இலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் முதலாவது விருது வழங்கும் விழா இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள ஓசோ ஹோட்டலில் நடைபெற்றது. 

இவ்விழாவில் சிறந்த புலனாய்வு அறிக்கையிடலில் ஈடுபட்ட 14 ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவற்றில் 3 விருதுகளை வீரகேசரி நிறுவனம் பெற்றுக்கொண்டது. 

வீரகேசரி செய்திப்பிரிவின் பிரதி செய்தி ஆசிரியர் ச.லியோ நிரோஷ தர்ஷன், இணையத்தள பிரதி செய்தியாசிரியர் வீ.பிரியதர்ஷன் மற்றும் ஊடகவியலாளர் ஸீனியா முஸாதிக் ஆகியோருக்கே இந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் விருதுகள் கிடைக்கப்பெற்றன. 

கடந்த 4 மாதகாலமாக மேற்கொண்ட புலனாய்வு  செய்தி சேகரிப்பின் ஊடாக பல்வேறு மோசடிகள் மற்றும் மக்கள் சார் பிரச்சினைகளை வெளிகொணர்ந்ததுடன் , அவை பிரதான ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டன. 

புலனாய்வு அறிக்கையிடலை முழுமைப்படுத்திய ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் சுயாதீன நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அதில் அதிசிறந்த புலனாய்வு அறிக்கையிடலை மேற்கொண்ட 3 ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள ஊடக பயிற்சி மையத்திற்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் வீரகேசரி  செய்திப் பிரிவின் பிரதி ஆசிரியர் ச. லியோ நிரோஷ தர்ஷன், விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் ரிப்தி அலி மற்றும் ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஆகிய மூவரே மேற்படி விஜயத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்ட்டன் கலந்துக்கொண்டிருந்தார். மேலும் சர்வதேச ஊடக ஒத்துழைப்புகளுக்கான ஆசிய வலய ஆலோசகர் ரங்க கலங்சூரிய , இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தில்ருக்ஷி ஹந்துனத்தி  இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையத்தின் தலைமை பயிற்சியாளர் ஷிஹார் அனீஸ் உட்பட மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.