( மயூரன் )

ஜனாதிபதி தமக்கு தந்த  வாக்குறுதியை நிறைவேற்றாமையால் தாம் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இன்பம் தலமையில் வலி.வடக்கு மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பில் முகாம் தலைவர்கள், மற்றும் முகாங்களில் உள்ள மக்களுடனான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை  யாழ்பாடி விடுதியில் நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் அங்கு இடம்பெற்றிருந்தது.

 இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களினாலேயே இவ்வ உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வலி.வடக்கு மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்துகொள்ள வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களுடைய முகாமிற்கும் வந்திருந்தார். 

அங்கு வந்த அவர் இன்னும் 6 மாத காலத்திற்குள் உங்களை மீள்குடியேற்றம் செய்வேன் என்று கூறியிருந்தார். அவருடைய அந்த வாக்குறுதியினை வலி.வடக்கு மக்கள் முழுமையாக நம்பியிருந்தோம்.

இருந்த போதும் இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது. ஜனாதிபதி வழங்கிய 6 மாத கால அவகாசம்  20 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இருப்பினும் எங்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான எந்த தகவல்களும் இல்லை. 

மாறான ஆயுதக்கிடங்கு வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டும், கோட்டல்கள், விளையாட்டு மைதானங்கள், கால்நடை பண்ணைகள் என்பவற்றினை அமைத்தும் எங்களுடைய நிலத்தினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். 

இது போதாது என்று இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எங்களுடைய வீடுகள் இடிக்கப்படுவது மட்டுமல்லாது, காணிகளுக்குள் உள்ள கற்களையும் இராணுவத்தினர் அகழ்ந்தெடுத்துச் செல்லுகின்றார்கள். 

ஆனால் நாங்கள் முகாம்களில் தொடர்ந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். எங்களுடைய பிள்ளைகள் முகாங்களில் இருந்தும் கற்று தேர்ச்சி பெற்றுக் கொள்கின்ற போதும், முகாம் பிள்ளைகள் என்ற அவர்கள் மீது சூட்டப்படும் பட்டம் இன்னும் அழிவடையவில்லை. 

இப்போது வேறு காணி தருகின்றோம் அங்கு சென்று தற்காலிகமாக குடியேறுங்கள் என்று சொல்லுகின்றார்கள். எங்களுக்கு என்று பரந்த காணிகள் உள்ள போதும் நாங்கள் ஏன் வேறு ஒருவருடைய காணிகளுக்குள் சென்று குடியேற வேண்டும். 

எங்களை மீள்குடியேற்றுங்கள் என்று கோரி பல பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள், தடைகளைத் தாண்டியும் எத்தனையோ தொடர்ச்சியான போராட்டங்களை நாங்கள் நடாத்தி வந்திருந்தோம். 

ஆனால் நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியினை நம்பி எங்களுடைய போராட்டத்தினை கைவிட்டு மீள்குடியேற்றத்தின் கனவுடன் காத்திருந்தோம். இப்போது நாங்கள் நன்றாக ஏமாற்றப்பட்டுவிட்டோம். 

இனியும் எவருடைய கருத்துக்களையும் எங்களால் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருக்க முடியாது. எங்களுடைய நிலத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையேன் இங்கேயே உயிரை விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். 

வலி.வடக்கு தையிட்டியினை சேர்ந்த வன்னியசிங்கம் பிரபா என்பவர் முன்வந்து தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார். 

தான் முதலில் போராட்டத்தினை தொடக்கி வைப்பதாகவும் கூறியுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி தனது போராட்டத்தினை தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மீள்குடியேற்றம் சாத்தியப்படும்வரைக்கும் அவர் மேற்கொள்ளவுள்ள தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கும் நாங்கள் தயாரா உள்ளோம். 

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் ஏனைய மாவட்டங்களிலும் காணிகளை இராணுவத்தினரிடம் இழந்து இடம்பெயர்ந்து வாழுகின்ற மக்களை ஒன்று திரட்டுவதாக உறுதியளித்துள்ளது. 

இந்நிலையில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும், நண்பர்கள், உறவினர்களுடைய வீடுகளிலும் தங்கியுள்ளவர்கள் மட்டுமல்லாமல், ஏனைய மக்களும், பொது அமைப்புக்களும், சமூக அமைப்புக்களும் எங்களுடைய தொடர்ச்சியான போராட்டத்திற்கு உறுதுணை வழங்குமாறும் கோட்டுக் கொள்ளுகின்றோம் என்றனர்.