கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உலகளாவிய ரீதியில் 3,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், அதன் காரணமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் 108,000 ஐ யும் கடந்துள்ளது.

சீனா:

சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான 40 புதிய நோயாளர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், 22 பேர் நேற்றைய தினம் மாத்திரம் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவத்துள்ளது.

இதனால் சீனாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,119 ஆக உயர்வடைந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் 80,735 ஆக பதிவானது.

ஞாயிற்றுக்கிழமை சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று தொடர்பான 40 நோயாளர்களின் 36 பேர் வைரஸின் மையமான வுஹானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை 58,600 நோயாளிகள் குணமடைந்து வைத்தியாசலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தாலி:

கொரோனாவினால் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நாடு இத்தாலி ஆகும்.

அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் இத்தாலியில் பெரிய பகுதிகள் பல தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு சுமார் 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மலை நிலவரப்படி இத்தாலியில் கொரோனாவினால் 7,375 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 366 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக தனது நாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நாடாக தற்போது இத்தாலி உள்ளது. ‍வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இத்தாலி மேற்கொண்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் மூலமாக பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்திலும் 14 மாகாணங்களில் குறைந்தது 16 மில்லியன் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே  ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

குறித்த பகுதிகளுக்கான இந்த கட்டுப்பாடுகளானது ஏப்ரல் 3 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பதுடன் அதனை கடை பிடிக்காதோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனையும் 206 யூரோ அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா:

அமெரிக்காவில் இதுவரை 34 மாநிலங்களில் குறைந்தது 550 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 70 பேரும் உள்ளடங்குவர். 

அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வொஷிங்டன் மாநிலத்தில் 18 பேரும், புளோரிடாவில் இரண்டு பேரும் மற்றும் கலிபோர்னியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

தென் கொரியா:

தென் கொரியா ஞாயிற்றுக்கிழமை மேலும் 248 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் அங்கு இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 7,382 ஆக உயர்வடைந்துள்ளதாக தென் கொரியாவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று தென்கொரியாவில் பதிவான 248 புதிய வழக்குகளில் 190 பேர் தெற்கு நகரமான டேகுவாவில் பதிவுசெய்யப்ப்டுள்ளது. இதுவரை அக்கு  5,571 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவளை நேற்றைய தினம் ஒருவர் தென்கொரியாவில் உயிரழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 51 ஆக காணப்படுகிறது. 

Photo Credit :Twitter