சிலாபம், முன்னேஸ்வரம் நீர் வழங்கல் திட்டமிடல் நிலையத்திற்கு அருகில் இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் குறித்த பகுதியில் சோதனையை மேற்கொண்ட போது சிலாபம் -குருணாகல் வீதியிலிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் தொழில் புரியும் குறித்த உயிரிழந்த நபர் இலங்கைக்கு திரும்பியிருந்த நிலையில் நேற்று இரவு மரண வீடொன்றிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை சிலாபம் நோக்கி வருகையிலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலும், குறித்த நபரின் சடலத்தில் இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இன்று காலை ஏதாவது வாகனம் மோதியோ அல்லது யாராவது தாக்கியோ இறந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வைத்திய பரிசோதனைகளுக்கு பிறகே மரணத்துக்கான காரணம் தொடர்பில் தெரிய வரும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலத்தில் உள்ள இரத்த காயங்கள் காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா எனவும் பொலிஸார் சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.