யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் சமரின், 114 ஆவது போட்டி 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில்  நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் நாகேந்திரராஜா சௌமியன் முதலில் களத்தடுப்பை தேர்வு  செய்தார்.

அதற்கிணங்க களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 57.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. எஸ்.சாரங்கன் 25,  வி.விஜஸ்காந்த் 30, சஞ்சயன் 20, ஏ.நிதுசன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.  

பந்துவீச்சில் கே.கரிசன் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், யோ.விதுசன் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் தமது முதலாவது  இனிங்ஸினை ஆட ஆரம்பித்த சென்.ஜோன்ஸ்  ஏ.சுகேதனின் 49 ஓட்டங்களின் உதவியுடன் முதல்நாள் ஆட்டம் முடியும் போது  3 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. களத்தில் தி.வினோஜன் 19 ஓட்டங்களுடனும்  தெ.டினோசன் 24 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும்  27 ஓட்டங்களுடன் வினோஜன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய,  தெ.டினோசன் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் கே.சபேசன் 43, ஏ.அபிசேக் 25, எஸ்.அன்ரன் 24, எஸ்.பிரணவன 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தீ.விதுசன் 5 விக்கெட்களையும், வி.விஜஸ்காந்த் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

141 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த யாழ்ப்பாணம் மத்திக்கு மீண்டும் சோகம், முதல் இரண்டு விக்கெட்களையும் 6 ஓட்டங்களுக்கு இழந்தது. 26 ஓட்டங்களைப் பெற்றபோது  3 ஆவது விக்கெட்டையும் இழந்தது. அதன் பின்னர் சற்று பொறுமை காத்து  இரண்டாம் நாள் முடிவின் போது  51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. களத்தில் சஞ்சயன் 15  இந்துஜன் 13 ஓட்டங்களுடன் உள்ளனர்.

ஆட்டத்தின் இறுதி நாள் ஆட்டம் நாளை 7 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்  சென்.ஜோன்ஸ் அணி வெற்றியொன்றை பதிவு  செய்யும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.