கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் எல்லையை தாண்டி உலக அளவில் பல நாடுகளில் எல்லை மீறி தாக்கத் தொடங்கியுள்ளது.

சீனா தமது நாட்டில் கொரோனாவை கட்டுபடுத்தியுள்ளதென்றால் அதன் அதிரடி நடவடிக்கைகள் தான் அதற்கு காரணம் எனலாம். இந்நடவடிக்கைகளின் போது 3,000 க்கும் மேற்பட்ட வைத்திய ஊழியர்கள் நோய் தொற்றுக்கு உள்ளானமை சீனாவுக்கு மிகப்பெரிய சவாலாகவே அமைந்தது. 

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள போதிலும், கொரோனா வைரஸ் பருவகால தொற்றாக மாற்றமடையலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

இதற்கமைய நிலைமையை தொடர்ந்தும் கட்டுப்படுத்தும் நோக்கில், வைத்தியர்களை அதிக பணிச்சுமையிலிருந்து விடுவிக்கவும் மற்றும் வைத்திய துறையினரை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றவும் சீனா தமது அதியுயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய வைத்தியசாலையொன்றை நிர்மாணித்து அதனை திறந்து வைத்துள்ளது.

இவ்வைத்தியசாலையில்  வைத்தியர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான குறுக்கு நோய்த்தொற்றைத் தடுக்க உதவும் வகையில் 5 ஜி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஆறு வகையான ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இவ்ரோபோக்கள் நோயாளிகளின் வெப்பநிலையைப் பரிசோதித்தல், அவர்களுக்கு உணவு வழங்குதல், கண்காணித்தல் மற்றும் வைத்தியசாலை பகுதிகளை கிருமி நீக்கம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அதேவேளை  தங்களை கிருமி நீக்கம் செய்யும் திறனையும் கொண்டுள்ளன. 

இவ்ரோபோக்களின் உதவியுடன் நோயாளிகளை அணுகாமலே நோயாளிகள் பற்றிய தகவல்களை வைத்தியர்கள் தொலைவிலிருந்து பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கொரோனோ வைரஸை பொருத்தவரை வைத்தியர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான குறுக்கு நோய்த்தொற்று நோய் தீவிரமடைவதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இந்நிலையில் இப்புதிய வைத்தியசாலை அனைத்து நாடுகளுக்கும் எடுத்துகாட்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.