சட்டம் ஒழுங்கு இல்லையேல் அந்த ஆட்சியினால் மக்களுக்குப் பயன் இல்லை என்றே கூற வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டால் மாத்திரமே நாட்டு மக்களின் வாழ்க்கை சீரானதாகவும் ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டதாகவும் அமையும். குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை வழங்கி பொறுப்பு கூறப்படாவிட்டால், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாது. அத்தகைய ஒரு நிலையில் நாகரிகமும் கௌரவமும் கொண்ட வாழ்க்கை முறை மக்களுக்கு மறுக்கப்பட்டுவிடும். சட்டம், ஒழுங்கு இல்லாத இடத்தில் நல்லாட்சி நிலவ முடியாது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30/1 பிரேரணைக்கான அனுசரணையில் இருந்து இலங்கை அரசு விலகி இருப்பது உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் கடும் கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் வழி கோலியுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள இந்த நடவடிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் பலவற்றின் இலங்கை தொடர்பான அரச ரீதியான உறவு நிலையில் சங்கடமான நிலைமைகளுக்கு வழிவகுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்காக 2015ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் இணை அனுசரணை வழங்கி அதனை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. தொடர்ந்து அந்தத் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அடுத்தடுத்துக் கொண்டு வரப்பட்ட 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களுக்கும் முன்னைய அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதற்கமைவாக அந்த அரசு ஆமை வேகத்தில் சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
ஆனால் 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் ராஜபக் ஷக்களின் கைகளில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சேர்த்ததையடுத்து, அவர்களின் மீள்வருகையுடன் அவர்களுக்கே உரிய கடும்போக்கும், இராணுவ மயமான ஆட்சி நிர்வாகமும் நடைமுறைக்குத் திரும்பியுள்ளன.
இதனால் நாட்டில் ஜனநாயக ஆட்சி நிலவுவதாகக் கூறினாலும்கூட, அதன் விழுமியங்கள் நடைமுறையில் நெருக்குதல்களுக்கு உள்ளாகி நிலைமை மோசமடைந்துவிடுமோ என்ற அச்சத்தைப் பரவலாக ஏற்படுத்தி உள்ளது. அதற்கேற்ற வகையிலேயே நாட்டின் ஆட்சி நிலைமைகளும் படிப்படியாக மாற்றம் கண்டு வருகின்றன.
அத்தகைய மாற்றங்களில் அதிமுக்கிய நிகழ்வாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கும் அதனைத் தொடர்ந்து வந்த மேலும் இரண்டு தீர்மானங்களுக்கும் இலங்கை வழங்கியிருந்த இணை அனுசரணையை ஜனாதிபதி கோத்தபாய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
ஐ.நா. தீர்மானத்திற்கான அனுசரணையில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொள்கின்ற அரசாங்கத்தின் முடிவை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நேரடியாகவே அறிவித்தார்.
ஐ.நா. தீர்மானமானது, இங்கையின் இறை மையை மீறியதும், உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடுமாகும் என்றும் அவர் இதற்கான காரணமாக சுட்டிக்காட்டினார். பொறுப்புக் கூறுவதற்காக சர்வதேசத்தின் நீதிபதிகள் விசாரணையாளர்களின் பங்களிப்புடனான பொறிமுறை என்பது இலங்கையின் நெறிமுறைகளை – நீதித்துறைக் கட்டமைப்புக்களுக்கு எதிர்மாறானது என்பதே சர்வதேசத்தின் தலையீடு என்பதற்கான பொருள்கோடல் என்ற வகையில் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இணை அனுசரணையில் இருந்து விலகுவது என்பது ஐ.நா. தீர்மானத்தில் இருந்து அரசு முழுமையாக விலகிக்கொள்கின்றதா என்ற கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஐ.நா. மன்ற அறிக்கையின் - உரையில் பதிலைக் காண முடியவில்லை.
ஆனாலும், முன்னைய மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தின் ஏற்பாட்டிற்கமைவாக அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்ந்து செயற்படும் என்றும் இழப்பீட்டுக்கான அலுவலகப் பொறிமுறையும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பிரேரணையில் இருந்து எந்த வகையில் அரசு விலகிக் கொள்கின்றது அல்லது இணை அனுசரணையின் எத்தகைய பரிமாணத்தில் அரசு முரண்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்குப் போதுமானதாகக் காணப்படவில்லை.
அதேவேளை, நீதியரசர் ஒருவருடைய தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது ஐ.நா. தீர்மானத்தின் அனுசரணையில்
இருந்து விலகிய பின்னர் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதற்கான பதிலாக அமைந்துள்ளது.
ஐ.நா. தீர்மானத்திற்கான அனுசரணையில் இருந்து விலகினாலும், நிலையான சமாதானம், நல்லிணக்கத்தை இலக்காகக் கொண்டு பொறுப்புக் கூறல் என்பவற்றில் அரசு உறுதியாக இருக்கின்றது. மனித உரிமை தொடர்பில் இலங்கை மக்களால் விதிக்கப்பட்ட இலக்குகளை அடைவதிலும் அரசு உறுதிப்பாட்டுடன் இருக்கின்றது என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உண்மையில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் காலம் கடந்த நிலையிலேயே எல்எல்ஆர்சி என்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு என்ற விசாரணைக்குழு முதலில் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. அந்தக் குழுவின் பரிந்துரைகள் நாட்டின் மனித உரிமை நிலைமைகளைப் பேணுவதிலும் அதற்கான கடப்பாட்டிலும் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்பட்டன.
சர்வதேச அளவிலும் அந்தப் பரிந்துரைகள் பொருத்தமான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடப்பட்டு வரவேற்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தப் பரிந்துரைகள் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் அந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை.
எல்எல்ஆர்சி என்ற ஆணைக்குழுவுக்குப் பின்னரும் விசாரணைக் குழுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டனவே தவிர, எந்தவோர் ஆணைக்குழுவினதும் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் அரசாங்கத்தினால் கவனத்திற் கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் வீண் விரயமான செயற்பாடுகளாகவே ஆகிப் போயின.
நீதியும் நியாயமும் உரிய நிவாரணமும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆணைக்குழுக்களின் விசாரணை முறைமைகளிலேயே அதிருப்தி அடைந்திருந்தனர். நம்பிக்கை இழந்திருந்தனர். எனினும் அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற அதிகாரம் வாய்ந்த ஒரு விசாரணை என்ற ஒரே காரணத்திற்காக அந்த விசாரணைக் குழுக்களின் முன்னால் தோன்றி பலரும் வாக்குமூலங்களை வழங்கினார்கள். சாட்சியங்களை முன்வைத்தார்கள். அவர்கள் நம்பிக்கையற்றிருந்தது போலவே இந்த விசாரணைக் குழுக்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்கவே இல்லை.
இறுதியாக ஐ.நா. பிரேரணையின் முன்மொழிவுக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகமும் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவில்லை. ஆமை வேகத்தில் உருவாக்கப்பட்ட அந்த அலுவலகத்தின் மீது தமது நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்திய பாதிக்கப்பட்ட மக்கள் அதனை எதிர்த்தார்கள். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் பரவலாக நடத்தினார்கள்.
யாழ்ப்பாணத்திற்கான அந்த அலுவலகம் திறக்கப்பட்டபோது, அதற்கு எதிராகக் கிளம்பியிருந்த எதிர்ப்புக்கு அஞ்சி அதிகாலை வேளையில் பங்கேற்பாளர்கள் எவரும் அற்ற நிலையில் அதிகாரிகள் சிலர் மட்டும் அந்த அலுவலகத்தின் கதவைத் திறந்து - மூடிவிட்டுச் சென்றார்கள்.
எனினும் அதன் அங்குரார்ப்பணத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒரு சந்திப்பை அந்த அலுவலக அதிகாரிகள் நடத்தினர். அந்தச் சந்திப்பின்போது காரசாரமான கண்டனங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும் தமது நோக்கம் என்ன என்பதை அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்டவர்கள் தங்களால் இயன்ற அளவில் பங்கேற்றிருந்தவர்களுக்கு விளக்க முற்பட்டிருந்தனர்.
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்றதன் பின்னர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த மறுசீரமைப்பு என்பது நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் அல்லது அவர்களுக்கு நியாயத்தையும் நீதியையும் வழங்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய ஒரு நிலைமையிலேயே தீர்மானத்திற்கான அனுசரணையில் இருந்து விலகி, புதிய ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது குறித்த தகவலை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் நோக்கம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் முன்னைய விசாரணை குழுக்களினுடைய பரிந்துரைகளின் நடைமுறைத் தன்மையை ஆராய்ந்து, 'அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய' சாத்தியமான நடவடிக்கைகளை முன்மொழிந்து நடைமுறைப்படுத்துவதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்படும் என்று அவர் விளக்கமளித்திருந்தார்.
ஆனால் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட் மீண்டும் ஓர் ஆணைக்குழு அமைக்கின்ற ஆலோசனையை நிராகரித்தார். ஏற்கனவே இத்தகைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் காரியங்கள் எதுவுமே ஆகவில்லை. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறப்படவில்லை. மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்படவுமில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இத்தகைய ஒரு சூழலில்தான் நாட்டில் பெரியதோர் அரசியல் கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் எத்தகைய அரசியல் கலாசாரத்தை புதிய அரசு மேற்கொள்ளப் போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் கலாசார மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது கொள்கை விளக்க உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இனவாதத்தின் அடிப்படையிலான அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மக்கள் புறமொதுக்கி உள்ளார்கள். ஆட்சியை உருவாக்குகின்ற சக்தியாக இந்த நாட்டின் அரசியலில் இனிமேல் எவரும் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதைப் பெரும்பான்மையான மக்கள் நிரூபித்துள்ளார்கள். இந்த அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு, நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய இந்தத் தேசிய பொறுப்பேற்பில் ஒத்துழைத்துப் பங்கேற்குமாறு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ அப்போது அழைப்பு விடுத்திருந்தார்.
அவ்வாறு அழைப்பு விடுத்த அவர் ஜனநாயகத்தின் உச்சக்கட்ட பயன்களை அடைவதாயின், அரச நிர்வாகம் முன்மாதிரியானதொன்றாக, பலரும் பின்பற்றத்தக்கதாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். அதேவேளை, நாட்டின் பெரும்பான்மை இன மக்களின் அபிலாசைகளுக்கு எப்போதும் நாம் மதிப்பளிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் இறைமை பாதுகாக்கப்படும் என்பதையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது கொள்கை விளக்க உரையில் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகின்றன. (இன்றுடன் 4 மாதம் 21 நாட்கள்). ஆனால் அவர் தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்ததைப் போன்ற முன்னுதாரணமான ஜனநாயக ஆட்சி நாட்டில் நிலவுகின்றதா என்பது கேள்விக்கு உரியதாக உள்ளது.
இராணுவ வழிமுறை சார்ந்த நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள இந்த ஆட்சியில் தண்டனை விலக்கீட்டு உரிமைக்கே முதலிடம் அளிக்கப்படுவதாகப் பரவலாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும் தனக்கு சார்பாகச் செயற்படத்தக்க முன்னாள் இராணுவ அதிகாரிகளை முக்கிய அரச பதவிகளுக்கு அவர் நியமித்தார். அந்த வகையில் முதலாவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, பணி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை நியமித்தார். தொடர்ந்து சிவில் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கும் பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
நாட்டின் இராணுவத் தளபதியாகப் பணியாற்றுகின்ற லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன மற்றும் சிவில் அதிகாரத்தின் தலைமை பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலருக்கும் எதிராக ஏற்கனவே போர்க்குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் போர்க்குற்றச் செயல்களுக்கு ஒப்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்ட படை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கி விசாரணைகளில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரச அதிகாரத் தரப்பு மேற்கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கக் கூடாது அல்லது அவர்கள் குற்றச் செயல்களைப் புரியவில்லை என்ற அரசியல் ரீதியான நிலைப்பாட்டை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இது தண்டனை விலக்கீட்டு உரிமையைப் பலருக்கும் குறிப்பாக படை அதிகாரிகளுக்கு, இராணுவத்தினருக்கு வழங்கப்படுவதையே குறித்துக் காட்டுகின்றது.
யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்பவற்றில் ஈடுபட்டவர்கள், அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இது வெறுமனே மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறுகின்ற விடயம் மட்டுமல்ல. குற்றச் செயல்கள் என்னும் பொழுது அந்தச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எனவே இது சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாமல் நீதி நியாயம் சம்பந்தப்பட்ட விடயங்களாகவும் அமைகின்றன.
சட்டம் ஒழுங்கு இல்லையேல் அந்த ஆட்சியினால் மக்களுக்குப் பயன் இல்லை என்றே கூற வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டால் மாத்திரமே நாட்டு மக்களின் வாழ்க்கை சீரானதாகவும் ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டதாகவும் அமையும். குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை வழங்கி பொறுப்பு கூறப்படாவிட்டால், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாது. அத்தகைய ஒரு நிலையில் நாகரிகமும் கௌரவமும் கொண்ட வாழ்க்கை முறை மக்களுக்கு மறுக்கப்பட்டுவிடும். சட்டம் ஒழுங்கு இல்லாத இடத்தில் நல்லாட்சி நிலவ முடியாது.
தண்டனை விலக்கீட்டு உரிமை என்பது யுத்தம் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் ஒரு கலாசாரமாகவே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு இந்தத் தண்டனை விலக்கீட்டு உரிமை இயல்பாகவே வழங்கப்பட்டு, அவர்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஊக்குவிக்கப்படுகின்ற வகையிலான போக்கையே காண முடிந்தது.
மனித உரிமைகள் சாதாரண நிலைமையில் மட்டுமல்லாமல் போர்க்காலத்திலும் மதிக்கப்பட வேண்டும். பேணப்பட வேண்டும் என்பதே ஐ.நா. மன்றத்தின் எதிர்பார்ப்பு. சர்வதேசத்தினதும் எதிர்பார்ப்பு. அது மட்டுமல்லாமல் நாகரிகம் கொண்ட மனித குலத்திற்கு அவசியமான ஒன்றாகவே கருதப்படுகின்றது.
இத்தகைய ஒரு நிலையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதில் இருந்து விலகிக் கொள்வதென்பது சாதாரண விடயமல்ல. அது மிகவும் பாரதூரமானது. சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டு மனித உரிமைகள் பேணப்படுவது என்பது ஜனநாயகத்தின் ஆணிவேராகும்.
தண்டனை விலக்கீட்டு கலாசாரம் நிலவும்போது அங்கு மனித உரிமைகள் பேணப்படமாட்டாது. குற்றங்கள் தாராளமாகத் தலையெடுத்து சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்ற நிலைமை உருவாகும். இது ஜனநாயகம் நிலவுகின்ற ஒரு நாட்டுக்கு அழகல்ல. ஆட்சியாளர்களுக்கும் அழகல்ல.
அது மட்டுமல்லாமல் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற சர்வதேச நியமத்திற்கு அமைவாக நாடுகள் செயற்படுகின்ற ஒரு சூழலில் இலங்கை போன்ற சிறியதொரு நாடு அந்த உலக ஒட்டத்திற்கு மாறான நிலையில் தாக்குப் பிடிக்க முடியாத நிலைமைக்கு ஆளாக நேரிடும்.
அதிலும் குறிப்பாக இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு தீவாகிய இலங்கை தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய கேந்திர நிலையமாகவும் திகழ்கின்றது.
இத்தகைய பூவுலக சூழமைவில் இலங்கை தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய கட்டாய நிலைமைக்குள் இருக்கின்றது. சர்வதேச நியமங்கள், நடைமுறைகளுக்கு மாறான வகைகளில் உள்நாட்டில் நிலவுகின்ற அரசியல் மற்றும் ஆட்சிச் சூழல் வேண்டத்தகாத வெளிச்சக்திகளுக்கு வலிந்து அழைப்பு விடுகின்ற நிலைமையையே உருவாக்கும்.
எனவே, ஜனநாயக ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆசிய பிராந்தியத்தில் நற்பெயரைக் கொண்டுள்ள இலங்கை தனக்குள்ள நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஐநா மனித உரிமைப்பேரவையில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும், அந்தப் பேரவையின் உறுப்பு நாடுகளுடன் இணக்கப்பாடில்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல. இதனைக் கவனத்திற்கொண்டு அரசு செயற்பட முயற்சிக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM