பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­பட்டு விடுமோ என்ற ஆதங்கம் அந்தக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ளது. பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யிலான அணி­யி­ன­ருக்கும் முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான அணி­யி­ன­ருக்கு­மி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலைமை இந்த ஆதங்­கத்தை ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொதுக் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்­தது. சஜித் பிரே­ம­தாச தலை­மையில் ஐக்­கிய மக்கள் சக்தி எனும் பெயரில் கூட்­டணி அமைக்­கப்­பட்டு தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இந்தக் கூட்­ட­ணியில் சம்­பிக்க ரண­வக்க தலை­மை­யி­லான ஜாதிக ஹெல உறு­மய, ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் உட்­பட பல கட்­சி­களும் பொது அமைப்­பு­களும் இணைந்­தி­ருந்­தன. 

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்தில் இந்தப் பொதுக் கூட்­ட­ணிக்­கான அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் சஜித் பிரே­ம­தாச விரும்பிய ஒரு­வரை அந்தக் கூட்­ட­ணியின் செய­லா­ள­ராக நிய­மிப்­ப­தற்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டது. இந்த நிலை­யி­லேயே புதிய கூட்­டணி அமைக்­கப்­பட்­டது.

ஆனால் எந்த சின்­னத்தில் பாரா­ளு­மன்றத் தேர்­தலை சந்­திப்­பது என்ற விட­யத்தில் இரு­த­ரப்­புக்குமி­டையில் இழு­பறி நிலைமை ஏற்பட்­டி­ருந்­தது. யானைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­ட­வேண்­டு­மென்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அணி­யி­னரும் கூட்­ட­ணிக்­கான தொலை­பேசி சின்­னத்தில் போட்­டி­யி­ட­வேண்­டு­மென்று சஜித் அணி­யி­னரும் கோரி வந்­தனர். இந்­த­நி­லையில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்த அன்னம் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்று இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் ஓர­ள­வுக்கு இணக்கம் எட்­டப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் இந்த விட­யத்தில் மீண்டும் ுழு­பறி நிலை ஏற்­பட்­டது.

இந்தச் சின்­னத்­துக்கு உரி­மை­யா­ள­ரான முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க அன்னம் சின்­னத்தை பொதுக் கூட்­ட­ணிக்கு வழங்கும் விட­யத்தில் நிபந்­த­னைகள் விதித்­த­தை­ய­டுத்து முரண்­பாடு முற்­றி­யி­ருந்­தது. இந்த விட­யத்­துக்கு இன்­னமும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. இத­னால்தான் யானைச் சின்­னத்தில் போட்­டி­யி­ட­வேண்­டு­மென்று ரணில் தரப்பும் அவ்­வாறு போட்­டி­யி­டு­வ­தானால் செய­லாளர் பத­வி­யினை தமது அணி­யி­ன­ருக்கு வழங்க வேண்­டு­மென்று சஜித் தரப்பும் கோரிக்கை விடுத்து வந்­தன.

தற்­போது சின்­னத்தில் ஏற்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக பொதுக்­கூட்­ட­ணி­யான ஐக்­கிய மக்கள் சக்­தியில் தாம் பாரா­ளு­மன்றத் தேர்­தலை சந்­திக்­க­வுள்­ள­தாக சஜித் தரப்­பினர் அறி­வித்­துள்­ளனர். இந்­த­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்சி யானைச்­ சின்­னத்தில் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் என்று அதன் செய­லாளர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நேற்று முன்­தினம் கடிதம் மூலம் அறி­வித்­தி­ருக்­கின்றார். இந்த அறி­விப்­பா­னது இரு அணி­களும் தனித்­த­னி­யாக தேர்­தலை சந்­திப்­ப­தற்கு தயா­ராகி வரு­கின்­ற­மையை புலப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

இத­னை­விட ரணில் அணி­யி­னரும் சஜித் அணி­யி­னரும் தனித்­த­னி­யாக வேட்­பாளர் தெரிவில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்று வரு­கின்­றது. இரு­த­ரப்­பி­னரும் ஒரே சின்­னத்தில் போட்­டி­யிடும் வகையில் ஒற்­று­மைப்­ப­டு­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­ட­போ­திலும் தற்­போது அந்த­நி­லைமை கைவிட்டு செல்­வ­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லாளர் அகில விராஜ் காரி­ய­வசம் தாம் யானைச் சின்­னத்தில் கள­மி­றங்கப் போவ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­வித்­துள்ள நிலையில் சஜித் அணி­யான ஐக்­கிய மக்கள் சக்­தியின் செய­லாளர் மத்­தும பண்­டா­ரவும் தமது அணியும் தனித்து கள­மி­றங்க தயார் என்று அறி­வித்­தி­ருக்­கின்றார். 

ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது இவ்­வாறு பிள­வ­டைந்து பாரா­ளு­மன்­றத் ­தேர்­தலை சந்திக்­கு­மானால், பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற­மு­டி­யாத சூழ்­நிலை நிச்­ச­ய­மாக ஏற்­படும். யானைச் சின்­னத்தில் ரணில் அணி­யி­னரும் தொலை­பேசி சின்­னத்தில் சஜித் அணி­யி­னரும் கள­மி­றங்­கினால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­படும். அத்­துடன் சிறுபான்மை இன மக்­களின் வாக்­கு­களும் சிதறும் நிலையே ஏற்­படும். இதனால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை மிகவும் குறை­வ­டையும் நிலை தோன்றும்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது வேட்­பாளர் நிய­மன விட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின்  தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் பிரதித் தலை­வ­ரான சஜித் பிரே­ம­தா­ச­வுக்­கு­மி­டையில் பெரும் இழு­பறி நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. சஜித் பிரே­ம­தா­ச­வுடன் பெரும்பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்றி­ணந்து அவ­ருக்கு வேட்­பாளர் நிய­மனம் வழங்­கப்­பட வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். இந்­த­நி­லையில் கட்சி பிள­வு­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனாலும் பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வேட்­பாளர் நிய­ம­னத்தை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வழங்­கி­ய­தை­ய­டுத்து ஓர­ள­வுக்கு சுமு­க­நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. 

ஜனா­தி­பதித் தேர்தல் தோல்­வி­யை­ய­டுத்து கட்­சியின் தலைமைப் பத­வியும் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியும் தனக்கு வேண்டும் என்று சஜித் பிரே­ம­தாச கோரிக்கை விடுத்­தி­ருந்தார். இல்­லையேல் அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கப்­போ­வ­தா­கவும் அவர் அறி­வித்­தி­ருந்தார். இந்த சூழ்­நி­லை­யிலும் கட்சி பிள­வு­படும் நிலைமை தோன்­றி­யி­ருந்­தது. ஆனாலும் பெரும் இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வழங்­கப்­பட்­டது. பின்னர் கட்சித் தலைமைப் பத­வியை பெறு­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெற்­ற­போ­திலும் அதற்­கான சந்­தர்ப்பம் சஜித் அணி­யி­ன­ருக்கு கிடைத்­தி­ருக்­க­வில்லை. 

இந்த இழு­பறி நிலை­யில்தான், தற்­போது பாரா­ளு­மன்றத் தேர்தல் அறிவிப்பு வெளி­யா­கி­யது. அதன் பின்­னரே சஜித் தலை­மையில் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­ட­வேண்டும் என்ற கருத்து மேலோங்­கியது. ஆனாலும் தற்­போது இரு­த­ரப்பும் விட்­டுக்­கொ­டுப்­பு­களை மேற்­கொள்­ளாது முரண்­பாட்டை அதி­க­ரித்து வரு­வ­தனால் கட்சி பிள­வ­டையும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஒரு நாட்டில் ஜன­நா­யக விழு­மி­யங்கள் தழைத்­தோங்க வேண்­டு­மானால், எதிர்க்­கட்­சி­யா­னது பல­மா­ன­தாக இருக்­க­வேண்டும். எதிர்க்­கட்சி பல­வீ­ன­ம­டை­யு­மானால் அர­சாங்­க­மா­னது தான்­தோன்­றித்­த­ன­மான செயற்­பா­டு­களில் ஈடு­படும். இதனால் நாட்டில் ஜன­நா­யகம் என்­பது நிச்ச­ய­மாக கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கப்­படும்.

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன பெரும்­பான்மை மக்­களின் பேரா­த­ர­வினைப் பெற்று வெற்­றி­ பெற்­றது. ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ

பக் ஷ தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மூன்றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை மக்கள் வழங்க வேண்­டு­மென்றும் இதன்­மூலம் 19ஆவது திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி, பிர­தமர் உட்­பட அமைச்­சர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர். 

இவ்­வா­றான நிலை­யில்தான் ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­பட்டு தேர்­தலை சந்­திக்­கு­ம் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. எதிர்க்­கட்­சி­யா­னது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பல­மி­ழக்­கு­மானால், அர­சாங்­க­மானது தனது செயற்­பா­டு­களை தான் நினைத்­த­வாறு முன்­னெ­டுக்கும் நிலைமை ஏற்­படும். அந்த முயற்­சி­யா­னது நாட்டு மக்­க­ளுக்கு நன்மை பயக்­கு­மானால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடியும். ஆனால் எந்­த­வொரு அர­சாங்­கமும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெறு­மானால், தான் நினைத்­த­வாறு செயற்படும் நிலைமை உருவாகும்.

எனவே, எதிர்க்கட்சி என்பது எப்போதும் பலமானதாக இருந்தால் தான் நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் தழைத்தோங்குவதற்கு வழிவகுக்கும். அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன் நாட்டுக்கு பாதகமான திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு முட்டுக்கட்டை போடுவதும் பிரதான எதிர்க்கட்சியின் கடமையாகும். 

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை அவர் ஏற்றிருந்தார். ஆனால் சுதந்திரக்கட்சி பிளவடைந்தமையால் தற்போது அந்தக் கட்சி பலமிழந்துள்ளது. அதேபோன்றே ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவடையுமானால் அது நிச்சயமாக பலமிழக்கும்.

எனவே, நாட்டின் நலன் கருதியும் கட்சியின் ஆதரவாளர்களது நலன் கருதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கட்சியின் பிளவை தவிர்க்கும் வகையில்  அரசியல் சுயநலன்களை கருத்தில் கொள்ளாது தற்போதைய நிலையில் செயற்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

(09.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )