நிர்பயா விவகாரத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிற்கு  மார்ச் 20 ம் திகதி தண்டனையை நிறைவேற்ற வேண்டும்  என புதுடில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்துள்ளதை தொடர்ந்து புதுடில்லி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நால்வரையும் தூக்கிலிடுவதற்கான  புதிய திகதியை அறிவிக்குமாறு கோரி இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்தபின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மார்ச் மாதம் 20 ம் திகதி காலை 5.30 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூன்று முறை தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான  திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2012 ம் ஆண்டு புதுடில்லியில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த நிர்பயா பாலியல்வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தமை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் கடும் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.