(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட  10 சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று மாலை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

கடந்த  2016 ஆம் ஆண்டு மார்ச் 29  ஆம் திகதி மற்றும் மார்ச்  31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிக்ழ்ந்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த  புதனன்று புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, சி.ஐ.டி.யின் கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

எவ்வாறாயினும் இந்த ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேரை சி.ஐ.டி. சந்தேக நபர்களாக  பெயரிட்டுள்ள நிலையில், அவர்களைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் கோரியது. 

எனினும் அதில் 10 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்த மத்திய வங்கி பொதுக் கடன் திணைக்களத்தின் முன்னாள் பிரதானி புத்திக சரத் சந்ரவுக்கு எதிராக பிடியணையையோ அறிவித்தல் ஒன்றினையோ பிறப்பிக்க போதுமான காரணிகள் இல்லை என அதனை நிராகரித்த நீதிமன்றம், முதல் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு அடுத்த வழக்குத் தவணையில் மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பித்தது. 

இந் நிலையிலேயே ஏனைய 10 சந்தேக நபர்களையும் கைது செய்ய பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.