மாதங்களே ஆகின்றன. காலநெருக்குவாரத்தைப் பற்றி ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள் அறிவார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருந்தால் மாத்திரமே அரசாங்கத்தினால் சிறப்பாகச் செயற்பட முடியும் என்பதை ராஜபக்ஷாக்களின் ஆதரவவாளர்கள் பொதுவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் அவர்கள் ஒரு பெரும்பான்மையைப் பெறவேண்டியிருக்கிறது. அவ்வாறு பெரும்பான்மைப் பலத்தைக் கொடுத்தால் ராஜபக்ஷாக்களினால் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்கும் என்று மக்கள் இன்னமும் நம்புகின்றார்கள். ஏப்ரல் பொதுத்தேர்தலில் அவர்களுக்கு முழுமையான அதிகாரங்களைப் பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்கள் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால் பொதுஜன பெரமுனவிற்கும் அதன் நேசக்கட்சிகளுக்கும் பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மைப்பலம் கிடைப்பது உறுதி. ஆனால் இலங்கையின் தேர்தல் முறையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் அவர்களுக்குக் கிடைப்பதென்பது நடைமுறைச் சாத்தியமற்ற எதிர்பார்ப்பென்றே கூறவேண்டும். ஆனால் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் சுட்டிக்காட்டியதைப் போன்றே தேர்தலுக்குப் பிறகு கட்சித்தாவல்களைத் தூண்டுவதன் மூலமாக பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளும் சாத்தியமிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் இரு பிரிவுகளிலுமிருந்து உறுப்பினர்கள் ராஜபக்ஷாக்களின் பக்கத்திற்குச் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 'மதவாத" கட்சிகளுக்குப் பொதுஜன பெரமுன அதன் கதவை அடைத்திருக்கிறது. ராஜபக்ஷாக்களுடன் அணிசேரக்கூடிய கட்சிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இல்லை. அதற்கு ஒரு காரணம் கூட்டமைப்பை ராஜபக்ஷாக்கள் இனவாதக் கட்சியாகப் பார்ப்பது. மற்றையது தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வொன்றைப் பெறுவதற்கு முன்னர் மத்திய அரசில் பங்குகொள்வதில்லை என்ற கூட்டமைப்பின் கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடாகும். 

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுமானால் அந்தப் பிளவைப் பயன்படுத்தி அக்கட்சிக்குள்ளிருந்து உறுப்பினர்களை பொதுஜன பெரமுன அதன் பக்கத்திற்கு இழுப்பது சுலபமாக அமையும். ஆனால் அக்கட்சி ஐக்கியப்பட்டதாகவும், பலம்பொருந்தியதாகவும் இருக்குமேயானால் உறுப்பினர்களை அவ்வாறு இழுத்தெடுப்பது கடினமானதாக இருக்கும். 2018 அக்டோபர் அரசியல் நெருக்கடியின் போது ஐக்கியப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்பினர்களைக் கட்சி தாவச்செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் தோல்வியிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும். எனவே ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டு பலவீனமானதாக இருக்குமேயானால் ஏப்ரலுக்குப் பிறகு தெரிவுசெயப்படவிருக்கும் பாராளுமன்றத்தில் பெரும் பயனடையப்போவது பொதுஜன பெரமுனவாகவே இருக்கும்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடுகள்.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கிறது. அவருடன் இப்போது சேர்ந்து நிற்பவர்கள் அவரைத் தூக்கியெறிவதற்கு அல்லது அவரை ஒரு பொம்மையாக வைத்திருப்பதற்கு இந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தலாமென நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதுவிடயத்தில் சாதி, பௌத்த மதகுருமார் மத்தியிலான ஆதரவு, சஜித் செயற்படுகின்ற பாணி ஆகியவை மூன்று முக்கிய காரணிகளாக இருக்கும். சிங்கள சமூகத்தின் மத்தியிலிருக்கும் இரண்டு உயர் சாதிகளில் எந்தவொன்றையும் சேர்ந்தவரல்ல சஜித். இலங்கை அரசியலில் இது அவருக்கொரு குறைபாடாகும். மேலும் கடும்போக்கு கிறிஸ்தவ குழுக்களுடனான சஜித்தின் தொடர்புகளும் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு 'கடும்போக்கு" பௌத்தனாக தான் இருப்பதாக அவர் கோருகின்ற உரிமைக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பலவீனங்கள் தற்போது சஜித்தின் ஆதரவாளர்களாக இருக்கின்ற சம்பிக்க ரணவக்க போன்றவர்களால் பயன்படுத்தப்படக்கூடும். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பௌத்த குழுமாரின் நேசத்திற்குரியவராக சம்பிக்க ரணவக்க விளங்குகின்றார். அதேவேளை அமைச்சராக இருந்த வேளையில் இலங்கை அரசியல் விவகாரங்களில் நேரடி அக்கறை கொண்ட இந்தியாவுடனும், சீனாவுடனும் ரணவக்க நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

கர்வத்தனமாக செயற்படுகின்ற சஜித்தின் பாணியும், அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அவருக்கிருக்கும் பேரார்வமும் எதிர்ப்புக்களைத் தோற்றுவிக்கக்கூடும். பாரம்பரிய இலங்கை உயர்வர்க்கத்தைச் சேராதவர் என்பதால் சகல வேளைகளிலும் தன்னைச் சுற்றியுள்ள நிலவரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கும். இதைச் செய்ய வேண்டுமென்ற ஏக்கத்தில் அவர் எப்போதும் பதட்டத்துடன் நடவடிக்கைகளில் இறங்கவேண்டியவராக இருக்கிறார். 

மேலும் தந்தையார் ரணசிங்க பிரேமதாஸவிடம் காணப்பட்ட ஆக்கத்திறனும், விடாமுயற்சியும் சஜித்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையின் ஜனாதிபதியாக வருவதற்குத் தந்தையார் சமூக மற்றும் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு எதிராக இடையறாது போராட்டம் நடத்தி வெற்றிபெற்றவர். ஆனால் அவர் ஜனாதிபதிப் பதவியில் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஈவிரக்கமற்றவராகத் தொடர்ந்து செயற்பட வேண்டியிருந்ததால் பெருமளவு இலங்கையர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதவராக இருந்தார். 

1951 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டு வெளியேறிய பின்னர் ஏற்பட்ட பிளவிற்குப் பிறகு மிகப்பெரிய பிளவு அந்தக்கட்சிக்குள் 1992 ஆம் ஆண்டிலேயே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான சிங்கள உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவரான காமினி திஸாநாயக்கவினதும், லலித் அத்துலத்முதலியினதும் தலைமையிலான மேட்டுக்குடியினருக்கு எதிராக பிரேமதாஸ போராட வேண்டியிருந்த நேரத்திலேயே அந்தப் பிளவு ஏற்பட்டது. 

கணிசமான எண்ணிக்கையான சிங்கள பௌத்த வாக்குகளைப் பெறுவதன் மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மாத்திரமே பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சஜித்துடன் நிற்கிறார்கள். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் சிங்களத்தரப்பில் கூட ஒரு பெரிய பற்றாக்குறை உண்மையில் இருக்கின்றது. அந்தப் பற்றாக்குறையே 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்குத் தோல்வியைத் தேடிக்கொடுத்தது. 

தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் உதவமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட அவரது நெருங்கிய சகாக்கள் சஜித் பக்கத்திற்கு ஏற்கனவே சென்றுவிட்டார்கள். அல்லது செல்வதற்குத் திட்டமிடுகிறார்கள். சஜித்திடம் கட்சியைக் கையளித்துவிட்டு, ஐக்கிய நாடுகளில் அல்லது வேறு உலக மன்றமொன்றில் பதவியொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு ரணிலுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள் ஆலோசனை கூறுகின்றார்கள். சர்வதேச விவகாரங்களில் அவருக்கிருக்கும் அறிவு மற்றும் அக்கறை காரணமாக அத்தகையதொரு பதவியை அவர் எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பது அந்த நண்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

கடந்த காலத்தில் தோல்விகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் சர்வதேச ரீதியான ஒரு விரிவுரையாளராகச் சென்றுவிடுவது குறித்து ரணில் விக்கிரமசிங்கவே சிந்தித்தார். ஆனால் அவர் உண்மையில் ஒருபோதும் கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுப்போகவில்லை என்பதே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். தனது தற்போதைய பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக முடிவடையும்வரை, அதாவது குறைந்தபட்சமாக 2025 வரை அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்வதற்கு விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.