தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பிலும் காணாமல்போனோர் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் நிலைப்பாடானது மாறுபட்டதாகவே தொடர்ந்தும் காணப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் இத்தகைய நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம்முதல் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ் மிதவாத தலைவர்கள் நான்கு தசாப்தகாலமாக அஹிம்சாவழியில் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன்பின்னர் தமிழ் இளைஞர்கள் மூன்று தசாப்தகாலமாக ஆயுதரீதியில் போராட்டம் நடத்தினார்கள். 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மீண்டும் அஹிம்சாவழியில் தமிழ் மக்களின் தலைமைகள் உரிமைக்கான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் வடக்கு–கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அபிவிருத்தியின் மூலம் தீர்வு காணலாம் என்றும் பொருளாதார ரீதியில் அவர்களை முன்னேற்றுவதன் மூலம் சகல பிரச்சினைகளையும் தீர்க்கலாம் எனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கருத்து கூறிவருகின்றார். இதேபோன்றே யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பிலும் மாற்று நிலைப்பாட்டினை அவர் தெரிவித்து வருகின்றார்.
நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார். இதன்போது ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கான அனுசரணையினை அரசாங்கம் விலக்கிக்கொண்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதார நிலைமையை உயர்த்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். அரசியல்வாதிகள் அரசியலுக்காக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பார்கள். மக்களின் வாழ்க்கை முறையின் அபிவிருத்தியின் ஊடாகவே தீர்வைக் காணமுடியும்.
சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அனைவரும் இந்நாட்டின் பிரஜைகள் என்றவகையில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள் உட்பட பல்வேறு வசதிகள் மக்களுக்கு கிடைக்குமானால் பிரச்சினை இருக்காது. இத்தகைய வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
தமிழ் வர்த்தகர்கள் பெரியளவில் வியாபாரங்களை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் சிங்களவர்கள் முருங்கை இலை உண்ணும் நிலைமை இன்னும் காணப்படுகின்றது. இவ்வாறான பொருளாதார சமத்துவம் இன்மை நீக்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களது சடலங்கள் மீட்கப்படாவிட்டால் அவர்கள் உறவினர்களினால் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தினரிலும் 4000 பேர் வரையில் காணாமல்போயுள்ளனர். ஒருசில சம்பவங்களை பொதுப்படையாக மாற்றுவதற்கு முயல்வது தவறான செயற்பாடாகும். காணாமல்போனோர் விவகாரத்தை மறந்து செயற்படவேண்டும். காணாமல் போய்விட்டனர், காணாமல் போய்விட்டனர் எனக்கூறுவதில் பயனில்லை. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி அது உறுதியானால் மரணச்சான்றிதழ்களை வழங்குவதற்கும் நாம் தயாராக உள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு– கிழக்கில் இனவாத ரீதியிலேயே வாக்குகள் வழங்கப்பட்டன. அதனைத் தவிர ஏனையபகுதிகளில் எமக்கு பேராதரவு கிடைத்திருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இத்தகைய கருத்துக்கள் அரசியல் தீர்வு தொடர்பிலான அவரது மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதில் பயனில்லை. பெரும்பான்மையின மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. வடக்கு–கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அபிவிருத்தியின் மூலம் தீர்வு காணமுடியும் என்று ஜனாதிபதி இதற்கு முன்னரும் கருத்து கூறியிருந்தார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று முதல் விஜயமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து பேசியபோது 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தின் அவசியம் குறித்து இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். ஆனாலும் அந்த சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது மாற்று நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியிருந்தார்.
வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் பேரழிவுகளைச் சந்தித்திருந்தனர். உயிர்களையும் உடைமைகளையும் இழந்து அநாதரவான நிலைக்கு வந்த இந்த மக்கள் தமக்கு அரசியல் தீர்வின் அவசியம் குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற சகல தேர்தல்களிலும் சலுகை அரசியல் தமக்கு வேண்டாம் என்றும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்திவந்துள்ளனர்.
வடமாகாணசபைத் தேர்தலாக இருக்கலாம். கிழக்கு மாகாணசபைத் தேர்தலாக இருக்கலாம். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களாக இருக்கலாம். பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம். தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவாக வலியுறுத்தியே வந்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் தமது அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வின் அவசியத்தை வலியுறுத்தியும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வை வேண்டியுமே வடக்க–கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் பெரும்பான்மை மக்களின் பேராதரவினைப் பெற்று வெற்றிபெற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ சிறுபான்மையின மக்களின் விருப்புக்கு மாறாக செயற்பட முனைவது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது. உண்மையிலேயே பெரும்பான்மை மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இவ்வாறான ஆதரவைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காண ஜனாதிபதி முன்வருவாரேயானால் அதன்மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களையும் அவர் வெல்ல முடியும்.
பெரும்பான்மையின மக்களின் ஆதரவின்றி நாட்டில் அரசியல் தீர்வைக் காண்பதென்பது சாத்தியமற்ற விடயமேயாகும்.வரலாறு அதனை உணர்த்தி வந்துள்ளது. பண்டா– செல்வா ஒப்பந்தம், டட்லி –செல்வா ஒப்பந்தம் என்பன கிழித்தெறியப்பட்டமைக்கும் இதுவே காரணமாக அமைந்திருந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையின மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு தெளிவான தீர்ப்பினை வழங்கியிருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண ஜனாதிபதி முயற்சிப்பாரேயானால் அந்த மக்களின் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும்.
இதேபோன்றே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியதன் அவசியமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் அதனை நிறைவேற்றாது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. காணாமல் போனோர் விவகாரத்திலும் மாற்று நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் உரிய விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க ஜனாதிபதி முன்வரவேண்டும். தற்போதைய நிலையில் ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரேயானால் அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.
பெரும்பான்மையின மக்களின் வாக்குகளில் வெற்றிபெற்ற ஜனாதிபதி தற்போதைய நிலையில் சிறுபான்மையின மக்களின் மனங்களை வெல்லுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும். ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் சகல மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக செயற்படுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
எனவே மாற்று நிலைப்பாடுகளை தவிர்த்து சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் அவர்களின் மனங்களை வெல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் நாடு முன்னேறும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(07.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM