ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட முப்பத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கானாவின் தலைநகர் அக்ராவிலிருந்து 430 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள போனோ கிழக்கு பிராந்தியத்தில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பெரிய பஸ் ஒன்று சிறியரக பஸ் ஒன்றுடன் மோதியதில், சிறியரக பஸ் தீபற்றியது. இதனையடுத்து பஸ்களில் பயணித்த 35 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டுள்ள நிலையில், விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மோசமான வாகனப்பராமரிப்பு, போக்குவரத்து விதிமுறைகளை புறக்கணித்தல் மற்றும் மோசமான சாலைகள் காரணமாக அதிகமான விபத்துகள் இடம்பெறுகின்றன. அத்துடன் கானா நாட்டில் வீதி விபத்து காரணமாக தினமும் சராசரியாக ஆறு பேர் வரை இறப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை கானா நாட்டில்  ஜனவரி மாதம் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 34 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.