(ஆர்.விதுஷா) 

சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு எதிர்தரப்பினருடன்  இணைந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்களித்த மக்களை காட்டிக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறான வங்குரோத்து அரசியலை இல்லாதொழிக்கும் நடவடிக்கைளை  முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியாவிற்கான விஜயம் உலக நாடுகள் மத்தியில் எமது நாட்டின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள  இழுக்காக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர்  மேலும் கூறியதாவது ,

ஐ.தே.கவின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய  என்னுடைய தலைமையில் ஏனைய கட்சிகiயும்  இணைத்துக்கொண்டு நாட்டு மக்களை பாதுகாக்க கூடிய  கூட்டணியாகவே  ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம். இந்த கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

எமது நாடு சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் அனைத்து இன  மக்களும் பௌத்த தர்மத்திற்கு இணங்க ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதுடன், ஏனைய இன மற்றும் மதத்தவர்களையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.