(ஆர்.யசி)
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டார். இப்போது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற புதிய வாக்குறுதிகளை கொடுக்கின்றார். ஆனால் இவை அனைத்துமே பொய்யானவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டு வருகின்ற நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் வெகுவிரைவில் தீர்க்கப்படும். அதில் மக்கள் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. இப்போது கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன என்பதற்காக கட்சி பிளவுபடும் என்ற எண்ணப்பாடு கொள்ளத் தேவையில்லை. ஜனநாயக கொள்கை உள்ள கட்சியாக நாம் சகலரது கருத்துகளுக்கும் செவிமடுக்கின்றோம்.
இம்முறை தேர்தலில் கூட்டணியாக பல கட்சிகளை இணைத்துக்கொண்டு களமிறங்குவோம். அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் வாக்குகளை கேட்டு நிற்கின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் அவரது அணியினரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதை இன்று மறந்துள்ளனர்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ மக்களுக்கு கூறிய விடயங்கள் இன்று கைவிடப்பட்டுள்ளன. கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன. விலை குறைப்பு, சம்பள கொடுப்பனவுகள், வேலைவாய்ப்புகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும், கடன்கள் அடைக்கப்படும் என கூறினார். ஆனால் இவற்றில் ஒன்றேனும் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆட்சியின் போதும் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இவர்களை நம்புவதில் எந்தப் பயனும் இல்லை. நாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டுக்கான கடனை அடைத்துள்ளோம். பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்தும் நாட்டினை கடன் நெருக்கடிக்குள் தள்ளும் சூழலை உருவாக்கவில்லை. ஆனால் இன்று அவ்வாறல்ல, மிகக் குறுகிய காலத்தில் அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்று இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
எனவே, இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த நாட்டினை இராணுவ ஆட்சிக்குள் தள்ள முயற்சிக்கும் தலைவர்களை நம்பி ஏமாறாது ஜனநாயகத்தை பலப்படுத்தும் அணியின் பக்கம் மக்கள் கைகோர்க்க வேண்டும். நாம் சகல இன மத மக்களின் கட்சிகளையும் உள்ளடக்கி சகல மக்களையும் பாதுகாக்கும் ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்றோம். மாறாக ராஜபக் ஷவினரின் தனி சிங்கள பெளத்த கொள்கை என கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களை அடக்குமுறைக்குள் தள்ளும் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் செய்யவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM