பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய சமாதானப் பேரவை மற்றும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட கருத்தமர்வு நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் தேசிய சமாதான பேரவையின் மாவட்ட இணைப்பாளர் அன்ரன் மெடோசன் பெரேரா தலைமையில் இடம் பெற்றது.

 குறித்த செயலமர்வில் மடு வலயக்கல்வி பணிமனைக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 15 பாடசாலையைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பாக மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள், சட்ட ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாகச் சட்ட ஆலோசனைகள் மற்றும் நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

குறித்து நிகழ்விற்கு வளவாளர்களாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் , பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக நன்னடத்தை உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் குறித்த செயலமர்வு தொடர்பான சமர்ப்பணங்களைப்  பாடசாலை பொது ஒன்று கூடலின் போது ஏனைய மாணவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.