ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் மிக அதிகளவில் கரிசனை செலுத்திவருவதுடன் இலங்கையானது பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுக்க உரிய வேலைத்திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றன.
அதுமட்டுமன்றி இலங்கை 30/1 பிரேரணையிலிருந்து விலகியமை தொடர்பில் கவலை வெளியிட்டிருக்கின்ற சர்வதேச சமூகம் அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் பொறுப்புடமையுடன் செயற்படவேண்டுமென்றும் கோரிவருகின்றன.
இலங்கை விவகாரம் மற்றும் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் மனித உரிமைகள் காப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது இலங்கையின் பல பாகங்களில் செயற்பட்டுவரும் 15 இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தமக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிப்பதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பதாக அதில் பங்கேற்றிருந்த மனித உரிமைகள் ஆர்வலர்களிடம் தமது திட்டம் என்ன என இலங்கை பாதுகாப்பு தரப்பு கேட்டு துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இலங்கை மீதான சர்வதேச பார்வை மற்றும் ஜெனிவாவுக்கான பயணம் இடம்பெறாமல் போகலாம் என மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் அச்சம் தெரிவித்தார் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது இலங்கை தொடர்பான புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி அரச சார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் செயலகம் சிவில் பொலிஸ் உட்பட 12 முக்கிய அமைப்புக்களை ராஜபக் ஷ அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக ஊடகவியலாளர்கள் பல தடவைகள் அடையாளம் காணப்படாதவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அடையாளம் காணப்படாதவர்கள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளனர். பாதுகாப்பு தரப்பினர் ஊடக அலுவலகங்களில் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருக்கின்றது.
இவ்வாறு இலங்கை தொடர்பாக ஒரு நீண்ட அறிக்கையை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விபரமாக வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துபார்த்து அவற்றை சரிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகின்றது. தொடர்ச்சியாக இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கைமீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. இதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அரசாங்கம் உள்ளக ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் நீதியை நிலைநாட்டும் பட்சத்தில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழாது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை யில் இலங்கை தொடர்பான விடயங்கள் கடந்த வாரம் ஆராயப்பட்டபோது மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புசபை மற்றும் சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கடும் கரிசனையை வெளிப்படுத்தியிருந்தன. முக்கியமாக இலங்கையானது 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகியமை மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் அரசாங்கம் வாக்குறுதிகளிலிருந்து வெளியே செல்லக்கூடாது என்றும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே தற்போது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இலங்கையிலுள்ள நெதர்லாந்து நாட்டின் தூதுவர் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது இலங்கையானது ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகியமை எந்தவொரு வகையிலும் நாட்டுக்கு நன்மை தரப்போவதில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவரேனும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியிருந்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியது அவசியம். இலங்கையில் நிலையான சமாதானத்தை அடையவேண்டுமெனில் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். யுத்தகாலத்தில் ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. நீண்டகாலமான இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காணும் நோக்கில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் சம்பந்தன் நெதர்லாந்து நாட்டு தூதுவரிடம் எடுத்துக்கூறியிருக்கின்றார்.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் பல்வேறு தாமதங்களும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தன்மையும் நீடித்து வருகின்ற சூழலில் சர்வதேச சமூகம் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. உள்ளக ரீதியில் இலங்கைக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாததன் காரணமாகவே அந்த மக்கள் சர்வதேசத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். கடந்த பத்து வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுபோன்ற தோற்றப்பாடு காணப்பட்டாலும் அவை இறுதி வெற்றியை நோக்கி நகரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களோ தொடர்ச்சியாக தமக்கான நீதியை வழங்குமாறு கோரி போராடி வருகின்றனர். இவ்வாறான சூழலிலேயே இலங்கை அரசாங்கமானது 30/1 என்ற ஜெனிவா பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. இதுவரைகாலம் அரசாங்கம் கடப்பாட்டுடன் இருந்ததால் ஏதாவது நடக்கும் என்று நம்பியிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது அரசாங்கம் அனுசரணையிலிருந்து விலகியுள்ளதால் தற்போது எதுவுமே நடக்காது என்ற நிலைப்பாட்டிலேயே சர்வதேச சமூகம் தமக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதனாலேயே சர்வதேச சமூகமும் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் ஆழமாக அவதானம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 27ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றபோது அதில் பங்கேற்று உரையாற்றிய பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தன.
பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் இவ்வாறு கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தன. அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் இதன்போது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதியை வழங்கவேண்டும் என்பது தொடர்பாக ஆழமாகவும் விரைவாகவும் சிந்திக்கவேண்டியிருக்கிறது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு பின்னர் யார் அரசாங்கம் அமைத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராயவேண்டியது அவசியமாகும். சர்வதேச சமூகம் தொடர்ந்தும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருப்பது நாட்டுக்கு ஆரோக்கியமாக அமையாது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையக்கூடிய வகையிலான பொறிமுறையை முன்னெடுத்து அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இலங்கையின் பிரஜைகளே என்பதை கவனத்தில் கொண்டு அவர்களின் கவலையைப்போக்குவதற்கும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் உள்ளக ரீதியில் பொறுப்புக் கூறலை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித் திருந்தது. அந்த அறிவிப்பு தொடர்பிலும் சர்வதேச தரப்பில் பாரிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகமான, திருப்தியளிக்கக்கூடிய வகையிலான பொறிமுறை ஊடாக நீதியை நிலைநாட்டவேண்டும்.
(06.03.2020 வீரகேசரி நாழிதளின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM