நல்லிணக்க செயன்முறைகள் மீதான உறுதிப்பாட்டை சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்துதல் 

Published By: Digital Desk 4

05 Mar, 2020 | 10:24 PM
image

- கலாநிதி ஜெஹான் பெரேரா

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நிகழ்த்திய உரையின் முக்கியத்துவத்தை கவனிக்கத் தவறக்கூடாது. 

2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பேரவையின்  தீர்மானம் 30-1 க்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகும் பிரச்சினை பெரும் கவனத்தை ஈர்த்ததன் பின்னணியில் அவரது உரைக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்துக்கும் நீதிக்குமான செயன்முறையொன்றை வகுத்த அந்த தீர்மானத்திற்கு அன்றைய அரசாங்கம் (சர்வதேச சமூகத்திற்கு நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் முகமாகவே) இணை அனுசரணையை வழங்கியது. 

அதற்கு முன்னரான 5 வருடங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அறிவுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. இரு சந்தர்ப்பங்களில் இலங்கை வாக்களிப்பில் வெற்றி காண்பதற்கு கடுமையான முயற்சியை மேற்கொண்ட போதிலும் தோல்வியை சந்தித்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு 2015 அரசாங்கம் வெளிக்காட்டிய விருப்பம் காரணமாக சர்வதேச நல்லெண்ணத்தையும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசத்தையும் இலங்கையினால் பெறக்கூடியதாக இருந்தது. முதலில் 2 வருடகால அவகாசமும் பிறகு இன்னொரு 2 வருடகால அவகாசமும் இலங்கைக்கு வழங்கப்பட்டது. 

வெளியுறவு அமைச்சர் குணவர்த்தனவின் உரையில் 3 முக்கிய பிரச்சினைகள் விளக்கமாக தெரியப்படுத்தப்பட்டன. இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது முதலாவது பிரச்சினை. அதாவது, ஐக்கிய நாடுகள் ஒழுங்கு முறையுடனும் அதன் பொறிமுறைகளுடனும் உறவுகளை துண்டித்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. தேசிய நல்லிணக்கத்துக்கான புதிய கட்டமைப்பிற்குள் இலங்கை அரசாங்கம் ஐ.நா. ஒழுங்கு முறையின்; ஆலோசனையையும் தொழிநுட்ப ஆதரவையும் தொடர்ந்து பெறும் என்பதுடன் ஐ.நா. நிபுணர்களின் விஜயங்களையும் வரவேற்கும் என்பதையும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜெனீவாவில் தெரிவித்தார். 

' ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் செயற்படும் தேவையேற்படுகின்றதன் பிரகாரம் ஐ.நா.வின் அமைப்புக்களின் உதவியை இலங்கை பெறும். உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு இசைவான முறையில் ஆற்றல் மேம்பாட்டிற்கும் தொழிநுட்ப உதவிக்குமான பொறிமுறைகளும் கிரமமான மனித உரிமை ஆணைகளும் இவற்றில் அடங்கும். " என்று குணவர்த்தன கூறினார். 

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கப்போகும் வாக்காளர்களை மனதில் கொண்டு செயற்பட விரும்பிய அரசாங்கத்தின் தேவை வெளியுறவு அமைச்சரின் உரையில் இரண்டாவது முக்கிய காரணியாக அமைந்தது.  வெளிநாட்டு படையெடுப்புகளுக்கெதிரான போராட்டம் மற்றும் காலனித்துவ ஆட்சிக்கான எதிர்ப்பு ஆகியவற்றை பொறுத்தவரை இலங்கைக்கு இருக்கும் நீண்டகால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு எதிராக உணர்வுடன் பேச முன்வருபவர்களுக்கு பொது மக்களிடமிருந்து பெருமளவு அரசியல் ஆதரவு கிடைக்கிறது என்பதுடன் அவர்கள் நாட்டை நேசிக்கும் தலைவர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள். 

ஆனால், உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டு விவகாரங்களிலும் நல்லதையும் கெட்டதையும் காணுகின்ற லிபரல் போக்குடைய தலைவர்களை நோக்குகையில் அவர்கள் எந்தத் தரப்பிலும் கடுமையான ஒரு உணர்வு பூர்வமான நிலைப்பாட்டை எடுப்பவர்கள் அல்ல. முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களை அவ்வாறு நோக்கிய நாட்டு மக்கள் சர்வதேச சமூகத்திடம் இருந்து வருகின்ற நெருக்குதல்களை எதிர்த்து நிற்பதில் .இந்த லிபரல் தலைவர்கள் மிகவும் பலவீனமாக இருப்பதாக நோக்குகிறார்கள். 

பல்லின சமூகம் 

மேலும், தொடர்ந்து நெருங்கிய தொடர்ப்பிணைப்புகளுக்கு உள்ளாகி வரும் இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் மக்களின் சிந்தனை மீது பெரும் செல்வாக்கை கொண்டிருக்கின்றன. அதனால் சர்வதேச விவகாரங்களில் கடைப்பிடிக்கப்படுகின்ற வஞ்சகத்தனமான தராதரங்களை பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

அரசுகளின் எதிரிகளை கொலை செய்வதற்கு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) அனுப்பப்படுவதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மோதல்களின் பக்க விளைவுகளினால் அப்பாவி குடிமக்கள் பலியாவதை அவர்கள் காண்கிறார்கள். ஏனைய நாடுகள் மீதான படையெடுப்புகளினால் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போவதை பார்க்கிறார்கள். அதனால் வேறுபட்ட முறையில் இலங்கை ஏன் நடத்தப்படுகிறது என்று அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். 

இத்தகைய பின்புலத்திலே, போரொன்றில் வெற்றி பெற்ற இராணுவத்தையும் அரசியல் தலைவர்களையும் பாதுகாப்பதற்கு உறுதி பூணுகின்ற ஒரு அரசாங்கம் சர்வதேச நெருக்குதல்களுக்கு அடிபணிகின்றதாக தோன்றுகின்றவர்களை விடவும் கூடுதலான அளவுக்கு வாக்காளர் மத்தியில் செல்வாக்குக் கொண்டதாக விளங்கும். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களின் ஆதரவை பெறுவதற்கான நெருக்குதல் குறையும் போது இத்தகைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் தளர்வொன்று ஏற்படக்கூடும். 

இந்தப் பின்னணியில் இலங்கை பல இனத்தவர்களையும் பல மதங்களை பின்பற்றுவோர்களையும் கொண்ட ஒரு நாடு என்று வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கின்றமை வெளியுறவு அமைச்சரின் ஜெனீவா பேச்சின் மூன்றாவது முக்கிய அம்சமாகும். தங்களது அவதானிப்புகளில் நியாய பூர்வமாகவும் அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டும் சிந்திக்கின்றவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இலங்கை சனத்தொகை வேறுபட்ட இனக் குழுமங்களையம் மதங்களையும் கொண்டது. 

அவர்கள் முழு சனத்தொகையில் 30 சதவீதத்தினராக இருக்கின்றனர். இது ஒரு கணிசமான தொகையாகும். ஆனால், இலங்கையின் சில அரசியல் தலைவர்கள் இந்த யதார்த்தத்தை பகிரங்கமாக ஒத்துக்கொள்ள விரும்பவில்லை. பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆட்சி அமைப்பொன்று ஆட்சி ஒழுங்குமுறையை தங்களது கலாசாரத்தையும் விழுமியங்களையுமே பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒன்றாக நோக்குகிறார்கள். 

இதை இந்த அரசியல்வாதிகளும் அறிவார்கள். அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் அபிவிருத்தி குன்றிய நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இனக்குழும பெரும்பான்மை தேசிய வாதம் வளர்ந்து வருகின்ற தற்போதைய தருணத்தில் இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும் . இது இலங்கைக்கு மாத்திரம் உள்ள பிரத்தியேக பிரச்சினையல்ல உலகளாவிய பிரச்சினையாகும் . 

இலங்கையை நோக்கி சர்வதேச அரங்கொன்றில் முன்னென்றும் இல்லாத வகையில் ஊடகங்களின்  கவனம் திசைதிருப்பப்பட்டிருக்கின்ற நிலையில் ஜெனீவாவில் ஐ . நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வெளியுறவு அமைச்சர் குணவர்தன தனது உரையை பின்வருமாறு கூறி நிறைவு செய்தார்:

' இலங்கை அரசாங்கத்தை விடவும் இலங்கையில் உள்ள பல்லின , பன்மொழி , பல்மத  மற்றும் பல் கலாசார மக்களின் நல்வாழ்வை தங்களது இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டவர்கள் வேறு யாருமில்லை . இந்த செயல் நோக்கமே விரிவான நல்லிணக்கத்தையும் எமது மக்களுக்கான நிலையான சமாதானம் மற்றும் சுபீட்ச யுகமொன்றையும் நோக்கிய எமது பற்றுதியை வழிநடத்துகிறது.  

அதனால் இலங்கையின் உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் யதார்த்த பூர்வமானவையாகவும் நடைமுறைப்படுத்தக்கூடியவையாகவும் அமையுமென்பது எமது உறுதியான நம்பிக்கை. இந்த சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற எமது பிரச்சினைகளில் பங்கும் ஈடுபாடும் கொண்ட சகலரையும் இந்த முயற்சியில் இலங்கைக்கு ஒத்துழைக்குமாறு  அழைப்புவிடுக்கின்றோம் . " 

குணவர்தனவின்  இந்த அழைப்பு நேர்மறையான பிரதிபலிப்புகளை வேண்டி நிற்கிறது  .

-முன்னுரிமைக்குரிய பிரச்சினைகள் - 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக்கொண்ட செயல் அந்தத் தீர்மானத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு உறுதியளித்த கடப்பாடுகளின் தன்மையில் மாற்றத்தைக் கொண்டு வருமா என்பது இச் சந்தர்ப்பத்தில் முக்கியமாக எழுகின்ற கேள்வியாகும். 

வெளியுறவு அமைச்சர் குணவர்த்தன வெளிப்படுத்திய நிலைப்பாடுகளின் அடிப்படையில் நோக்குகையில் மேற்குறிப்பிட்ட கடப்பாடுகள் மக்களினால் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அரசியல் ஆணையினதும் நாட்டின் அரசியலமைப்பினதும் வரையறைக்குள் அமையும் பட்சத்தில் அவற்றை அரசாங்கம் நிறைவேற்றும் என்பதே இன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டினால் வலியுறுத்தப்பட்தைப் போன்று சர்வதேச தராதரங்களுக்கு இசைவாக ஜெனீவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான எந்த சாத்தியமுமில்லை என்பதை இது  உணர்த்துகிறது. 

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முன்னர் நடாத்தப்பட்ட ஆணைக்குழு விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விதப்புரை செய்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் அரசாங்கத்தின் யோசனையை பச்லெட் நிராகரித்திருக்கிறார்.

களத்தில் பயன்தரக்கூடிய தேசிய நல்லிணக்கத்துக்கான கட்டமைப்பொன்றை அமைப்பது இலங்கை அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக இருக்கும். மக்களின் வாழ்வில் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையைக்கொண்ட வேறுபல அம்சங்களை உள்ளடக்கியதாக தேசிய நல்லிணக்கத்துக்கான கட்டமைப்பு அமைய வேண்டும். தங்களது உடைமைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களது  அன்புக்குரியவர்களையும் இழந்து பௌதீக ரீதியாகவும்; உணர்வு பூர்வமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பொறுப்புடன் கூடிய சில நடவடிக்கைகளை மேற்கொள்வது முதலாவதும் முக்கியமானதுமான பணியாகும். 

இரண்டாவதாக வெளியுறவு அமைச்சர் உறுதி கூறியதன் பிரகாரம் பல இன, பல மொழி, பலகலாசார மற்றும் பல மத சமூகங்களைக் கொண்ட நாட்டின் தேவைகளுக்கு இசைவான முறையில் ஆட்சிமுறை கட்டமைப்புக்களில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஏனைய பிரச்சினைகளை சற்று காலம் தாழ்த்தி கையாளலாம்.  இவற்றில் மிகவும் சிக்கலானது போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பிரச்சினையாகும். அந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை தற்போதைய தருணத்தில் அதைக் கையாளுவதற்கு அரசியல் துணிவாற்றலோ அல்லது பொதுஜன மக்களின் ஆதரவோ இல்லை. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30-1 க்கு இணங்கி இலங்கை எந்தளவுக்கு செயற்பட்டிருக்கிறது என்ற பிரச்சினை ஜெனீவாவில் அடுத்த வருடக் கூட்டத்தொடரின் போதே விவாதத்துக்கு வரும். அரசாங்கம் அதன் இணை அனுசரணையை வாபஸ் பெற்ற போதிலும் 2015 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துகின்ற விவகாரம் நிச்சயம் ஆராய்வுக்கு வரும். 

தேசிய நல்லிணக்க செயன்முறைகளை பலப்படுத்தக்கூடிய முறையில் மக்களின் நல்வாழ்வு மற்றும் மனித உரிமைகள் மீது நேரடித் தாக்கத்தை செலுத்துகின்ற கடப்பாடுகளில் பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்குமென்பதை வெளிக்காட்டுவது நாட்டின் சர்வதேச நற்பெயருக்கு முக்கியமானதாக அமையும். வெளியுறவு அமைச்சர் குணவர்த்தனவின் உரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரக்க ஒலித்தது. 

' இந்தத் தீர்மானத்திற்கான இணை அனுசரணையிலிருந்து விலகுகின்ற போதிலும் நிலைபேறான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய - பொறுப்புக்கூறல் இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பற்றுறுதியை கொண்டதாகவே இருக்கும்." என்று அவர் கூறினார். 2021 மார்ச் இல் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானம் 30-1 இன் அத்தியாயத்தை மூடுவதறகு தேசிய நல்லிணக்க செயன்முறைகளை நோக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கிறது என்று பேரவையின் உறுப்பு நாடுகளை நம்ப வைக்க வேண்டிய தேவையிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43