முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனது வழக்கு விசாரணை இன்று(10.03) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

கடந்த  வருடம்  (30.07) ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து இன்றையதினம் (10.09) மன்றில் ஊடகவியலாளர் மற்றும் குறித்த முறைப்பாடு செய்த கடற்படை சிப்பாய் ஆகியோரை  ஆஜராகுமாறும் அத்தோடு பொலிசாரை மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் ஏற்கனவே நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்  முல்லைத்தீவு பொலிஸாரால் கைது  செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த வருடம் யூலை மாதம் 30 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று வழக்கு தவணை இடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன் போது செல்வபுரம் பேரூந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் போராட்டகாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்ட வேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன்  தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என அடையாளப்படுத்திய போது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த பொலிசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.

இந்நிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலன் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர்  பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.