ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வந்த, 34/1, 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்து விட்டது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவை அறிவித்திருந்தார். அதற்குப் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போதும், அரசாங்கத்தின் முடிவை அவர் நியாயப்படுத்தியிருந்தார்.
ஜெனீவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையில் இருந்து, விலகும் அரசாங்கத்தின் முடிவு குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதுபோலவே பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தன.
அரசாங்கத்தின் முடிவு, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததோ இல்லையோ, அரசாங்கத்தின் முடிவுக்கு சர்வதேச சமூகம் காட்டுகின்ற சகிப்புத்தன்மை ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதாகவே தெரிகிறது.
அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, இரண்டு வாரங்களாகின்ற போதிலும் இதுவரையில் அமெரிக்காவிடம் இருந்தோ, இந்தியாவிடம் இருந்தோ எந்தக் கருத்தும் வெளியாகவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
எதற்காக இந்த இரண்டு நாடுகளும் அமைதியாக இருக்கின்றன என்ற கேள்வி பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்களுக்கு இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
இந்தியா தமிழர் நலன்களைக் காக்கும் என்று நம்புகின்ற தமிழ் மக்களும், அரசியல்வாதிகளும் இன்னமும் இருக்கிறார்கள்.
அதுபோலவே, அமெரிக்கா எம்மைக் கைவிட்டு விடாது போர்க்குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றவர்களும் எம்மிடையே உள்ளனர்.
எனவே தான், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற இணை அனுசரணை நாடுகளின் கருத்துக்களை விட, அமெரிக்கா, இந்தியாவின் கருத்துக்கள், நிலைப்பாடுகள் என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.
2012ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்து, கணக்கை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா தான்.
அமெரிக்கா ஒன்றும் தமிழர் மீதான பற்று அல்லது பாசத்தினால் இதனைச் செய்திருக்கவில்லை. மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அமெரிக்காவின் நலன்களுக்கு இணங்காமல், சீனாவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க முற்பட்டதன் வெளிப்பாடாகத் தான், பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன் என்ற விவகாரத்தை முன்னிறுத்தி ஜெனீவா கணக்கை தொடங்கியது.
ஆனாலும், இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானங்களுக்கு உடன்பட மறுத்த நிலையில், 2015 இல் ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்கா துணை நின்றது.
அதன் பின்னர் பதவிக்கு வந்த ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகுடன் இணங்கிப் போக உடன்பட்டது. அதற்கமையவே 2015இல், 30/ 1 தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு இலங்கையின் இணை அனுசரணையும் வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு, 2017 இல் 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையும் அமெரிக்காவே முன்னின்று கொண்டு வந்து நிறைவேற்றியது.
அவ்வாறு இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்னின்று கொண்டு வந்த அமெரிக்காவிடம் இருந்து இதுவரை எந்தக் கருத்தும் வெளிவராதது, ஆச்சரியமான விடயம் தான்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாக, இலங்கையின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத் தடை விதித்து இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை கொண்டுள்ளது போன்ற தோற்றப்பாட்டை அமெரிக்கா உருவாக்கியிருந்தது.
இவ்வாறான தடை இராணுவத் தளபதியுடன் நிற்காது, அதற்கு அப்பாலும் விரிவடையக் கூடிய சாத்தியப்பாடுகளையும் அது வெளிப்படுத்தியிருந்தது. ஆனாலும், ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலக இலங்கை எடுத்த முடிவு குறித்து அமெரிக்கா ஏன் மௌனம் காக்கிறது என்பது இரகசியமாகவே உள்ளது.
ஜெனீவாவில் தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகி விட்டது, இனிமேல் அதற்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்று, இலங்கை அரசாங்கம் நியாயப்படுத்தியிருந்தது.
30/1 மற்றும் 34/1 தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியது அமெரிக்காவாக இருந்தாலும், 40/1 தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது அமெரிக்கா அல்ல.
அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட முன்னரே, அமெரிக்கா பேரவையில் இருந்து விலகி விட்டது. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வைத்து, 40/1 தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் அமெரிக்கா மறைமுகமான பங்களிப்பைச் செலுத்தியது.
அமெரிக்கா இந்த தீர்மானத்தைக் கொண்டு இலங்கை அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று இல்லை. ஆனால், அமெரிக்கா வாயே திறக்கவில்லை.
இதுகுறித்து ஆங்கில வாரஇதழ் ஒன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது. எதற்காக விலகியது என்று இலங்கை அரசாங்கத்தின் கருத்தைப் பெற வேண்டியிருப்பதாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கம் தமது முடிவையும் அதற்கான காரணத்தையும், பாராளுமன்றத்திலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் வெளியிட்ட பின்னரும், இலங்கையிடம் இருந்து அமெரிக்கா என்ன விளக்கத்தை எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிய அமெரிக்கா, பேரவையின் செயற்பாடுகள் குறித்து கருத்துக்களை வெளியிடுவது இராஜதந்திர நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக கருதவும் கூடும்.
ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்களுக்கு, அமெரிக்கா சில நம்பிக்கைகளை கொடுத்திருக்கிறது. வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.
இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மீது தமக்கு பற்றுறுதி இருப்பதாக அமெரிக்கா கூறி வந்திருக்கிறது.
இலங்கை அரசாங்கம் இந்த பற்றுறுதிக்குச் சவாலான முடிவை எடுத்திருக்கின்ற நிலையில், அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பது ஆச்சரியமில்லை.
இதேநிலையில் தான் இந்தியாவும் இருக்கிறது. இலங்கையில் போர்க்கால மீறல்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கின்ற பணியில் இந்தியா இறங்கியிருக்காது போனாலும், ஜெனீவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்திருக்கிறது அல்லது நடுநிலை வகித்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் தமக்கு அக்கறை இருப்பதாக இந்தியா ஒப்புக்காகவேனும் கருத்துக்களை கூறியிருக்கிறது.
அதேவேளை, இலங்கைத் தமிழர் நலன்களின் மீது தமக்கு அக்கறை இருப்பதாக இந்தியா தொடர்ந்தும் கூறி வருகிறது.
இவ்வாறான நிலையில், ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகிக் கொள்ளும் இலங்கையின் முடிவை இந்தியா கண்டிக்காமல் இருப்பது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும்.
அமெரிக்காவும், இந்தியாவும் தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தரும், நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை பொய்யானது. ஆனாலும் அவ்வாறான நம்பிக்கை ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது..
அந்த நம்பிக்கையில் இருந்து பார்க்கும் போது, இலங்கை விவகாரத்தில் அமெரிக்க, இந்திய நிலைப்பாடுகளில் காணப்படும் வெறுமை நிலை ஜீரணித்துக் கொள்ள முடியாததே.
ஆனால், அரசியல், இராஜதந்திர கள நிலைமைகளில் இருந்து பார்க்கும் போது, அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ, தமிழரின் பக்கம் நின்று சிந்திக்கின்றது,, செயற்படுகின்றது., முடிவுகளை எடுக்கின்றது என்று கருதுவது முட்டாள்தனம்..
ஏனென்றால் தமது நலன்களின் அடிப்படையில் தான் எல்லா நாடுகளும் செயற்படுகின்றன. அந்த உண்மை முதலில் தமிழர் தரப்புக்கு தெரிய வேண்டும்.
ஹரிகரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM